இன்றைய இறைமொழி. புதன், 17 ஜனவரி 2024. ஐந்து கூழாங்கற்கள்!

இன்றைய இறைமொழி
புதன், 17 ஜனவரி 2024
பொதுக்காலம் 2-ஆம் வாரத்தின் புதன்
1 சாமுவேல் 17:32-33, 37, 40-50. மாற்கு 3:1-6

ஐந்து கூழாங்கற்கள்!

இளவல் தாவீது பெலிஸ்தியன் கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிகொள்ளும் நிகழ்வே இன்றைய முதல் வாசகம். இந்த நிகழ்வை நாம் பல முறை கேட்டிருந்தாலும், அல்லது நாடகமாகப் பார்த்திருந்தாலும், நிகழ்வில் காணப்படும் சில நுணுக்கங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘ஐந்து கூழாங்கற்கள்.’ ‘கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றி கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார்’ என நிகழ்வை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

கோலியாத்தை எதிர்கொள்வதற்கு தாவீது தானே முன்வருகிறார். தானே சென்று ஐந்து கூழாங்கற்களைத் தெரிவு செய்கிறார். ‘வழவழப்பான‘ கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்தார் எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். கவண் பயன்படுத்துபவர்கள் வழக்கமாக சொறசொறப்பான கற்களையே பயன்படுத்துவார்கள். வழவழப்பான கற்கள் கவணிலிருந்து கழன்றுவிடும் அபாயம் இருக்கிறது. ஐந்து கற்களைத் தேர்ந்தெடுக்கிறார் தாவீது. முதல் கல் தவறினால் இரண்டாவதைப் பயன்படுத்தலாம் என்பது அவருடைய கணிப்பாக இருக்கலாம். ஆனால், போரில் இரண்டாவது கல்லுக்கு வாய்ப்பு என்பதே கிடையாது. முதல் கல் தவறினால் எதிரி சுறுசுறுப்பாகி எதிர்தாக்குதல் நடத்தத் தொடங்குவார். மூன்று, ஐந்து கற்களைப் பார்த்துப் பார்த்து எடுத்தாலும், கடைசியில் தாவீது எறிந்த கல் என்னவோ எதார்த்தமாகத் தன் கைக்கு வந்த ஒன்றைத்தான். அந்த ஒரே கல் கோலியாத்தின் நெற்றியில் பதிகிறது. வழவழப்பான கற்கள் வழுக்கிச் செல்லுமே தவிர, ஆழமாகப் பதிவதில்லை.

கற்களின் வழவழப்பு, ஐந்து கற்கள், நெற்றியில் கல் – இம்மூன்று சொல்லாடல்கள் வழியாக வாசகர் அறிந்துகொள்வது என்ன? தாவீதுக்கு வெற்றி கிடைத்தது அவருடைய கவணாலும் கல்லாலும் அல்ல. ஏனெனில், பொருள்களைச் சார்ந்த வெற்றி என்றால், கோலியாத்தின் வெற்றியும் பொருள்களைச் சார்ந்தே – வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் வருகிறான் அவன் – இருக்கிறது.

தாவீது பெற்ற வெற்றி அவருடைய கவணாலும் கல்லாலும் அல்ல, மாறாக, ஆண்டவரால்தான் என்பதே ஆசிரியர் வழங்கும் செய்தி.

தாவீது ஒவ்வொரு கட்டமாக வளர்வதை நாம் இங்கே உணர முடிகிறது: (அ) சவுலை நாடுகிறார், (ஆ) கற்களை நாடுகிறார், (இ) கடவுளை நாடுகிறார்.

நம் நம்பிக்கைப் பயணத்திலும் முதலில் நாம் மற்றவர்கள் கற்றுக்கொடுத்ததை நாடுகிறோம். இரண்டாவதாக, இறைவேண்டல் கருவிகளையும் செய்முறைகளையும் நாடுகிறோம். இறுதியில் கடவுளிடம் சரணடைகிறோம். சரணடையும்போது தீமையை நம்மால் வெற்றிகொள்ள முடிகிறது.

நற்செய்தி வாசகத்தில், ஓய்வுநாள் பற்றிய இன்னொரு சர்ச்சையை எதிர்கொள்கிறார். ஓய்வுநாளில் இயேசு செய்த வல்ல செயல் (நல்ல செயல்) அவருக்கு எதிராக பரிசேயர்களும் ஏரோதியர்களும் சூழ்ச்சி செய்யக் காரணமான ஒன்றாக மாறுகிறது.

பரிசேயர்களின் பிடிவாத உள்ளத்தைப் பொருட்படுத்தாமல் தாம் விரும்பிய நன்மையை ஓய்வுநாளில் செய்துமுடிக்கிறார். இவ்வாறாக, நோயின்மேலும் நேரத்தின்மேலும் தமக்கு அதிகாரம் உண்டு என அவர்களுக்கு உணர்த்துகிறார்.

இன்று நாம் கொண்டாடுகிற பெரிய அந்தோணியார் கடவுளை மட்டுமே பற்றிக்கொண்டார்.

நிற்க.

நம் கண்களை சக மனிதர்களிடமிருந்தும், நாம் சார்ந்திருக்கும் படைக்கலன்களிலிருந்தும் திருப்பும்போது கடவுளை முழுமையாகப் பற்றிக்கொள்கிறது. அதே வேளையில், கடவுள்மேல் நம்பிக்கை இருந்தாலும் கவணைப் பயன்படுத்தவும் நாம் அறிந்திருக்க வேண்டும். ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என நாம் மேற்கொள்ளும் பயணத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் இதுவே. (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 10).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment