இன்றைய இறைமொழி. வியாழன், 11 ஜனவரி 2024. நோ ஆட்டோமேடிக் வெற்றி!

இன்றைய இறைமொழி
வியாழன், 11 ஜனவரி 2024
பொதுக்காலம் முதல் வாரத்தின் வியாழன்
1 சாமுவேல் 4:1-11. மாற்கு 1:40-45

நோ ஆட்டோமேடிக் வெற்றி!

வெளிப்புற சடங்குகளும் அடையாளங்களும் பொருள்களும் நம்மைக் காப்பாற்ற இயலாது, மாறாக, கடவுளின் விருப்பமும் நம் அக இயல்பே நம்மைக் காப்பாற்ற இயலும் எனக் கற்பிக்கிறது இன்றைய முதல் வாசகம்.

முதல் வாசகத்தின் சூழல்: பெலிஸ்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையேயான போர். போரில் இஸ்ரயேல் மக்கள் நான்காயிரம் பேர் இறக்கின்றனர். தங்கள் தோல்விக்கான காரணத்தை ஆய்ந்தறிகின்ற இஸ்ரயேலின் பெரியோர்கள் தங்களிடம் கடவுளின் உடன்படிக்கைப் பேழை இல்லாததால் தாங்கள் தோல்வி அடைந்ததாக எண்ணி, பேழையை சீலோவிடமிருந்து கொண்டு வருகின்றனர். பேழை நகருக்குள் வந்தவுடன் கடவுளின் மாட்சி தங்களிடம் வந்துவிட்டதை உணர்ந்து ஆர்ப்பரித்து அக்களிக்கின்றனர். இந்த ஆர்ப்பரிப்பு எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. ஆனால், மறுபடியும் நடக்கின்ற போரில், இஸ்ரயேல் மக்கள் முப்பதாயிரம் பேர் மடிகின்றனர். ஏறக்குறைய பத்து மடங்கு அதிக மக்கள் இறக்கின்றனர்.

கடவுளின் பேழை தங்களோடு இருந்தும் இஸ்ரயேல் மக்கள் தோல்வி அடைந்தது ஏன்? மூன்று காரணங்கள்:

ஒன்று, வெறும் வெளிப்புற அடையாளங்கள் மேல் நம்பிக்கை. அதாவது, கடவுளின் உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாக இருப்பதை விடுத்து, அந்த உடன்படிக்கைப் பேழை தங்களோடு இருந்தால் போதும் என்ற மனநிலையில் இஸ்ரயேல் மக்கள் இருந்தனர்.

இரண்டு, தலைவர்களின் தகுதியின்மை. உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் ஏலியின் புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் என பதிவு செய்கின்றார் ஆசிரியர். இதற்கு முந்தைய பகுதியில் இவ்விருவரும் கடவுளுக்கென படைக்கப்பட்ட பலிப்பொருள்களைத் தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். மேலும், சந்திப்புக் கூடாரத்தில் பணிபுரிகின்ற பெண்களோடு தகாத உறவில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக, நிர்வாகம் மற்றும் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபடுகின்றனர். புதல்வர்கள் தங்கள் தந்தையின் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவில்லை. அதாவது, ‘என்னை விட்டால் யாரும் இல்லை’ என்ற மேட்டிமை உணர்வே அவர்களை இப்பிறழ்வுகளுக்கும் கடின உள்ளத்திற்கும் இட்டுச் சென்றது. தகுதியற்ற நிலையில் அவர்கள் இறைவனுக்குப் பணி செய்ததால் அனைவர்மேலும் அவர்கள் தண்டனையை வருவிக்கின்றனர்.

மூன்று, வழிகாட்டக் கூடிய தலைமை இல்லாமை. போரில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த அவர்களுக்கென்று தலைவர்கள் இல்லை. ஒரு குழுமத்தின் போக்கை நிர்ணயித்து அதை நோக்கி மக்களை வழிநடத்தக்கூடிய தலைவர் என யாரும் இல்லாத காரணத்தால்தான் இஸ்ரயேல் மக்கள் பின்நாளில் தங்களுக்கென ஓர் அரசரைக் கேட்கிறார்கள்.

ஆண்டவராகிய கடவுள் இந்த நிகழ்வு வழியாக அவர்களுக்குக் கற்பிப்பது இதுதான்: ஆட்டோமேடிக் வெற்றி ஆன்மிகத்தில் சாத்தியமில்லை. வெளிப்புறச் சடங்குகளும் அடையாளங்களும் பொருள்களும் நம்மோடு இருப்பதால் நமக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று எந்தவித உத்திரவாதமும் இல்லை.

நற்செய்தி வாசகத்தில், தொழுநோய் பீடித்திருந்த ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. நிகழ்வின்படி, தம் சமகாலத்து வரையறைகளைத் தாண்டிச் செல்கிறார் இயேசு. தொழுநோயாளர்களைக் கண்டு விலகிச் செல்வதற்குப் பதிலாக அவர்மேல் பரிவு கொள்கிறார். அவரைத் தீட்டு என ஒதுக்குவதற்குப் பதிலாக அவரைத் தொடுகிறார் இயேசு. விளைவு, இயேசு ஊருக்குள் செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது.

தொழுநோயாளர் இயேசுவிடம் சரணாகதி அடைகிறார். ‘நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் இயலும்!’ என்கிறார். இறைவனின் விருப்பமும் நம் உளப்பாங்கு மாற்றமும் அருள் வாழ்விலும் பொருள் வாழ்விலும் நமக்கு வெற்றியைத் தருகின்றன.

நிற்க.

‘கூட்டியக்கம் என்பது செயல் அல்ல. மாறாக, அது ஓர் உளப்பாங்கு. இந்த உளப்பாங்கு மாற்றமே, நாம் மற்றவர்களை நோக்கி நகர்வதற்குத் நம்மைத் தூண்டுகிறது’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 6).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment