இன்றைய இறைமொழி. வெள்ளி, 19 ஜனவரி 2024. தாம் விரும்பியவர்களை

இன்றைய இறைமொழி
வெள்ளி, 19 ஜனவரி 2024
பொதுக்காலம் 2-ஆம் வாரத்தின் வெள்ளி
1 சாமுவேல் 24:2-20. மாற்கு 3:13-19

தாம் விரும்பியவர்களை

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, இறையழைத்தல் பற்றிய ஒரு மெய்நிகர் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது நடைபெறும் இறையழைத்தல் முகாம் முறை பற்றியும், அருள்பணி மற்றும் துறவற வாழ்வுப் பயிற்சிக்கான மாணவர்கள் மற்றும் மாணவியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியும் பேசப்பட்டது. இக்கருத்தரங்கில் பேசியவர்களில் அனைவரும் தவறாமல் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அதாவது, வருகின்ற மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தங்களின் முழு விருப்பத்தோடு வர வேண்டும். ஏனெனில், கட்டாயத்தின்பேரில் வருபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் பன்னிரு திருத்தூதர்களை அழைக்கின்ற நிகழ்வை வாசிக்கின்றோம்.

எந்தவொரு இறையழைத்தல் முகாமும் நடத்தாமல், யாருடைய பரிந்துரைக் கடிதமும் இல்லாமல், விளையாட்டுப் போட்டிகள், எழுத்துத் தேர்வுகள் இல்லாமல், யாருடைய பயோ டேட்டாவும் சேகரிக்கப்படாமல் இனிதே நிறைவேறுகிறது இயேசு நடத்திய இறையழைத்தல் முகாம்.

‘மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களை அழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தனர்’ எனப் பதிவு செய்கிறார் மாற்கு.

மலைமேல் இயேசு ஏறியது மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: ஒன்று, மலையில் அவர் இறைவேண்டல் செய்கின்றார். ஆக, தம் தந்தையின் துணையோடு தம் திருத்தூதர்களைத் தெரிவு செய்கின்றார். இரண்டு, மோசே மலைமேல் ஏறி நின்று இஸ்ரயேல் குலங்கள் பன்னிரண்டை ஒருங்கிணைத்தது போல, இயேசு புதிய இஸ்ரயேலின் அடித்தளத்தை உருவாக்குகின்றார். மூன்று, இந்த மலையில் தொடங்குகிற இவர்களுடைய பயணம் தாபோர் மலை, கல்வாரி மலை எனத் தொடரும்.

இரு நோக்கங்களுக்காக அவர்களை அழைக்கின்றார் இயேசு:

‘தம்மோடு இருக்கவும், நற்செய்தி பறைசாற்ற மற்றும் தீய ஆவிகள் மேல் அதிகாரம் கொண்டிருக்க அனுப்பப்படவும்’.

இயேசு, முதலில், தம் திருத்தூதர்களைத் தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகின்றார்.

இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

‘தனியாய் எவரும் சாதிப்பதில்லை’ என்பதை அறிந்தவர் இயேசு என்பதை இங்கே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய நம் கலாச்சாரம் தனியாகச் செயல்படுவதையே முன்வைக்கிறது. இணைந்து செயல்படுதலின் வாழ்தலின் மேன்மையை உணர்ந்தவராக இருக்கிறார் இயேசு. குழுமம் என்பது நம் இருத்தலுக்கு வடிவம் கொடுப்பதோடு, நம் இயக்கத்தையும் உந்தித் தள்ளுகிறது. சற்று நேரம் அமர்ந்து யோசித்தால் நாம் யாரும் தனிநபர் அல்லர். நம்மை அறியாமலேயே நம் வேர்கள் ஏதோ ஒரு குழுமத்தின் வேர்களோடு பிண்ணிக்கிடக்கின்றன.

இந்த நிகழ்வு தரும் பாடங்கள் எவை?

(அ) சீடத்துவத்தின் இரு திசைகள்: அழைத்தலும் அனுப்பப்படுதலும்

அழைக்கிற அனைவரும் அனுப்பப்படுகிறார்கள். வேரூன்றுகிற மரம் அனைத்தும் நிழலும் கனியும் தரவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. நம் அழைக்கப்பட்ட நிலையையும், அனுப்பப்படுகிற பணியையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

(ஆ) அவரோடு இருத்தல்

தம்மோடு இருப்பதற்காக இயேசு சீடர்களை அழைக்கிறார். இயேசுவுடன் உள்ள தொடர்பு அவருக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். இயேசுவோடு இணைந்த நிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் இணைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

(இ) பெயர்கள்

திருத்தூதர்கள் அனைவருடைய இயற்பெயர்களும், மாற்றுப் பெயர்களும், அடையாளங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுடைய வலுவின்மை நமக்கு இறுதியில் தெரியவரும். அவர்களின் குணங்கள் மற்றும் இயல்புக்காக அல்ல, மாறாக, தம் விருப்பத்தின்பொருட்டே இயேசு அவர்களை அழைக்கிறார். கடவுளின் பார்வையில் நாம் பெயரிடப்பட்டுள்ளோம். நம் ஒவ்வொருவருடைய தான்மையும் கொண்டாடப்படுகிறது. கடவுள் நம்மேல் விருப்பம் கொண்டுள்ளார்.

இன்றைய முதல் வாசகத்தில், தாவீதின் பெருந்தன்மையையும் சவுலின் மனமாற்றத்தையும் வாசிக்கிறோம். சவுலைக் கொல்வதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் தாவீது அவரைக் கொல்லாமல் விடுவது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. தாவீதின் பெருந்தன்மை சவுலின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைகிறது. ‘தீயோரிடமிருந்து தீமை பிறக்கிறது’ என்னும் பழமொழியை மேற்கோள் காட்டுகிறார் தாவீது. நம் இயல்பைப் பொருத்தே நம் செயல்பாடும் அமைகிறது.

நிற்க.

‘உலகின் ஒளியாகிய கிறிஸ்துவோடு இணைந்திருக்கவே மானிடர் அனைவரும் அழைப்பு பெறுகிறார்கள். அவரிடமிருந்தே நாம் (பணிக்கு) புறப்பட்டுச் செல்கிறோம். அவர் வழியாகவே நாம் வாழ்கிறோம். அவரை நோக்கியே நம் வாழ்வியக்கம் உள்ளது’ (மக்களினத்தாரின் ஒளி Lumen Gentium, எண். 3, யூபிலி கி.பி. 2025 துணுக்கு 12).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment