இன்றைய இறைமொழி. சனி, 27 ஜனவரி 2024. இவர் யாரோ?

இன்றைய இறைமொழி
சனி, 27 ஜனவரி 2024
பொதுக்காலம் 3-ஆம் வாரத்தின் சனி
2 சாமுவேல் 12:1-7, 10-17. மாற்கு 4:35-41

இவர் யாரோ?

இறையனுபவம் நோக்கிய நம் பயணத்தில் எழுகிற சில கேள்விகளில் ஒன்று கடவுளைப் பார்த்து, ‘இவர் யாரோ?’ எனக் கேட்கும் கேள்வியே.

காற்றையும் கடலையும் இயேசு கடிந்துகொள்ளும் நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். இந்நிகழ்வை ஒரே நேரத்தில் வல்ல செயல் எனவும் உருவகம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

(அ) வல்ல செயல்

மாற்கு நற்செய்தியில் இதுவரை இயேசு செய்ததாக மாற்கு முன்மொழிகிற வல்ல செயல்கள் இரண்டு வகைகள்: ஒன்று, நோய் நீக்குதல். இரண்டு, பேய் ஓட்டுதல். காற்றையும் கடலும் கடிந்துகொண்டு இயேசு அமைதியை உருவாக்குகிற இந்த வல்ல செயலை நாம் இயற்கை சார்ந்த வல்ல செயல் என வரையறுக்கிறோம். இறந்தோர்க்கு உயிர்கொடுக்கிற நிகழ்வும் இத்தகைய வல்ல செயலையே சாரும். ஆண்டவராகிய இயேசு இயற்கையின்மேலும் இயற்கையின் செயல்கள்மேலும் இயற்கை நிகழ்த்துகிற பேராபத்துகள்மீதும் ஆற்றல்கொண்டவராக இருக்கிறார்.

(ஆ) உருவகம்

‘படகு’ என்பது ‘திரு அவை.’ ‘அலைகள்’ என்பது ‘தொடக்கத் திருஅவை எதிர்கொண்ட துன்பங்கள், பிரச்சினைகள், சவால்கள்.’ ‘இயேசுவின் தூக்கம்’ என்பது ‘அவருடைய இல்லாமை.’ இயேசு தூங்குவது போலத் தெரிந்தாலும் இக்கட்டான சூழலில் உடனடியாகச் செயலாற்றி அமைதியை ஏற்படுத்துபவராக இருக்கிறார். தொடக்கத் திருஅவையை பயத்தை விடுத்து நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், ‘காற்றும் கடலும் கீழ்ப்படிகின்ற இவர் யார்?’ என்னும் கேள்விக்கான விடையைக் காண்பதும் அவசியம்.

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) ‘சீடர்கள் தங்களோடு இயேசுவைக் கூட்டிச் செல்கிறார்கள்’ எனப் பதிவு செய்கிறார் மாற்கு. ஆண்டவராகிய இயேசு தம்மோடு இருப்பதற்காகத் திருத்தூதர்களைத் தெரிவுசெய்கிறார். திருத்தூதர்களும் இயேசு தங்களோடு இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மேலும், இந்த நிகழ்வு இவர்களுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் நிகழ்வாகவும் தரப்பட்டுள்ளது.

(ஆ) ‘போதகரே, சாகப் போகிறோமே!’ இயேசு இதுவரை நிறைய வல்ல செயல்கள் செய்தாலும், பேய்கள்கூட அவரை, ‘இறைமகன்’ என அறிக்கையிட்டாலும், திருத்தூதர்களுக்கு என்னவோ இயேசு வெறுமனே போதகராக தெரிகிறார். வாழ்வு தர வந்தவரைத் தங்கள் அருகே வைத்திருக்கிற சீடர்கள் சாவு பற்றி அச்சம் கொள்வது நமக்கே வியப்பாக இருக்கிறது. சில நேரங்களில் நாமும் இயேசுவை நமக்கு அருகில் வைத்துக்கொண்டு எதிர்மறையானவை கண்டு அச்சப்படுகிறோம்.

(இ) ‘இவர் யாரோ?’ – சீடர்களின் இக்கேள்வி வியப்பின் ஆச்சர்யக்குறி அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் தனக்குள்ளே விடை காண வேண்டிய கேள்வி இது. இந்தக் கேள்வியே இறைவனை நோக்கிய நம் தேடலைக் கூர்மைப்படுத்துகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், தாவீது-பத்சேபா நிகழ்வைத் தொடர்ந்து வருகிற இறைவாக்கினர் நாத்தான் தாவீது செய்த தவற்றை கதையாடல் வழியாக எடுத்துரைக்கிறார். ‘நீயே அம்மனிதன்!’ என அவரை அவருக்கே அடையாளம் காட்டுகிறார். தாவீது உடனடியாக, ‘நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்’ என்று சரணாகதி அடைகிறார்.

நிற்க.

‘கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். அவருடைய வெளிப்பாட்டுக்கு மானிடர்களாகிய நாம் அளிக்கும் பதிலிறுப்பே நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கீழ்ப்படிதல் வழியாகவே நாம் அவரோடு நெருக்கமாகிறோம்’ (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 17).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

One response to “இன்றைய இறைமொழி. சனி, 27 ஜனவரி 2024. இவர் யாரோ?”

  1. srleema Avatar

    There are many points are to meditate and to exam me and to transform me personally i see the reflection with suitable Bibilical picture. Praise the Lord,thank you Fr. Yesu karuna,

    Like

Leave a comment