இன்றைய இறைமொழி
திங்கள், 29 ஜனவரி 2024
பொதுக்காலம் 4-ஆம் வாரத்தின் திங்கள்
2 சாமுவேல் 15:13-14, 30, 16:5-13. மாற்கு 5:1-20
உமது வீட்டுற்குப் போய்!
தம்மைப் பின்பற்ற விரும்பிய தீய ஆவி பிடித்த (பிடித்து நலமுற்ற நபரை) அவருடைய வீட்டுக்குப் போகுமாறு அனுப்புகிற இயேசு, ‘ஆண்டவர் உம்மீது இரக்கம் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்’ என அறிவுறுத்துகிறார்.
மாற்கு நற்செய்தியாளர் ஒரு சிறந்த கதைசொல்லி என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி சான்றாக இருக்கிறது. தீய ஆவி(கள்) – ஏறக்குறைய 6000 பேய்கள், ஒரு லெகியோன் – பிடித்திருந்த ஒரு நபருக்கு நலம் தருகிறார் இயேசு. இச்செயலே இயேசுவை மக்கள் நிரகாரிப்பதற்கான நிகழ்வாகவும் மாறிவிடுகிறது. தங்கள் பன்றிகள் (ஏறக்குறைய 2000) கடலில் வீழ்ந்து இறந்துவிட்ட நிலையில், இதைவிடக் கேடானது எதுவும் நடக்கக் கூடாது என நினைக்கிற கெரசேனர் பகுதி மக்கள் இயேசு தங்களைவிட்டு அகலுமாறு வேண்டுகிறார்கள்.
நிகழ்வின் இறுதியில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்கின்றன: பேய் பிடித்தவர் நலம் பெற்று இல்லம் திரும்புகிறார், பன்றிகள் வைத்திருந்தவர்கள் பன்றிகள் இழந்து நிற்கிறார்கள், ஊருக்குள் வரவேற்கப்பட்ட இயேசு வெளியே அனுப்பப்படுகிறார், பேய்பிடித்தவர் கத்திக் கூச்சலிட்டபோது அவரைப் பற்றி அச்சப்படாத மக்கள் அவர் நலம் பெற்றவுடன் அச்சம்கொள்கிறார்கள்.
இயேசு தம் இருத்தலால் சலனத்தை ஏற்படுத்துகிறார். அந்தச் சலனத்தை ஊராரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் ஊரார் நலம் பெற்றதை விட தங்களுடைய பன்றிகளின் எண்ணிக்கையையே அதிகம் விரும்பினார்கள், பேய் பிடித்தவர் பேய்பிடித்தவராகவே இருக்க வேண்டும் என விரும்பியதால் அவர் நலம் பெற்ற செயல் பயத்தை வருவிக்கிறது.
பேய் பிடித்திருந்த கதைமாந்தரை நம் சிந்தனைப்பொருளாக எடுத்துக்கொள்வோம்.
நிகழ்வின் தொடக்கத்தில் இவரைப் பற்றிய வர்ணனை நமக்கு அச்சத்தைத் தருவதோடு இவர்மேல் இரக்கத்தையும் வருவிக்கிறது. பேய்கள்கூட்டம் அவரிடம் இருந்ததால் தூங்கவும் முடியாமல் அமரவும் முடியாமல் அலைக்கழிக்கப்படுகிறார். தன் இல்லத்தாரிடமிருந்து விலக்கப்பட்டவராகக் கல்லறைகள் நடுவில் – இறந்தவர்போல – குடியிருக்கிறார். கற்களால் தன்னைக் கிழித்துத் துன்பம் வருவித்துக்கொள்கிறார்.
உடல் காயங்கள், உள்ளத்தில் பேய், உறவுகளிடத்திலிருந்து தூரம் என்று வாழ்ந்த நபரை நோக்கி இயேசு செல்கிறார். இயேசு அந்த மனிதரைக் கண்ட அந்தப் பொழுதே, தீய ஆவி அவரை விட்டுப் போகுமாறு கட்டளையிடுகிறார்.
இயேசுவைச் சந்தித்தவுடன் அவருடைய வாழ்வு தலைகீழாக மாறுகிறது. ஆடை அணிந்து அறிவுத்தெளிந்தவராக இயேசுவின் அருகில் அமர்கிறார். மேலும், இயேசு புறப்பட்டபோது, தாமும் அவரோடு இருக்க வேண்டும் என அவரை வேண்டிக்கொள்கிறார்.
இங்கே புதியதொரு சீடத்துவத்தை இயேசு கற்பிக்கிறார்.
இயேசுவைப் பின்பற்றிச் சென்று அவரோடு இருப்பது ஒருவகை சீடத்துவம் என்றால், வீட்டுக்குச் சென்று ஆண்டவருடைய இரக்கத்தை உறவினர்களுக்கு அறிவிப்பது இன்னொரு வகை சீடத்துவம். இந்த இரண்டாம் வகைச் சீடத்துவத்தைத் தழுவுமாறு அந்த நபரைப் பணிக்கிறார் இயேசு.
முதலில் அந்த நபர் பேய்கள்நீங்கி நலம் பெற்றார். இப்போது தன்ஐயத்திலிருந்து விடுதலை பெறுகிறார். தனக்கென்று இனி யாரும் இல்லை, இயேசு போதும் என்று நினைத்தவரை அவருடைய குடும்பத்தாரிடம் அனுப்புகிறார் இயேசு.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வீட்டுக்குப்போய் ஆண்டவரின் இரக்கத்தை அறிவிப்பதே நாம் இன்று பெறுகிற அழைப்பு.
இன்றைய முதல் வாசகத்தில், தாவீது சிமயி என்னும் சவுலுடைய உறவினரின் பழிச்சொற்களை எதிர்கொள்ளும் நிகழ்வை வாசிக்கிறோம். பழிக்குப் பழி என்று அவரை அழிக்க முயல்வதற்குப் பதிலாக அமைதியாக வழிநடக்கிறார் தாவீது: ‘ஒருவேளை ஆண்டவரே அவனை அனுப்பியிருக்கலாம்,’ ‘அருகில் இருப்பவனே எதிரியாக இருக்கும்போது இவன் இருப்பதில் தவறு என்ன?’ ‘தீமைக்குப் பதிலாக ஆண்டவர் நன்மை செய்வார்.’
சிமயி ஏற்படுத்திய சலனம் கண்டு பயப்படவில்லை தாவீது. ஆண்டவரின் இரக்கத்தை நினைத்தவராக தன் வீட்டுக்குத் திரும்புகிறார்.
‘உன் வீட்டுக்குப் போ!’ என ஆண்டவராகிய கடவுள் இன்று நம்மை நோக்கிச் செல்கிறார். ஒருவேளை நாமும் கல்லறைகள்நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கலாம். நம்மேல் இரக்கம் கொள்கிற கடவுள் அவருடைய இரக்கத்தை அனைவருக்கும் அறிவிக்குமாறு நம்மை அனுப்புகிறார்.
நிற்க.
யூபிலி ஆண்டு என்பது ஆண்டவர் அருள்தரும் ஆண்டு (காண். எசா 61) என்று அழைக்கப்படுகிறது. வருகிற யூபிலி கி.பி. 2025-ஆம் ஆண்டில் இறைவனின் இரக்கத்தையும் கனிவையும் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்க முன்வருவோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 18).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment