இன்றைய இறைமொழி
செவ்வாய், 16 ஜனவரி 2024
பொதுக்காலம் 2-ஆம் வாரத்தின் செவ்வாய்
1 சாமுவேல் 16:1-13. மாற்கு 2:23-28
ஆண்டவர் பார்ப்பது போல!
தாவீதின் இல்லத்தில் கடவுள், கடவுளின் இல்லத்தில் தாவீது என இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களைச் சுருக்கிவிடலாம். ஆண்டவராகிய கடவுளின் பார்வையில் சவுல் தீயதாகச் செயல்பட்டதால், ஆண்டவர் அவரை விலக்கிவிட்டுத் தாவீதைத் தெரிந்துகொள்கிறார். தாவீதின் இல்லத்துக்குச் செல்லுமாறு ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் சாமுவேலைப் பணிக்கிறார்.
எலியாபின் தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்த சாமுவேல் இவரே அரசராக இருக்க வேண்டியவர் என நினைக்கிறார். ஏனெனில், இதற்கு முந்தைய அரசராகிய சவுல் நல்ல உடல் தோற்றமும் உயரமும் உடையவராக இருந்தார். ஆனால், ஆண்டவராகிய கடவுள், ‘மனிதர் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார்’ என்று சொல்லி, சாமுவேலுக்குக் கற்றுத் தருகிறார்.
நற்செய்தி வாசகத்தில், ஓய்வுநாளில் கதிர்கள் கொய்து உண்ட சீடர்களைக் கடிந்துகொள்கிற பரிசேயர்களின் பார்வையைப் புதியதாக்குகிறார் இயேசு. தாவீது அரசர் விதிவிலக்காகச் செயல்பட்டதுபோல தமக்கும் அனைத்தும் விதிவிலக்கே என்று தெளிவுபடுத்துகிறார் இயேசு. இவ்வாறு சொல்வதன் வழியாக தாம் தாவீதின் மகன் என்றும், மானிட மகன் என்றும், ஓய்வுநாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே என்றும் மொழிகிறார்.
இளவல் தாவீதின் முகத்தில் இஸ்ரயேலின் அரசரைக் காணுமாறு சாமுவேலுக்குக் கற்றுக்கொடுக்கிறார் கடவுள்.
தம் முகத்தில் தாவீதின் மகனையும் மானிட மகனையும் காணுமாறு பரிசேயர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு.
இன்றைய வாசகங்கள் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன?
உலகின் பார்வையில் உயர்ந்தவராக இருப்பவர் கடவுளின் பார்வையில் ஏற்புடையவர் ஆகாமல் போகலாம். கடவுள்தாமே இளவல்களை உயர்த்துகிறார். உயர்வும் தாழ்வும் ஆண்டவராகிய கடவுளிடமிருந்தே வருகின்றன என உணர்ந்துகொள்வோம்.
குருக்கள் மட்டுமே நுழையக்கூடிய இறைஇல்லத்தில் தாவீது நுழைந்தது விதிவிலக்கு. கடவுளின் பார்வையில் விதிவிலக்கும் சட்டமாக மாற இயலும்.
நிற்க.
கூட்டியக்கத் திருஅவை, ஒருபக்கம் உண்மை மற்றொரு பக்கம் இரக்கம் என்னும் இரு புலங்களுக்கு நடுவே நின்று இரண்டையும் சமன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 9).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment