இன்றைய இறைமொழி. செவ்வாய், 30 ஜனவரி 2024. உறைகிற எண்ணங்கள்!

இன்றைய இறைமொழி
செவ்வாய், 30 ஜனவரி 2024
பொதுக்காலம் 4-ஆம் வாரத்தின் செவ்வாய்
2 சாமுவேல் 18:9-10, 14, 24-25, 30, 19:3. மாற்கு 5:21-43

உறைகிற எண்ணங்கள்!

மாற்கு நற்செய்தியாளின் இலக்கியத் திறத்திற்கு மற்றொரு சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வருந்திய பெண் நலம் பெறுதல், தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் பன்னிரு வயது மகள் நலம் பெறுதல் என்னும் இரண்டு வல்ல செயல்கள் நடந்தேறுகின்றன. நோய் நீங்குதல், இறந்தோர் உயிர்த்தெழுதல் என்று இரண்டு வேறு வேறான வல்ல செயல்களாக நடக்கின்றன. இரண்டு கதையாடல்கள் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளன எனச் சொல்கின்றனர் சிலர். ஆனால், ‘மனித அவசரம் இறைத் தாமதம்’ என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால், முதல் நிகழ்வு (இரத்தப் போக்கினால் வருந்துகிற பெண் இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வு), இரண்டாம் நிகழ்வுக்கான தயாரிப்புத் தளமாக இருக்கிறது.

இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ‘உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?’ என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ‘அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!’ என்கிறார்.

வீட்டிலிருந்து வந்தவர்கள் யாயிரின் உறவினர்களாக இருந்திருக்கலாம். அல்லது பணியாளர்களாக இருந்திருக்கலாம். மகள் இறந்த செய்தியை அறிவிப்பதோடு அவர்கள் நின்றிருந்தால் பரவாயில்லை. ‘போதகரை ஏன் தொந்தவு செய்கிறீர்?’ எனக் கேட்டு அவரின் பாதையைத் திருப்ப முயற்சி செய்கின்றனர். இரண்டு உள்பொருள்கள் இந்தக் கேள்வியில் அடங்கியுள்ளன: ஒன்று, இறந்த ஒருவர் உயிர் பெற்று வருதல் இயலாது. இரண்டு, இறந்தவரை உயிர்த்தெழச் செய்ய கடவுளால் மட்டுமே இயலும். இயேசு வெறும் போதகர்தான். கடவுள் இல்லை.

பணியாளர்கள் அல்லது உறவினர்களின் இவ்வார்த்தைகள் மிக எதார்த்தமாகத் தெரிகின்றன. நம் அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருக்கின்றன.

ஆனால், அறிவுக்கு அப்பாற்பட்டவை இருக்கின்றன என்றும், அவற்றைக் காண நமக்கு நம்பிக்கை அவசியம் என்றும் நாம் உணர வேண்டும்.

நாம் சில நேரங்களில் அறிவாகச் சிந்திக்கிறோம் அல்லது பேசுகிறோம் என்ற நினைப்பில் வல்ல செயல்கள் நடப்பதை மறுக்கிறோம். மேலாண்மையியலில் இதை ‘உறைகிற எண்ணங்கள்’ (ஆங்கிலத்தில், ‘சிமெண்ட்டிங் தாட்ஸ்‘) என்கிறார்கள். அதாவது, நம் வீட்டுக்கு வெளியே மண் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மண்ணில் திடீரென ஒரு புல்லோ, செடியோ வளர்ந்து நிற்கும். அவற்றைப் பிடுங்கினாலும் இன்னும் சில நாள்களில் மீண்டும் ஏதோ ஒன்று வளர்ந்து நிற்கும். ஆனால், அந்த இடத்தில் நாம் சிமெண்ட் கொட்டிப் பூசிவிட்டால், எதுவுமே அந்த இடத்தில் முளைக்காது. அதாவது, வளர்ச்சி இருந்த இடத்தில் சிமெண்டிங் செய்வதால் வளர்ச்சி நிறுத்தப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது.

அன்றாடம் நாமும் வளர்கிறோம். நம் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக நாம் சிமெண்ட்டிங் செய்துகொள்கிறோம் சில நேரங்களில். இந்த சிமெண்ட்டிங் சில நேரங்களில் நமக்கு வெளியிலிருந்து வரலாம். அல்லது நமக்கு உள்ளிருந்து வரலாம். இவ்வகை எண்ணங்கள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடுகின்றன.

இவற்றை நாம் இரு வழிகளில் வெல்லலாம்?

ஒன்று, பன்னிரு ஆண்டுகளாக வருந்திய அந்த இளவல்போல அசைக்க முடியாத நம்பிக்கை கொள்வது. அந்த நம்பிக்கையை நமக்கு நாமே உறுதியாக்கிக் கொள்வது.

இரண்டு, ‘அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!’ என்னும் இயேசுவின் குரலை நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கச் செய்வது.

இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் அப்சலோம் இறந்த செய்தி கேட்டு தாவீது அழுது புலம்புகின்றார். நேற்றைய வாசகத்தில், இதே அப்சலோம் தன்னைக் கொல்ல வருவதைக் கேட்டுத் தப்பி ஓடுகின்றார் தாவீது. தன்னைக் கொல்ல வந்த எதிரி இறந்ததாக மகிழ்வதற்குப் பதிலாக, ‘என் மகன் அப்சலோமே, உனக்குப் பதிலாக நான் இறந்திருக்கக் கூடாதா!’ என அழுகின்றார்.

பத்சேபா நிகழ்வின்போது, ‘உன் வீட்டின்மேல் ஒரு வாள் எப்போதும் தொங்கிக் கொண்டேயிருக்கும்’ என நாத்தான் வழியாக எச்சரிக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். பாவம் தாவீது! வாள் அடுத்தடுத்த அவருடைய அனைத்து உறவுகளையும் அவரிடமிருந்து பிரிக்கிறது.

உடல் வாதையினால் தன் தலைமேல் தொங்கிய வாளை நம்பிக்கையால் உடைத்தெறிகிறார் இளவல்.

தன் பணியாளர்கள் கொண்டு வந்த இறப்பின் வாளை நம்பிக்கையால் உடைத்தெறிகிறார் யாயிர்.

நம்மை நாமே அழிக்கும் வாள்களாக நம்மோடும் நம்மைச் சுற்றியும் இருப்பவை சிமெண்ட்டிங் தாட்ஸ். அவற்றை உடனே அழித்தல் நலம்.

நிற்க.

கூட்டியக்கத்துக்கான திருஅவையை நோக்கிய நம் பயணத்தில் நாம் மற்றவர்களைப்பற்றிக் கொண்டிருக்கிற முற்சார்பு எண்ணங்களை ஆய்ந்தறிதல் நலம். வெறும் எண்ணங்களாகத் தோன்றுகிற இவை காலப்போக்கில் மாற்ற முடியாத நம்பிக்கைகளாக மாறிவிடுகின்றன. உறைகிற எண்ணங்கள் உறவுகளையும் உறையச் செய்துவிடுகின்றன. (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 19).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment