இன்றைய இறைமொழி
புதன், 24 ஜனவரி 2024
பொதுக்காலம் 3-ஆம் வாரத்தின் புதன்
2 சாமுவேல் 7:4-17. மாற்கு 4:1-20
மனநிலை மாற்றம்
பனிப்பாறை போன்று நம் இருத்தலை உருவகித்துக்கொண்டால், தண்ணீருக்கு மேலே தெரிகிற 5 சதவிகிதம் நம் வெளிப்புற செயல்கள் என்றால், தண்ணீருக்குள் மறைந்திருக்கிற 95 சதவிகிதம் நம் மனநிலை அல்லது மனப்பாங்கு (disposition or attitude). மனநிலை அல்லது மனப்பாங்கு மாற்றமே நம் இருத்தலை மாற்றுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: விதைப்பவர் உவமை, உவமைகளின் நோக்கம், விதைப்பவர் உவமைக்கு இயேசு தருகிற விளக்கம்.
இறைவார்த்தையாகிய விதை தன்னகத்தே ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. விதையின் விளைச்சல் நிலத்தைப் பொருத்தே அமைகிறது. நான்கு வகைகளான நிலங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன: (அ) கடினமான பாதை, (ஆ) பாறைநிலம், (இ) முள்கள்நிறை மண், (ஈ) நல்ல நிலம். நான்குவகை நிலங்களை நான்குவகை மனநிலைகளாக எடுத்துக்கொண்டால், ‘கடினமான பாதை’ போன்ற மனநிலை ‘விதையை’ (இறைவார்த்தையை) எதிர்க்கிறது. ‘பாறைநிலம்’ போன்ற மனநிலை மேலோட்டமானதாகவும் ஆழமற்றதாகவும் இருக்கிறது. ‘முள்கள்நிறை மண்’ கவனச் சிதறல்கள் நிறைந்த மனநிலையைக் குறிக்கிறது. ‘நல்ல நிலம்’ விதையை ஏற்றுக் கனிதரக்கூடிய மனநிலையை அடையாளப்படுத்துகிறது.
மனநிலை மாற்றத்தைப் பொருத்தே செயல்கள் மாற்றம் பெறுகின்றன.
முதல் வாசகத்தில், தாவீது அரசர் ஆண்டவராகிய கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்ப விரும்புகிறார். ஆனால், ஆண்டவராகிய கடவுளோ, தாவீதின் மேன்மைக்குக் காரணம் தாமே என்று அவருக்கு உணர்த்துவதோடு, கடவுளே அவருக்கு ஓர் ஆலயம் கட்டுவதாக வாக்களிக்கிறார். ஆண்டவராகிய கடவுளை மட்டுமே தாவீது பற்றிக்கொள்ள வேண்டும் என்னும் அழைப்பு அவருக்குத் தரப்படுகிறது. தாவீது செய்ய வேண்டியதெல்லாம், தன் செயல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆண்டவராகிய கடவுளைப் பற்றிக்கொள்ளும் மனநிலையை அல்லது மனப்பாங்கை வளர்த்துக்கொள்வதுதான்.
மேற்காணும் நான்குவகை நிலங்களில் பாறைநிலம்போல தாவீது வேகமாகக் கனிதர நினைக்கிறார். ஆண்டவரோ நல்ல நிலமாக அவர் மாறும் பொருட்டு அவருக்கு ஓய்வையம் பொறுமையையும் எதிர்நோக்கையும் தருகிறார்.
நிற்க.
கூட்டியக்கத்துக்கான மாமன்ற முதல் அமர்வின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு அறிக்கை, கூட்டியக்கச் செயல்கள் (synodal actions) அல்ல, மாறாக, கூட்டியக்க மனப்பான்மையே (synodal attitude) அவசியம் என வலியுறுத்துகிறது (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 16).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment