இன்றைய இறைமொழி. செவ்வாய், 6 பிப்ரவரி 2024. மூதாதையர் மரபு

இன்றைய இறைமொழி
செவ்வாய், 6 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5-ஆம் வாரத்தின் செவ்வாய்
1 அரசர்கள் 8:22-23, 27-30. மாற்கு 7:1-13

மூதாதையர் மரபு

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் பத்து. ஆனால், இக்கட்டளைகள் காலப் போக்கில் பல்வேறு விதிமுறைகள், விளக்கங்கள் என மாறி, இயேசுவின் சமகாலத்தில் 613 மரபுச் சட்டங்களாக விளங்கின. உண்ணும் உணவு, வழிபாடு, தூய்மைச் சடங்கு, குடும்ப உறவு உள்ளிட்ட பல தளங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வரைமுறைகளை இவை வழங்கின.

இவற்றைக் கடைப்பிடிப்பதில் பரிசேயர்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள். மற்றவர்களோ இவற்றைப் பற்றிக் கவலைப்படவோ, அல்லது இவற்றைத் தெரிந்துகொள்ளவோ முயற்சி செய்யவில்லை. இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சீடர்கள் தீட்டான, அல்லது கழுவாத கைகளால் உணவு உண்பதைக் காண்கிற பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்களைப் பற்றி இடறல்படுகிறார்கள். அவர்கள் இடறல்படுவதற்குக் காரணங்கள் மூன்று: (அ) இவர்கள் சட்டங்களை மீறுகிறார்கள். இவர்களைக் கண்டிக்காததால் இவர்களுடைய போதகரான இயேசுவும் சட்டத்தை மீறுகிறார். (ஆ) இச்சீடர்கள் சமய அடிப்படைச் சட்டங்களே கற்காத அறியாமையில் இருக்கிறார்கள். (இ) இயேசுவை ஒரு ரபி அல்லது போதகர் என ஏற்றுக்கொள்ள முடியாது.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இவர்களுடைய இச்செய்கையைப் பற்றி இயேசுவிடம் முறையிடுகிறார்கள். இயேசுவோ, அவர்களுடைய கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல், ‘மூதாதையர் மரபு’ மற்றும் ‘கடவுளின் கட்டளை’ ஆகியவற்றுக்கான வேறுபாட்டை எடுத்துரைத்து, மரபுகளைப் பற்றிக்கொள்வதை விடுத்து, கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என அறிவுறுத்துகிறார். மேலும், இறைவாக்கினர் எசாயாவின் காலத்திலேயே இந்தப் பிறழ்வு இருந்ததை அவருடைய இறைவாக்கை மேற்கோள் காட்டி எடுத்துரைக்கிறார்.

கடவுளின் கட்டளையை மனித மரபு மாற்றிவிடுகிறது என்பதற்கு இயேசு ஓர் எடுத்துக்காட்டு தருகிறார். ‘தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்பது ஆண்டவராகிய கடவுள் வழங்கிய ஐந்தாவது கட்டளை (காண். விப 20:12). தந்தையையும் தாயையும் அவர்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் பார்த்துக்கொள்வது மிகவும் சிரமமான செயல். அவர்களைப் பார்த்துக்கொள்வதற்குப் பதிலாக கோவிலுக்கு ‘கொர்பான்’ (‘காணிக்கை’) செலுத்திவிட்டால் போதும் எனச் சொல்லியது மரபு. அதாவது, சரியான ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக, எளிதான ஒன்றைச் செய்ய வழிகாட்டுகிறது மரபு. இதைத் தவறு எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. இச்செயல் வழியாக ஒருவர் தன் பெற்றோருக்குரிய கடமை, பொறுப்புணர்விலிருந்து தவறுகிறார். தனிமனித பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்க வழிவகுக்கிறது மரபு.

கைகளையும் பாத்திரங்களையும் செம்புகளையும் கழுவிவிட்டால் தூய்மை வந்துவிடும் என்று எண்ணிய தம் சமகாலத்துப் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களிடம், ‘வெளிப்புறத் தூய்மை அல்ல, மாறாக, கடவுளோடு நெருக்கமாகத் திகழும் உள்ளார்ந்த தூய்மையே மேன்மையானது’ என மொழிகிறார் இயேசு.

இயேசு அவர்களுக்கும் நமக்கும் கற்பிக்கும் பாடங்கள் எவை?

(அ) எளிதானவற்றை அல்ல, மாறாக, சரியானவற்றைச் செய்யவே நாம் விரும்ப வேண்டும்.

(ஆ) தனிமனித பொறுப்புணர்வை நாம் தட்டிக்கழித்துவிட்டு, கோவில் சார்ந்தவற்றில் பொறுப்பு அல்லது பிரமாணிக்கம் பாராட்டக் கூடாது.

(இ) வெளிப்புறத் தூய்மை நம்மை மற்ற மனிதர்களோடு இணைக்கிறது. உள்ளார்ந்த தூய்மையே நம்மைக் கடவுளோடு இணைக்கிறது. மனிதர்களோடு ஏற்படுத்துகிற இணைப்பை விட கடவுளோடு ஏற்படுத்திக்கொள்கிற இணைப்பே மேன்மையானது.

முதல் வாசகத்தில், அரசர் சாலமோன் எருசலேம் கோவிலை நேர்ந்தளிக்கிறார். தலைமைக் குருவாக கடவுளுக்கும் மக்களுக்கும் நடுவே நிற்கிற சாலமோன், ‘இரவும் பகலும் உமது கண்கள் இதை நோக்கி இருப்பனவாக!’ என்று ஆண்டவராகிய கடவுளிடம் விண்ணப்பம் செய்கிறார்.

இரவும் பகலும் ஆண்டவருடைய கண்கள் நம்மை நோக்கிவாறு இருக்கின்றன என்னும் வாக்குறுதி நமக்கு பயத்தை அல்ல, மாறாக, எதிர்நோக்கையே தர வேண்டும். இத்தகைய எதிர்நோக்கையே ஆகார் பெற்றுக்கொண்டார். ஆகையால்தான், ‘என்னைக் காண்கிறவரை நான் இங்கு கண்டேன்’ (காண். தொநூ 16:13) எனச் சொல்லி தன் தலைவி சாராவின் இல்லம் திரும்புகிறார். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 24).

இறைவனின் கண்கள் நம் அனைவரையும் நோக்கி இருப்பதால் நாம் ஒருவர் மற்றவர்மேல் நம் கண்களைத் திருப்பி அவரைத் தீர்ப்பிடவோ, அவர்மேல் பொறாமை கொள்ளவோ, அவரை அச்சுறுத்தவோ வேண்டாம்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment