இன்றைய இறைமொழி. செவ்வாய், 23 ஜனவரி 2024. ஆன்மிக உறவு

இன்றைய இறைமொழி
செவ்வாய், 23 ஜனவரி 2024
பொதுக்காலம் 3-ஆம் வாரத்தின் செவ்வாய்
2 சாமுவேல் 6:12-15, 17-19. மாற்கு 3:31-35

ஆன்மிக உறவு

தன் முப்பதாவது வயதில் இஸ்ரயேலின் அரசராகிற தாவீது, எபிரோனிலிருந்து எருசலேம் வருகிறார். வந்தவுடன் அவர் செய்த முதல் வேலையைப் பற்றிப் பேசுகிறது இன்றைய முதல் வாசகம்.

தாவீது, முதல் வேலையாக,அமைச்சரவையை ஏற்படுத்தவில்லை, புதிய படைக்கலன்கள் வாங்கவில்லை, படைவீரர்களைத் தெரிவுசெய்யவில்லை, தனக்கென ஓர் இல்லத்தைக் கட்டவில்லை. மாறாக, கடவுளின் பேழையை எருசலேமுக்குக் கொண்டுவருகிறார். தன்னை அரசராக ஏற்படுத்திய தன் கடவுளைத் தன் அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

ஆண்டவராகிய கடவுளின் பேழை நகருக்குள் வரும்போது தன் முழு வலிமையோடு நடனமாடுகிறார் தாவீது. நகரே அவருடன் இணைந்து கொண்டாடுகிறது. தாவீது பலி செலுத்துகிறார், மக்களுக்கு ஆசி வழங்குகிறார், அவர்களுக்கு அப்பமும் இறைச்சியும் பழமும் வழங்குகிறார்.

இந்த நிகழ்வு சொல்வது என்ன?

(அ) கடவுளின் உடனிருத்தலே தனக்கு முதன்மையானது என உணர்ந்தவராக இருக்கிறார் தாவீது. முதன்மையானதை முதன்மையானதாகச் செய்கிறார்.

(ஆ) மக்களோடு உறவு ஏற்படுத்திக்கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது கடவுளோடு ஏற்படுத்திக்கொள்கிற உறவுதான் என்பதை அறிந்தவராகவும் இருக்கிறார் தாவீது.

(இ) கடவுளோடு உள்ள ஆன்மிக உறவே வாழ்வுக்கு அடிப்படை என்பதைத் தன் செயல் வழியாக மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரைத் தேடி வருகிறார்கள். வீட்டிற்கு வெளியே நின்று இயேசுவுக்குச் செய்தி அனுப்பியபோது, ‘இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்’ எனப் பதில்மொழி கூறுகிறார்.

உடல் அளவிலான உறவில் தன்னை நோக்கி வந்தவர்களை ஆன்மிக உறவுகள் என்று மறைமுகமாக முன்மொழிந்ததுடன், ஆன்மிக உறவு வழியாக நாம் அனைவரும் அவருக்கு நெருக்கமாக முடியும் என்பதையும் இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

ஆன்மிக உறவுக்காக இயேசு மொழியும் வழி ஒன்றே: ‘கடவுளின் திருவுளம் நிறைவேற்றுவது.’ நம் உடலை அல்ல மாறாக நம் உள்ளத்தை அவரோடு இணைத்துக்கொள்வதையே மேன்மையானதாகக் கருதுகிறார் கடவுள். நம் உள்ளத்தை அவரோடு இணைத்துக்கொள்ளும்போது அவருடைய திருவுளம் நம்மை ஆண்டு நடத்தத் தொடங்குகிறது.

தாவீது இதைத்தான் செய்தார். ஆண்டவராகிய கடவுளே தன் மக்களை ஆளவேண்டும் என நினைத்தார். ஆண்டவரின் பதிலியாகவே தன்னை முன்நிறுத்தினார்.

நிற்க.

அன்னை கன்னி மரியா பற்றிப் பேசுகிற ‘மக்களித்தாரின் ஒளி‘ என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கக் கொள்கை ஏடு பின்வருமாறு மொழிகிறது: ‘கிறிஸ்துவின் மாட்சியை நாடுவதையே முதன்மையாகக் கொண்டிருப்பதன் வழியாக திருஅவை அன்னை கன்னி மரியாளைப் போல மாறி, தொடர்ந்து நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பில் வளர்கிறது. இவ்வாறாக அனைத்திலும் கடவுளின் திருவுளத்தைத் தேர்ந்து தெளிந்து அதை நிறைவேற்றுகிறது’ (‘மக்களினத்தாரின் ஒளி,’ திருஅவையின் தான்மை பற்றிய கொள்கை ஏடு, எண்.65, யூபிலி கி.பி. 2025 துணுக்கு 15).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment