இன்றைய இறைமொழி
வியாழன், 1 பிப்ரவரி 2024
பொதுக்காலம் 4-ஆம் வாரத்தின் வியாழன்
1 அரசர்கள் 2:1-4, 10-12. மாற்கு 6:7-13
பணியில் பங்கேற்பாளர்கள்
இன்று பிப்ரவரி மாதத்தின் முதல் நாள். கடந்து போன மாதத்தைச் சற்றே திரும்பிப் பார்த்து கடவுளுக்கு நன்றி கூறுவோம். நம் இலக்கைக் கூர்மையாக்கி, நம்மை நாமே மன்னித்து தொடர்ந்து கடவுளின் அருள்கரம் பிடித்து வழிநடப்போம்.
திருத்தூதர்களின் அழைத்தல் பற்றிப் பதிவு செய்கிற மாற்கு நற்செய்தியாளர், ‘தம்மோடு இருப்பதற்கும் அனுப்பப்படுவதற்கும் பன்னிருவரை இயேசு தேர்ந்தெடுத்தார்’ என மொழிகிறார் (காண். மாற் 3:14). தாம் விரும்பி அழைத்துத் தம்மோடு வைத்துக்கொண்டவர்களை இருவர் இருவராகப் பணிக்கு அனுப்பும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.
இயேசு தம் சீடர்களை அனுப்பும் நிகழ்வில் நாம் காணும் மூன்று விடயங்கள் நமக்குப் பாடங்களாக அமைகின்றன:
(அ) ‘அவர்களுக்கு தீய ஆவிகள்மீது அதிகாரம் அளித்தார்’
தம் திருத்தூதர்கள் தம்மை வெறுமனே பின்பற்றுபவர்கள் அல்லர், மாறாக, தம் பணியின் பங்கேற்பாளர்கள் என்பதில் தொடக்கமுதலே அக்கறையாக இருக்கிறார் இயேசு. தாம் தீய ஆவிகள்மேல் கொண்டிருக்கிற அதிகாரத்தைத் தம் திருத்தூதர்களுக்கு அளிப்பதன் வழியாக, தம் பணியின் பங்கேற்பாளர்கள் என அவர்களை உயர்த்துகிறார். மேலும், இவர்கள் வழியாகவே தம் பணி தொடர வேண்டும் என்பதையும் இயேசு உணர்ந்திருந்தார். தீமையின் ஆதிக்கத்தின்மேல் அதிகாரம் கொண்ட திருத்தூதர்கள் எல்லாவகைத் தீமைகளையும் – தீய ஆவிகள், தனிமனிதத் தீமைகள், குழுமத் தீமைகள் அனைத்தையும் – கட்டுக்குள் கொண்டிருக்க வேண்டும் என்பதும் இங்கே புலப்படுகிறது. திருமுழுக்கின் வழியாக நாமும் இயேசுவின் திருத்தூதுப் பணியில் பங்கேற்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதோடு, எந்த நேரத்திலும் தீமையையும் அதன் செயல்பாடுகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதையும் உணர்வோம்.
(ஆ) சிறுநுகர் வாழ்வு
சிறுநுகர் வாழ்வு (minimalist living) முறையைத் தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு. ‘அதிகப் பொருள்கள் வைத்திருப்பவர் அதிகம் பெற்றிருப்பவர்’ என்னும் எண்ணம் மேலோங்கி நின்ற காலத்தில், பொருள்கள் அனைத்தும் கவனச்சிதறல்களுக்கான காரணிகள் என வரையறுக்கிறார் இயேசு. தலைசாய்க்கவும் இடம் இல்லாத மானிட மகன் (காண். மத் 8:20), தம்மைப் போலவே தம் சீடர்களும் இருக்க வேண்டும் என விரும்புகிறார். ‘மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது’ (லூக் 12:15) என்னும் தம் போதனையை வாழ்வாக்க அழைக்கிறார். சிறுநுகர் வாழ்வு என்பது நம் வாழ்வியல் முறையாகவும், சிந்திக்கும் முறையாகவும் மாற வேண்டும். இன்றைய இணையதள உலகில் நாம் தரவுகளை நுகர்ந்துகொண்டே இருக்கிறோம். நுகர்வு அதிகமாகும்போது கவனம் சிதைவதுடன் நம் ஆற்றலும் வீணாகிறது. நம் ஆற்றலை விரயமாக்கும் பெருநுகர்வு முறையை விடுக்க முயற்சி செய்வோம். குறிப்பாக, நம் உள்ளத்தில் நிறைந்துள்ளவற்றை நெறிப்படுத்துவோம்.
(இ) தன்நிறைவு
தங்கள் பணியின் நிறைவு தங்களைப் பொருத்ததே அன்றி, தங்களுக்கு வெளியே இருந்து வரும் நேர்முக, எதிர்முக விமர்சனங்களைப் பொருத்தது அல்ல என அறிவுறுத்துகிறார் இயேசு. குறிப்பாக எதிர்மறையான விமர்சனங்கள், நிராகரிப்புகள், தவறான புரிதல்கள் போன்றவற்றை திருத்தூதர்கள் உடனடியாக உதறித்தள்ள வேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கிறது. தன்நிறைவு கொள்கிற மனம் வெளிப்புற விமர்சனங்களால் துள்ளிக் குதிக்காது, துவண்டுவிடாது! நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் நிறைவை நமக்குள்ளே கண்டெடுக்க வேண்டுமே தவிர, வெளிப்புற அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளையோ, விமர்சனம் அல்லது கண்டனங்களையோ வைத்து நிர்ணயிக்கக் கூடாது.
இன்றைய முதல் வாசகத்தில், தனக்குப் பின் சாலமோனை அரசராக ஏற்படுத்துகிற தாவீது, ‘அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன்’ என்று கூறுகிறார். வாழ்வின் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்பவராகவும், ஏற்றுக்கொண்டு அவற்றுக்குத் தன்னையே அர்ப்பணிப்பவராகவும் இருக்கிறார் தாவீது. மேலும், ஆண்டவருக்கு உகந்த ஆட்சி செய்யுமாறு சாலமோனுக்கு அறிவுறுத்தித் தன் பணியின் பங்கேற்பாளராக அவரை மாற்றுகிறார்.
நிற்க.
கூட்டியக்கத் திருஅவையை நோக்கிய நம் பயணத்தில் இணைந்து பயணிக்கும் நாம் அனைவருமே பங்கேற்பாளர்கள் என்பதை உணர வேண்டும். திருஅவையின் நிகழ்வுகளைப் பார்வையிடுபவர்கள் அல்லர் நாம். வெறுமனே திருஅவைத் தலைவர்களைப் பின்பற்றுபவர்களும் அல்லர் நாம். சிறிய விடயங்களிலும் பங்கேற்பை ஊக்குவிப்பதன் வழியாக நம் திருஅவையை நாம் இன்னும் வளப்படுத்த இயலும். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 21).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment