இன்றைய இறைமொழி. வெள்ளி, 2 பிப்ரவரி 2024. ஒளியும் மாட்சியும்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 2 பிப்ரவரி 2024
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா
மலாக்கி 3:1-4. எபிரேயர் 2:14-18. லூக்கா 2:22-40

ஒளியும் மாட்சியும்

‘மெழுகுதிரி திருப்பலி’ (ஆங்கிலத்தில், கேண்டில்மஸ்) என அழைக்கப்படும் இந்நாளில் நம் ஆண்டவராகிய இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வின் பின்புலத்தில் இரண்டு யூதச் சட்டங்கள் இருக்கின்றன: ‘ஆண் மகப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்’ (காண். விப 13:1-2, 11-16), ‘குழந்தை பெற்றெடுக்கிற தாய் ஏழு நாள்களுக்குத் தீட்டாக இருக்கிறார். ஆண்குழந்தையை அவர் பெற்றெடுத்தால் தொடர்ந்து முப்பத்து மூன்று நாள்கள் அவர் தீட்டுப்பட்டவராக இருக்கிறார். அந்நாள்கள் முடிந்தபின்னர் அவர் தூய்மைச் சடங்கு செய்ய வேண்டும்’ (காண். லேவி 12:5).

மேற்காணும் இரண்டு சட்டங்களை நிறைவேற்றுவதற்காக இயேசுவின் பெற்றோர் எருசலேம் கோவிலுக்கு வருகிறார்கள். தங்களுடைய மகனே இவ்வுலகின் மீட்பர் என இவர்கள் அறிந்திருந்தாலும், தங்களுடைய மரபு சார்ந்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிபவர்களாக இருக்கிறார்கள் யோசேப்பும் மரியாவும்.

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர சகோதரிகளைப்போல் ஆக வேண்டியதாயிற்று’ (காண். எபி 2:14-18) என வாசிக்கிறோம். இயேசு மனுவுருவாதலின் நிறைவு இதுவே. ஆகையால்தான், இன்றைய நாளில் கிறிஸ்து பிறப்புக் காலத்தை நிறைவு செய்கிறோம். இனி நம் பார்வை அனைத்தும் இயேசுவின் உயிர்ப்பை நோக்கியதாக இருக்கும்.

லூக்கா நற்செய்தியில் இயேசு யார் என்பது மூன்று படிகளில் வெளிப்படுத்தப்படுகிறது: (அ) ‘இயேசு, கடவுளின் மகன்’ – மரியாவுக்குத் தோன்றுகிற வானதூதர் கபிரியேல், பிறக்கப் போகும் குழந்தையின் பெயர் இயேசு என்றும், அவர் உன்னத கடவுளின் மகன் எனவும் அவருக்கு அறிவிக்கிறார். (ஆ) ‘ஆண்டவர்-மெசியா-மீட்பர்’ – இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்படும்போது, ‘இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்’ என மொழிகிறார் வானதூதர். தங்களுக்குச் சொல்லப்பட்ட இவற்றை இடையர்கள் மரியாவிடம் அறிக்கையிடுகிறார்கள். (இ) ‘பிற இனத்தாருக்கு ஒளி இஸ்ரயேலுக்கு மாட்சி’ – எருசலேம் ஆலயத்தில் குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கிற சிமியோன், இயேசுவை ஒளி என்றும் மாட்சி என்றும் வெளிப்படுத்துகிறார். ஆக, இந்த நாளை வெளிப்பாட்டின் நாள் எனவும் அழைக்கலாம்.

இன்றைய முதல் வாசகம் மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியத்தின் இறுதி நூல் இது. ‘நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் திடீரென தம் கோவிலுக்குகுள் வருவார்’ என இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. இங்கே மூன்று விடயங்கள் கவனிக்கத்தக்கவை. ஒன்று, ஆண்டவரின் வருகை திடீரென நடைபெறும். இரண்டு, ஆண்டவர் தம் கோவிலுக்குள் வருகிறார். மூன்று, ஆண்டவரைத் தேடுகிறவர்கள் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள இயலும்.

பாபிலோனியப் படையெடுப்பின்போது எருசலேம் நகரம் அழிவுக்குள்ளாகிறது. எருசலேமும் அதன் கோவிலும் இடிக்கப்பட்டு, மக்கள் அடிமைகளாக வெளியேற்றப்பட்டபோது அவர்களோடு சேர்ந்து ஆண்டவரின் மாட்சியும் கோவிலை விட்டு நீங்குகிறது. அன்று முதல் ஆண்டவரின் மாட்சி திரும்ப வர வேண்டும் என மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். இன்றைய நாளில் ஆண்டவரின் மாட்சி இதோ மீண்டும் ஆலயத்திற்குள் வருகிறது. மலாக்கி இறைவாக்கு நிறைவேறுகிறது. எனவேதான், சிமியோன், ‘இஸ்ரயேலுக்கு மாட்சி’ எனக் குழந்தையை அழைக்கிறார். அவரை ஆவலோடு எதிர்நோக்கியவர்களின் அடையாளமாக சிமியோன் மற்றும் அன்னா நிற்கின்றனர். அவர்கள் அவரைக் கண்டுகொள்கின்றனர்.

சிமியோன் மற்றும் அன்னா ஆலயத்தில் நிற்கின்றனர். வாழ்வின் அஸ்தமனத்தில் நிற்கும் இவர்கள் மனுக்குலத்தின் விடியலைக் கைகளில் ஏந்தும் பேறு பெறுகின்றனர்.

(அ) சிமியோன் குழந்தை இயேசுவின் கண்களில் தன் கண்களைக் கண்டார். அதன் வழியாகத் தன் வாழ்வின் நோக்கம் உணர்ந்தார். நோக்கம் நிறைவேறிய அவர் அமைதியுடன் விடைபெறத் தயாராகின்றார்.

(ஆ) சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி நின்ற போது, அந்தக் குழந்தை எப்படி மாறும் – இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் – என்பதை உணர்ந்திருந்தார். குழந்தை மாறுவதற்கான ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது.

(இ) சிமியோன் குழந்தையின் ஸ்பரிசத்தைத் தன் கைகளில் உணர்கின்றார். ஒரே நேரத்தில் குழந்தையின் வலுவின்மையையும், அது கொண்டிருக்கும் ஆற்றலையும் கண்டு வியக்கின்ற அவர் தன் எதிர்நோக்கு நிறைவேறியது கண்டு மகிழ்கின்றார்.

இந்த நாள் நம் வாழ்வுக்கு அளிக்கும் பாடங்கள் எவை?

(அ) பொறுமை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எருசலேம் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படுவர். அனைத்துக் குழந்தைகளையும் கண்டு சிமியோன் பரவசமாகவில்லை. காத்திருக்கின்றார். தூய ஆவியின் தூண்டுதலுக்காகக் காத்திருக்கின்றார். உள்ளத்தில் பொறுமை கொண்டிருப்பவர்களே காத்திருக்க இயலும். நாம் இன்று பொறுமை இழந்து நிற்கின்றோம். காத்திருத்தல் நேரவிரயம் எனக் கற்பிக்கப்படுகிறது. நம் வாழ்வின் அவசரநிலை காரணமாக ஆவியாரின் தூண்டுதலை நாம் அறிய இயலாமற்போகிறது.

(ஆ) புகழ்ச்சி. சிமியோன் கடவுளைப் புகழ்கின்றார். அக்குழந்தை பற்றி பெற்றோர்களிடம் பேசுகின்றார். கடவுளால் நிரம்பியிருக்கும் ஒருவர் எப்போதும் கடவுளைப் புகழ்வதோடு, மற்றவர்களைப் பற்றியும் நேர்முகமாகப் பேசுவார். இன்று நாம் இறைவனை எப்போதெல்லாம் புகழ்கின்றோம்? மற்றவர்களைப் பற்றிய நம் உரையாடல் நேர்முகமாக இருக்கிறதா? அல்லது எதிர்மறையாக இருக்கிறதா?

(இ) எளிமை. இயேசுவின் பெற்றோர் குழந்தைக்கு ஈடாக இரு புறாக்குஞ்சுகளைக் காணிக்கையாகக் கொடுக்கின்றனர். காளையோ, ஆடோ வாங்க அவர்களால் இயலவில்லை. அவர்களுடைய ஏழ்மையே அவர்களுடைய நொறுங்குநிலையாக மாறுகின்றது. கடவுள் மனுக்குலத்தோடு குறிப்பாக வலுவற்றவர்களோடு கொண்டுள்ள நெருக்கத்தை இது காட்டுகிறது.

(ஈ) இருப்பதல்ல, மாறுவதே இலக்கு. குழந்தையைக் கையில் ஏந்துகிற சிமியோன் அது எப்படி இருக்கிறது என எந்த வர்ணனையும் செய்யவில்லை. மாறாக, அது எப்படி மாறப் போகிறது – ‘பலருக்கு எழுச்சியாகவும் வீழ்ச்சியாகவும் – என்பதை முன்மொழிகிறார். நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதைப் பொருத்தே நம் மதிப்பு அமைகிறது.

(உ) நோக்கம். குழந்தையின் வாழ்வின் நோக்கத்தை சிமியோன் அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கின்றார். வானதூதர் தனக்கு அறிவித்த நாள் முதல் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் சட்டென ஓடவிட்டுப் பார்க்கின்றார் மரியா. நம் வாழ்வின் நோக்கத்தை இறைவன் நமக்குச் சரியான நேரத்தில் வெளிப்படுத்துகின்றார். வாழ்வின் இலக்கு என்பது நாம் நிர்ணயிப்பது. வாழ்வின் நோக்கம் என்பது கடவுள் நிர்ணயிப்பது. இலக்கும் நோக்கமும் இணைதல் நலம்.

(ஊ) அன்றாட அர்ப்பணம். இன்றைய நாளை அர்ப்பண வாழ்வின் நாள் எனவும் கொண்டாடுகிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அர்ப்பணத்திற்கு நம்மை அழைக்கிறது. அர்ப்பணம் செய்கின்ற உள்ளம் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது, எதையும் பற்றிக் கொள்ளாது. ஒருவகையான சுதந்திரம் அல்லது கட்டின்மை அந்த உள்ளத்தில் குடிகொள்ளும்.

சிமியோனின் கரங்கள் வழியாகக் கடவுளின் கரங்களே குழந்தையைத் தாங்கின. இன்று மெழுகுதிரி ஏந்திய நம் கரங்களையும் கடவுளின் கரங்கள் தாங்கட்டும்! நாமும் அவருடைய ஒளியாக மாட்சியாக இவ்வுலகில் திகழ்கிறோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment