இன்றைய இறைமொழி
சனி, 20 ஜனவரி 2024
பொதுக்காலம் 2-ஆம் வாரத்தின் சனி
2 சாமுவேல் 1:1-4, 11-12, 19, 23-27. மாற்கு 3:20-21
புனித செபஸ்தியார்
ஏறக்குறைய கி.பி. 288-ஆவது ஆண்டில் பேரரசர் டயோக்ளிசியன் ஆட்சிக்காலத்தில் மறைசாட்சியாக உயிர்துறந்த புனித செபஸ்தியாரின் திருநாளைக் கொண்டாடுகிறோம். அஞ்சா நெஞ்சர் என அழைக்கப்படுகிற இவர், காலரா, அம்மை, மற்றும் பெருந்தொற்றுகளிலிருந்து மக்களுக்கு விடுதலை தருபவராகவும், வில்வித்தைக்காரர்கள், படைவீரர்கள், அம்பு எய்பவர்களின் பாதுகாவலராகவும் கொண்டாடப்படுகிறார்.
(அ) நம்பிக்கையும் துணிவும்
படைவீரராக இருந்த காலத்தில் கிறிஸ்தவம் தழுவிய செபஸ்தியார் தன் கிறிஸ்தவ நம்பிக்கையை மறைத்து வைக்க விரும்பவில்லை. நம்பிக்கையை வெளிப்படுத்துவது தனக்குத் துன்பம் வருவிக்கும் என்ற நிலை இருந்தபோதிலும் தன்னுடைய நம்பிக்கையைத் துணிவுடன் அறிக்கையிடுகிறார் நம் புனிதர்.
(ஆ) மீளுந்தன்மை (அ) நெகிழ்திறமும் (ஆங்கிலத்தில், ‘ரெஸிலியன்ஸ்’) எதிர்நோக்கும்
துன்பத்தை எதிர்கொண்டு ஏற்று அதிலிருந்து மீண்டு வருவதே மீளுந்தன்மை அல்லது நெகிழ்திறம். நம் முதற்பெற்றோர் இப்பண்பைக் கொண்டிருந்தனர். ஆகையால்தான், ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டபோது தங்களுக்கென புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்களால் முடிந்தது. நம் அனைவருக்குமே இந்தப் பண்பு இருக்கிறது. செபஸ்தியாரிடம் இந்தப் பண்பு நன்றாக வெளிப்பட்டது. அம்புகள் பல அவருடைய உடலைக் குத்திக் கிழித்தாலும், அவருடைய உள்ளம் உறுதியாக இருந்ததால் அவர் உயிரைத் தக்கவைத்துக்கொண்டார். வாழ்க்கையை இரண்டாம் முறையாக இவர் பெற்றுக்கொள்ளக் காரணம் இக்கட்டான நேரத்திலும் அவர் கொண்டிருந்த எதிர்நோக்கே!
(இ) மறைசாட்சியத்தைத் தாண்டி
கிறிஸ்தவ நம்பிக்கை பிறரன்புச் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் செபஸ்தியார். படைவீரராக இருந்த காலத்தில் தன் சக வீரர்கள்மேலும் தனக்குக் கீழிருப்பவர்கள்மேலும் பரிவுகொண்டு விளங்கினார் இவர்.
இன்றைய நற்செய்தி வாசகம் (நாளுக்குரியது, மாற்கு 3:20-21), இயேசுவின் மீளுந்தன்மை அல்லது நெகிழ்திறத்துக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. இரண்டு அருள்வாக்கியங்களே உள்ள இந்த வாசகம் பொருள் பொதிந்ததாக இருக்கிறது.
‘இயேசு தம் சீடர்களுடன் வீட்டுக்குச் செல்கிறார்‘ – நடமாடும் போதகராக இயேசு இருந்தாலும் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருகிறார். ‘வீட்டுக்கு வருதல்’ அல்லது ‘வீடு திரும்புதல்’ என்பதை வேர்களுக்குத் திரும்புதல், தன்நிலை அறிதல் எனப் புரிந்துகொள்ளலாம். லூக்கா 15-இல் நாம் காணும் காணாமற்போன இளைய மகன் வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வருதல் நம் வாழ்வில் மிக இன்றியமையாதது. நம் வீடு நமக்கென சுதந்திரத்தை (கட்டின்மையை) கொடுக்கிறது. நம் வீடு நமக்குத் தன்னம்பிக்கை தருகிறது. வெளி உலகை நோக்கி இன்னும் அதிகம் செல்வதற்கு நம் உள்ளத்திற்குப் புத்துணர்வும் உடலுக்கு ஓய்வும் தருகிறது வீடு.
‘மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்களால் உணவருந்தவும் முடியவில்லை’ – இயேசு அதிகம் தேடப்படுபவராக இருக்கிறார். கூட்டத்தின் தேவைகளை நிறைவு செய்துகொண்டிருந்ததால் – போதித்தல், நோய் நீக்குதல், பேய் ஓட்டுதல் – இயேசுவும் சீடர்களும் உணவருந்த இயலவில்லை. ஓய்வுக்கென இல்லம் வந்தவர், ஓய்வு நேரத்தையும் பணி நேரமாக மாற்றிக்கொள்கிறார்.
‘உறவினர் அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். அவர் மதிமயங்கி இருப்பதாக மக்கள் பேசிக்கொண்டனர்’ – இயேசுவுக்கு அருகில் இருந்தவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை இச்சொற்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ‘மதிமயங்கி இருத்தல்’ என்பது கிரேக்கப் பதத்தில் ‘அவருக்கு வெளியே இருந்தார்’ எனத் தரப்பட்டுள்ளது. தனக்கு வெளியே இருப்பது என்பது தன்மையப்போக்கே இல்லாமல் இருப்பது.
தமக்கென உள்ள வீட்டுக்கு இயேசு வந்தாலும் அவர் தமக்கு வெளியே இருக்கிறார். இயேசுவின் பிறர்மைய வாழ்வு நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் அவர் உள்நோக்கியும் வெளிநோக்கியும் வாழ்கிறார். தொடர்ந்து வெளிநோக்கிச் செல்வதே மீளுந்திறம்.
இன்றைய முதல் வாசகத்தில் (நாளுக்குரியது) சவுல் மற்றும் யோனத்தானின் இறப்பு செய்திகேட்டு அழுகிறார் தாவீது. தாவீதின் சொற்கள் அவர் சவுல் மற்றும் யோனத்தான்மேல் கொண்டிருந்த முறையே மதிப்பு, அன்பு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. எதிரியின் அழிவுகண்டு மகிழாமல், சவுலைத் தனக்கு முன்னவர் என்றும், யோனத்தான் தன் இணையர் என்றும் தாவீது கொண்டாடுவது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.
பெருந்தன்மை, மீளுந்திறம், வீடு திரும்புதல், தனக்கு வெளியே செல்தல் என்னும் பாடங்களை நமக்குக் கொடுக்கிறார்கள் தாவீது, இயேசு, செபஸ்தியார்.
நிற்க.
‘திருஅவை தன்மையம் கொண்டதாக இருத்தல் கூடாது. மாறாக, தனக்கு வெளியே அது தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலிலும் அவரைச் சந்தித்து அவரைக் கடவுளிடம் அழைத்து வர வேண்டும்’ (காண். ‘மகிழ்ச்சியும் எதிர்நோக்கும்‘, இன்றைய உலகில் திருஅவை கொள்கை ஏடு, யூபிலி கி.பி. 2025 துணுக்கு 13).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment