இன்றைய இறைமொழி
சனி, 13 ஜனவரி 2024
பொதுக்காலம் முதல் வாரத்தின் சனி
1 சாமுவேல் 9:1-4, 17-19, 10:1. மாற்கு 2:13-17
பணி மாற்றம்
கடவுள் நம்மைத் தேடி வந்து தெரிந்துகொள்ளும் நாளில் நம் பணியும் பயணமும் வாழ்வும் மாறுகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், தன் தந்தையின் கழுதைகளைத் தேடி வந்த சவுல் இஸ்ரயேல் மக்களின் அரசராக மாறுகிறார். நற்செய்தி வாசகத்தில், சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த அல்பேயுவின் மகன் லேவி (மத்தேயு) திருத்தூதராகவும் (நற்செய்தியாளராகவும்) மாறுகிறார்.
இவ்விரு நிகழ்வுகளையும் இறையழைத்தல் நிகழ்வுகளாக எடுத்துக்கொள்வோம். சவுல் அரசராவதற்கான அழைத்தல் பெறுகிறார். மத்தேயு திருத்தூதராவதற்கான அழைத்தல் பெறுகிறார். சவுல் தன் தந்தையின் பணியில் ஈடுபட்டிருக்கும்போது திருக்காட்சியாளரான சாமுவேல் அவரை எதிர்கொள்கிறார். மத்தேயு சுங்கச் சாவடியில் அமர்ந்திருக்கும்போது இயேசு அவரை எதிர்கொள்கிறார். இருவருமே தங்கள் பழைய வாழ்க்கைக்கு மீண்டும் செல்லப்போவதில்லை. இருவருமே தங்கள் அழைத்தலுக்கு உடனடியாகப் பதிலிறுப்பு செய்கிறார்கள். இரு நிகழ்வுகளிலும் அழைத்தல் நிகழ்வுக்குப் பின்னர் விருந்து நடைபெறுகிறது. விருந்து என்பது மகிழ்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.
இந்த நிகழ்வுகள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நம் கடவுள் ஆச்சர்யங்களின் கடவுள். நம் கைகளை அவர்தம் அருள்கொடைகளால் நிரப்பித் திக்குமுக்காடச் செய்கிறார்.
(ஆ) சிறியவற்றிலிருந்து நம்மை அவர் பெரியவற்றுக்கு அழைக்கும்போது முந்தைய சிறியவற்றை நாம் முழுமையாகக் கைவிட வேண்டும். சவுல் கழுதைகளை விட வேண்டும். மத்தேயு சுங்கச் சாவடியை விட வேண்டும்.
(இ) நம்மை மேன்மையான பணிக்கும் வாழ்க்கைக்கும் அழைக்கிற கடவுள் நம்மோடு துணைநிற்கிறார், உடன் வருகிறார். கடவுளின் உடனிருப்பு அருள்பொழிவு வழியாக சவுலுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இயேசுவின் உடனிருப்பு விருந்து வழியாக மத்தேயுவுக்கு அறிவிக்கப்படுகிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்னும் மையக்கருத்தோடு யூபிலி கி.பி. 2025-ஐ நோக்கி நாம் நடைபோடுகிறோம். பயணத்தின் நிறைவுக்கு அடிப்படையாக இருப்பது எதிர்நோக்கு. ‘அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது. ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது’ (காண். உரோ 5:5).(யூபிலி கி.பி. 2025 துணுக்கு 8).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment