இன்றைய இறைமொழி. திங்கள், 15 ஜனவரி 2014. இதைவிட அது!

இன்றைய இறைமொழி
திங்கள், 15 ஜனவரி 2014
பொதுக்காலம் 2-ஆம் வாரத்தின் திங்கள்
1 சாமுவேல் 15:16-23. மாற்கு 2:18-22

இதைவிட அது!

நமக்கு முன் உள்ள இரண்டு விடயங்களைப் பகுத்தாய்ந்து கீழானதை விடுத்து, மேலானதைப் பற்றிக்கொள்தல் நலம்.

முதல் வாசகத்தில் சவுல் அரசருக்கு நெருக்கடி ஒன்று ஏற்படுவதை வாசிக்கிறோம். அமலேக்கியருடனான போரில் சவுல் வெற்றி பெறுகிறார். எதிரிகளுடன் எந்தவொரு போர் நடந்தாலும் அங்குள்ளவர்களும் அங்குள்ளவையும் முழுமையாக அழிக்கப்பட வேண்டும் என்பது கடவுளின் கட்டளை. ஆனால், ஆட்டுக்கிடாய்களில் சிறந்தவற்றையும் சில கொள்ளைப் பொருள்களையும் ஆண்டவருக்காகப் பலியிடுவதற்கென சவுல் ஒதுக்கி வைக்கிறார். இது ஆண்டவரின் பார்வையில் தீமையானதாகப் படுகிறது.

சவுல் செய்த இச்செயலின் நோக்கம் மேலானதாக – ஆண்டவருக்காகப் பலியிடுவதற்காக – இருந்தாலும், இச்செயல் ஏற்புடையதல்ல என்பதைச் சாமுவேல் வழியாகக் கடிந்துகொள்கிறார் ஆண்டவராகிய கடவுள். சவுலின் செயல் மூன்று எதிர்மறையானவற்றைக் கொண்டிருக்கிறது:

(அ) தன் மேன்மை கடவுளால் வந்தது என்பதை சவுல் மறந்துவிடுகிறார். கடையனாக இருந்த தம்மைக் கடவுளே உயர்த்தினார் என்பதை சவுல் மறந்துவிட்டு, கடவுளை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்.

(ஆ) கொள்ளைப்பொருள்கள்மேல் சவுல் பார்வையைச் செலுத்தக் காரணம் அவருடைய பேராசை. ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றுவதில் – அனைவரையும் அனைத்தையும் கொன்றழிப்பதில் – சமரசம் செய்கிறார்.

(இ) தன் செயலுக்கான பொறுப்பை படைவீரர்கள்மேல் சுமத்துகிறார். அவர்கள் தவறு செய்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் இருந்துவிட்டு, பின், அவர்கள் தவறு செய்ததாகச் சொல்கிறார்.

ஒட்டுமொத்தமாக, சவுல் ஆண்டவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார். பலிகள் செலுத்துவதை விடக் கீழ்ப்படிவது மேலானது என உணர மறந்துவிட்டார். கீழ்ப்படிதல் உள்ளம் சார்ந்தது. பலிகள் செலுத்துவது உடல் சார்ந்தது.நம் உள்ளத்தை இறைவனின் விருப்பத்துக்கு உட்படுத்துவதே கீழ்ப்படிதல். கீழ்ப்படிய மறுக்கும் ஒருவர் தம் உள்ளத்தில் கலகம் செய்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், நோன்பு பற்றிய கேள்வியை முன்வைக்கின்றனர் சிலர். நோன்பு இருப்பதே மேலானது என நினைத்தவர்களிடம், மணமகனுடைய இருத்தலைக் கொண்டாடுவதே மேன்மையானது எனக் கற்பிக்கிற இயேசு, தொடர்ந்து, பழையதைவிடப் புதியது மேன்மையானது என்பதைக் கற்பிக்க, புதிய துணி, புதிய திராட்சை இரசம் என்னும் உருவகங்களை வழங்குகிறார்.

நம் ஆன்மிக வாழ்வில் நாம் தேர்ந்து தெளிய நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள். பலிசெலுத்துதல், நோன்பு இருத்தல் போன்றவை எல்லா நேரத்திலும் நலமானவை எனச் சொல்ல இயலாது. சில நேரங்களில் அவற்றைவிட மேலானவையும் – கீழ்ப்படிதல், மணமகனுடைய இருத்தலைக் கொண்டாடி மகிழ்தல் – இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

நிற்க.

கூட்டியக்கத் திருஅவைக்கான பயணத்தில் தேர்ந்து தெளிதல் முதன்மையான பங்கு வகிக்கிறது (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 8).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment