இன்றைய இறைமொழி
வியாழன், 25 ஜனவரி 2024
பொதுக்காலம் 3-ஆம் வாரத்தின் வியாழன்
திருத்தூதர் பணிகள் 9:1-22. மாற்கு 16:15-18
திருத்தூதர் பவுல் மனமாற்றம், விழா
சவுலே பவுலாக
இன்று புனித பவுலின் மனமாற்றத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
பவுலின் அழைத்தல் நிகழ்வு மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டுள்ளது: (அ) கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், தாயின் கருவில் இருக்கும்போதே கடவுள் தன்னை அழைத்ததாகப் பவுல் கூறுகின்றார் (காண். கலா 1:15). (ஆ) தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் கடவுள் பவுலைத் தடுத்தாட்கொண்டதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். திப 9, 22, 26). (இ) பர்னபா வழியாக பவுல் கிறிஸ்தவத்தைத் தழுவுகின்றார். திருத்தூதர்களுக்குப் பவுலை அறிமுகப்படுத்துகின்ற பர்னபா அவருடைய பாதை மாற்றத்திற்கு உதவி செய்கின்றார்.
பவுலின் அழைத்தல் அல்லது மனமாற்றம் பற்றிய பதிவுகள் தங்களிலே முரண்பட்டாலும் ஒன்றை மட்டும் நமக்கு உறுதியாகச் சொல்கின்றன: பவுல் முழுமையான மாற்றம் பெறுகின்றார். பவுலின் பாதை மாறுகின்றது. பவுலின் இலக்கு மாறுகின்றது.
பவுலின் மனமாற்ற நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி வரும்: தன்னை அனுப்பிய தலைமைச்சங்கத்திற்குப் பவுல் என்ன மறுமொழி கூறியிருப்பார்? அவரின் வாழ்க்கையே மறுமொழியாக இருந்திருக்கும்.
(அ) சவுலின் (பவுல்) மனமாற்றத்தின் முக்கியக் கூறுகள் எவை?
(1) கடவுளுடைய குறுக்கீடு. சிறிய மாற்றத்துக்குச் சிறிய குறுக்கீடுகள் தேவை. பெரிய மாற்றத்துக்கு பெரிய குறுக்கீடுகள் தேவை. சவுலின் பாதை மாற்றம் மிகப் பெரியது என்பதால் கடவுளே இங்கே குறுக்கிட்டு சவுலைத் தடுத்தாட்கொள்கிறார்.
(2) தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும். தன் வாழ்வின் பாதை மாற்றத்தை அவசியம் என சவுல் அறிந்திருந்ததோடு, அதற்கான வாய்ப்பு வரும்போது கீழ்ப்படிதலுடன் சவுல் அதைத் தழுவிக்கொள்கிறார்.
(3) அனனியாவின் உதவி. சவுலின் மனமாற்ற நிகழ்வில் நாம் காணும் அனனியா அனைத்து மானிடக் குழுமத்தின் பிரதிநிதியாக நிற்கிறார். சவுலின் மனமாற்றத்துக்குக் குழுமமும் துணைநிற்கிறது.
(ஆ) இன்றைய நாள் தரும் பாடங்கள் எவை?
(1) யாவருக்கமான அழைப்பு. மனமாற்றம் என்பது பாதை மாற்றம். செய்த செயல்களையே செய்துகொண்டிருந்துகொண்டு புதிய விளைவு நிகழும் என எதிர்பார்ப்பது தவறு. விளைவில் மாற்றம் வேண்டுமெனில் செயல்களிலும் மாற்றம் வேண்டும். பலருடைய வாழ்வில் மனமாற்றம் சவுலின் வாழ்வில் போல அனைவரும் காணக்கூடிய விதத்தில் நடந்தேறுவதில்லை. நம் உள்ளத்தின் ஆழத்தில் மௌனமாகவும் நடந்தேறுகிறது.
(2) கடவுளின் எதிர்பாராத வழிகளைத் தழுவிக்கொள்வது. புதிய நம்பிக்கையாளர்களைச் சிறைப்பிடிக்கும் நோக்குடன் கையில் கடிதம் ஏந்திச் சென்ற சவுல் தன் வழியை விட்டுவிட்டு கடவுளின் வழியைப் பற்றிக்கொள்கிறார். தலைமைச் சங்கத்தின் அதிகாரத்தோடு புறப்பட்டுச் சென்றவர், தலைவராம் கடவுளின் அதிகாரத்துக்கு உட்பட்டவராக மாறுகின்றார். கடவுள் இன்று நம்மைச் சந்திக்கும் வழிகளை நாம் அறிந்து அவற்றுக்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும்.
(3) மனமாற்றத்தின் கனிகள். சவுல் பவுலாக மாறியது வெறும் அடையாளமோ, தலைப்பு மாற்றமோ அல்ல. மாறாக, தன் திருத்தூது ஆர்வத்தாலும் மறைப்பணிப் பயணங்களாலும் தன் எழுத்துகளாலும் கனிகள் தந்தார் பவுல். பாதை மாறுகிற நபர் புதிய பாதையில் நின்றுகொண்டிருக்கக் கூடாது, மாறாக, புதிய பாதையைப் பன்படுத்தித் தன் வாழ்வையும் மற்றவர்களின் வாழ்வையும் மேம்படுத்த வேண்டும்.
‘ஆண்டவரே, நீர் யார்?’ என்னும் சவுலின் கேள்வி விரைவாக, ‘ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்’ (காண். திப 22).
இன்று நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும், மேற்காணும் இரு கேள்விகளை நாம் கேட்கும்போது நம் வாழ்க்கைப் பாதை மாறவே செய்கின்றது.
கடவுளுக்கு எதிராக வாள் எடுத்தவர் கடவுளின் வாளாக மாறுகின்றார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment