இன்றைய இறைமொழி
புதன், 31 ஜனவரி 2024
பொதுக்காலம் 4-ஆம் வாரத்தின் புதன்
2 சாமுவேல் 24:2, 9-17. மாற்கு 6:1-6
கடவுளின் இயலாமை!
லூக்கா நற்செய்தியில், நாசரேத்தூர் மரியாவுக்குத் தோன்றுகிற வானதூதர் கபிரியேல், ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ (காண். லூக் 1:37) என்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், ‘… வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை’ (காண். மாற் 6:6) எனப் பதிவு செய்கிறார் மாற்கு.
மனிதரின் நம்பிக்கையின்மை கடவுளின் கைகளையும் செயலிழக்கச் செய்கிறது என்பதே இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் செய்தி ஆகும்.
தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாகும் நிகழ்வில், அவனுடைய தந்தையுடன் உரையாடுகிற இயேசு, ‘இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்’ (காண். மாற் 9:23) என மொழிகிறார்.
இயேசு தம் சொந்த ஊருக்கு வருகிறார். அவருடைய போதனையைக் கேட்கிற மக்கள் ஒரு பக்கம் வியப்புற்றாலும் இன்னொர பக்கம் அவரைப்பற்றி இடறல்படுகிறார்கள்.
அவர்கள் மூன்று நிலைகளில் இடறல்படுகிறார்கள்:
(அ) ‘இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?’ – இயேசுவின் ஞானமிகு பேச்சும், வல்ல செயல் செய்யும் ஆற்றலும் இம்மண்ணிலிருந்து வந்தன என்று குறுகிய பார்வை கொண்டிருக்கிறார்கள் நாசரேத்து மக்கள்.
(ஆ) ‘இவர் தச்சர் அல்லவா!’ – இயேசு அவருடைய மறைந்த வாழ்க்கையில் செய்த பணியைச் சுட்டிக்காட்டி, அந்தப் பணியை அவர் செய்தாலே போதும் என அறிவுறுத்துகின்றனர்.
(இ) ‘மரியாவின் மகன்தானே!’ – வழக்கமாக யூத மரபில் தந்தையின் பெயரை வைத்தே பிள்ளைகள் அடையாளப்படுத்தப்படுவதுண்டு. ‘மரியாவின் மகன்’ என்னும் சொல்லாடல் வழியாக இயேசுவின் கன்னிப் பிறப்பைக் கேலி செய்கிறார்கள் ஊரார்.
அவர்களுடைய நம்பிக்கையின்மை தயக்கமாக மாறுகிறது. தயக்கத்தின் காரணமாக இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. விளைவு, இயேசுவால் வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை.
நம் நம்பிக்கையின்மை கடவுளையும் இயலாதவர் நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
முதல் வாசகத்தில், தாவீது செய்கிற மூன்றாவது தவறு பற்றி வாசிக்கிறோம். பத்சேபாவுடன் விபசாரம், அவருடைய கணவரைக் கொலை செய்தலைத் தொடர்ந்து, வீரர்களின் கணக்கெடுப்பை நடத்துகிறார் தாவீது. இத்தவறு ஆண்டவரின் பார்வையில் பெரிய தீங்காகப்படுகிறது. ஏனெனில், படை வீரர்களைக் கணக்கெடுப்பதன் வழியாக, தன் வெற்றிக்குக் காரணம் தானே என முன்மொழிய விரும்புகிறார் தாவீது. ஆண்டவராகிய கடவுள் தனக்கு அருளிய நன்மையை மறந்துவிட்டு, தன் வலிமையைத் தானே மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறார்.
சுருக்கமாக, தன் இருத்தல் நிலைக்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை எனச் சொல்லி, கடவுளை இயலாமை நிலைக்குத் தள்ளுகிறார் தாவீது. கடவுளுடைய பராமரிப்பின்மேல் நம்பிக்கை குறைத்து, தன் ஆற்றல்மேல் நம்பிக்கைகொள்ளத் தொடங்குகிறார்.
நாசரேத்தூர்க்காரர்கள் மற்றும் தாவீது இவ்விருவருமே ஊகங்களே (அனுமானங்கள்) உண்மை என நினைத்துக்கொள்கிறார்கள்.
நிற்க.
ஒருவரின் நிகழ்காலம் நம் கண்களுக்கு உறுத்தலாக இருக்கும்போது அவருடைய இறந்தகாலத்தைத் தோண்டி எடுத்துப் பார்ப்பது மனித இயல்பு. மற்றவரைப் பாராட்டி ஏற்றுக்கொள்ளும் பண்பு அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டி எழுப்புகிறது. (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 20).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment