இன்றைய இறைமொழி
திங்கள், 5 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 5-ஆம் வாரத்தின் திங்கள்
1 அரசர்கள் 8:1-7, 9-13. மாற்கு 6:53-56
பேழையும் படகும்
ஆண்டவராகிய கடவுள் நம்மோடு தங்கவும், பயணம் செய்யவும் திருவுளம் கொள்கிறார். கடவுளின் எளிமையை இது நமக்கு உணர்த்துவதோடு, நமது மாண்பையும், கடவுள் நிலைக்கு உயர வேண்டிய நம் பொறுப்புணர்வையும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
சாலமோன் அரசர் எருசலேமில் கட்டி முடித்த கோவில் நேர்ந்தளிக்கப்படுவதற்கு முன்னர் நடக்கும் முதன்மையான நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் பேழை நகரிலிருந்து கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டு நிறுவப்படுகிறது. ‘ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பியதால் குருக்களால் திருத்தூயகத்துக்குள் நிற்கக்கூட இயலவில்லை என்கிறார் ஆசிரியர். ‘நீர் தங்கி வாழ்வதற்காக உயர் இல்லம் ஒன்றை உமக்காகக் கட்டியுள்ளேன்’ என மொழிகிறார் சாலமோன். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மிக நெருக்கமாக வருகிறார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் படகுப் பயணங்களையும், அப்பயணங்கள் ஏற்படுத்திய நேர்முகத் தாக்கங்களையும் வாசிக்கிறோம். மூன்று நிகழ்வுகள் இங்கே நடக்கின்றன: ஒன்று, இயேசு தொடர்ந்து பயணம் செய்பவராக இருக்கிறார். இரண்டு, இயேசுவை மக்கள் கண்டுணர்கிறார்கள். மூன்று, இயேசுவைத் தொடுவதற்கு முயற்சி செய்கிறார்கள், தொட்டவர்கள் நலம் பெறுகிறார்கள்.
(அ) இயேசுவின் தொடர் பயணம்
இயேசு தொடர்ந்து மக்களை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறார். இக்கரையிலிருந்து அக்கரை, கலிலேயக் கடலுக்குள் கடலைத் தண்டி என அவருடைய பயணம் தொடர்கிறது. திருஅவையின் நோக்கமே மற்றவர்களைத் தேடிச் செல்தலும் மற்றவர்களை நோக்கிப் பயணம் செய்தலும்தான் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 23).
(ஆ) இயேசுவைக் கண்டுணர்தல்
மக்கள் இயேசுவை இன்னார் என்று அடையாளம் காண்கிறார்கள். அவர்கள் என்ன கண்டார்கள்? இயேசுவின் முகத்தையா? அல்லது இயேசுவின் இரக்கம்நிறை உள்ளத்தையா? பார்ப்பதை விட கண்டுணர்தல் மேன்மையானது. ஏனெனில், கண்டுணர்தலில் நாம் அடுத்த நபரோடு உறவை ஏற்படுத்தத் தொடங்குகிறோம்.
(இ) இயேசுவைத் தொடுதல்
இயேசுவை மக்கள் தொடுகிறார்கள், தொட்டவர்கள் நலம் பெறுகிறார்கள். வினையும் எதிர்வினையும் அடுத்தடுத்து நடக்கின்றன. இயேசுவின் ஆற்றலும் மக்களின் நம்பிக்கையும் இங்கே ஒருங்கே வெளிப்படுகின்றன.
முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பேழையின் வழியாக கோவிலின் திருத்தூயகத்தில் வீற்றிருக்கிறார். நற்செய்தி வாசகத்தில், கடவுளின் மாட்சியாகிய இயேசு படகு வழியாக மக்கள் அனைவரையும் தேடிச் செல்கிறார். தம்மைத் தொடுமாறு அனுமதிக்கிறார்.
இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் சவால் என்ன?
‘புனிதம் பற்றிய உணர்வு’ (sense of the sacred) பெற்றுக்கொள்தல். கடவுளின் மாட்சி தங்கள் நடுவே இருப்பதை குருக்கள் (முதல் வாசகத்தில்) உணர்கிறார்கள். கடவுளின் வல்லமை தங்களிடம் வருவதை கெனசரேத்து மக்கள் (நற்செய்தி வாசகத்தில்) உணர்கிறார்கள். கடவுள் தம்மையே தொடர்ந்து இறைவார்த்தையிலும் அருளடையாளங்களிலும் அண்டை அயலாரிலும் இயற்கையிலும் வெளிப்படுத்துகிறார். நாம் அவரைக் கண்டுணர்தல் வேண்டும். கடவுள் பற்றிய உணர்வு வரும்போது நம்மைப் பற்றிய உணர்வு நமக்கு இயல்பாகவே வருகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment