இன்றைய இறைமொழி
வெள்ளி, 12 ஜனவரி 2024
பொதுக்காலம் முதல் வாரத்தின் வெள்ளி
1 சாமுவேல் 8:4-7, 10-22. மாற்கு 2:1-12
நம்பிக்கையும் எதிர்ப்பும்
மாற்கு நற்செய்தியில் நாம் காணும் இயேசு அடுத்தடுத்து செயல்கள் செய்துகொண்டே இருக்கிறார். போதனை, வல்ல செயல்கள் என அடுத்தடுத்து அவருடைய பணி நகர்ந்துகொண்டே இருக்கிறது. இயேசுவின்மேல் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைநூல் அறிஞர்கள் அவருக்குக் காட்டிய எதிர்ப்பும் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் தெரிகின்றன.
இரண்டு வகைகளான மனிதர்களை நாம் இங்கே பார்க்கிறோம்.
முதல் வகையினர், இயேசுவின்மேல் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் முடக்குவாதமுற்றவருக்கு அவர் நலம் தரும்பொருட்டு முடக்குவாதமுற்றவரை அவரிடம் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். மேலும் நிகழ்வின் இறுதியில் வருகிற ‘அனைவரும்’ இயேசு நிகழ்த்திய வல்ல செயல் கண்டு மலைத்துப் போகிறார்கள்.
இரண்டாம் வகையினர், இயேசுவுக்கு எதிராக முணுமுணுக்கிற மறைநூல் அறிஞர்கள். ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று இயேசு முடக்குவாதமுற்றவரிடம் சொன்னபோது, இயேசு கடவுளைப் பழிக்கிறார் எனத் தங்கள் உள்ளங்களில் எண்ணிக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் கேள்விக்குப் பதில் தராமல் கடின உள்ளத்தோடு இருந்தார்கள்.
இயேசுவிடம் வந்த நால்வர் கூரையைப் பிரித்து திறப்பு உண்டாக்குகிறார்கள். இயேசு மனிதர்களின் உள்ளத்தைத் திறந்து அங்கே உள்ள எண்ணங்களை அறிபவராக இருக்கிறார்.
இயேசுவின் வல்ல செயல் அவருடைய முந்தைய வல்ல செயல்களிலிருந்து நான்கு நிலைகளில் மாறுபடுகிறது: (அ) தொட்டு நலமாக்குவதற்குப் பதிலாகச் சொற்களால் நலம் தருகிறார். (ஆ) நோயை மட்டும் குணமாக்காமல் நோயின் ஆதாரமாகக் கருதப்பட்ட பாவங்களை மன்னிக்கிறார். (இ) மறைவாக இல்லாமல் பொதுவான இடத்தில் மிகப்பெரிய கூட்டத்தின்முன் வல்ல செயல் நடக்கிறது. (ஈ) ‘மானிட மகன்’ என்று தம்மையே அழைக்கிறார். இந்தத் தலைப்பு இயேசுவின் பணியை வரையறுப்பதாக அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) நிகழ்வின்படி இயேசுவிடம் மற்றவர்கள் வருவதக்கு கூட்டம் ஒரு தடையாக இருக்கிறது. ஆனால், அந்தக் கூட்டமே இறுதியில் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கிறது. சீடத்துவத்துக்கு நாம் தடையாக இருக்கிறோமா, அல்லது மற்றவர்கள் நம்பிக்கை கொள்ள, நலம் பெற அந்த நால்வர் போல, உதவி செய்கிறோமா?
(ஆ) நம்பிக்கை கொள்தலும் முணுமுணுத்தலும் நாம் காணும் இரு பதிலிறுப்புகளாக உள்ளன. நம்பிக்கை கொள்வதற்கு நாம் நிறையத் தடைகளைக் கடக்க வேண்டும்.
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கென ஓர் அரசரை ஏற்படுத்துமாறு சாமுவேலிடம் வேண்டுகிறார்கள். ஆளுகை செய்கிற அரசன் ஏற்படுத்தும் எதிர்மறையான பாதிப்புகளை மக்களிடம் எடுத்துரைக்கிறார் சாமுவேல். ஆனால், மக்கள் தங்கள் விண்ணப்பத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.
நிற்க.
மக்கள் இயேசு ஆற்றிய போதனைகள், வல்ல செயல்களின் பயனாளர்களாக இருப்பதோடல்லாமல் அவர்மேல் நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறார்கள். இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பாலமாக நால்வரும், சுவராக மறைநூல் அறிஞர்களும் இருக்கிறார்கள். தூரத்தில் இருந்தவர்கள் இயேசுவைக் கண்டுணர்ந்தார்கள். அருகில் இருந்தவர்கள் இயேசு யார் எனக் கண்டுணரவில்லை. இடத்தின் தூரமல்ல, இதயத்தின் தூரமே நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 7).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment