இன்றைய இறைமொழி
புதன், 10 ஜனவரி 2024
பொதுக்காலம் முதல் வாரத்தின் புதன்
1 சாமுவேல் 3:1-10, 19-20. மாற்கு 1:29-39
சிற்றலை விளைவு
அமைதியான ஒரு குளத்தின் நடுவே எறியப்படுகிற ஒரு சிறிய கல் ஏற்படுத்தும் சலனம் சிற்றலைகளை உருவாக்கி, அவை ஒன்றோடொன்று தொட்டு கடைசியில் குளத்தின் கரையில் கிடக்கும் அனைத்துக் கற்களையும் நனைத்துவிடுகின்றன. குளத்தின் நடுவில் எறியப்பட்ட ஒரு கல் நனையத் தொடங்கி, தொடர்ந்து, குளத்தின் கரையில் உள்ள அனைத்துக் கற்களும் நனையக் காரணம் சிற்றலை விளைவு (ripple effect). நடுவில் எறியப்படாமலேயே அந்தக் கல் கரையில் கிடந்திருந்தால் எல்லாக் கற்களும் அப்படியே கிடந்திருக்கும்.
இயேசுவின் பணிகள் உருவாக்கிய சிற்றலை விளைவு பற்றி நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். கப்பர்நகூம் தொழுகைக்கூடத்தில் இயேசு தம் போதனையையும் வல்ல செயலையும் தொடங்குகிறார். தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற வல்ல செயல் பேயோட்டும் வல்ல செயல் ஆகும்.
தொழுகைக்கூடத்திலிருந்து நேராகப் பேதுருவின் இல்லம் செல்கிறார் இயேசு. செல்டிக் மரபின்படி, ‘நீ ஒருவரை நம்ப வேண்டுமானால் அவருடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.’ நல்உறவுக்காக சீமோனின் இல்லம் செல்கிறார் இயேசு. அங்கே காய்ச்சலாய்க் கிடந்த சீமோனுடைய மாமியார் பற்றி இயேசுவுக்குச் சொல்லப்பட்டவுடன், அவர் அவருடைய கையைப்பிடித்துத் தூக்கி அவருக்கு நலம் தருகிறார். இது நோய்நீக்கும் வல்ல செயல் ஆகும். இச்செய்தி ஊரெங்கும் பரவ, பேய்பிடித்தவர்களும் நோய் உள்ளவர்களும் என நகரமே வீட்டின்முன் கூடுகிறது. அனைவருக்கும் நலம் தருகிற இயேசு, விடியற்காலையில் தனிமையான இடத்திற்குச் சென்று இறைவேண்டல் செய்கிறார். அங்கே வருகிற சீமோன், ‘எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்றவுடன், ‘நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்’ எனப் புறப்படுகிறார் இயேசு.
சீமோன் பேதுருவின் மாமியாருக்கு நலம் என்னும் ஒற்றைக் கல் தொடர் சிற்றலைகளை ஏற்படுத்தி, நகரத்தார் நலம் பெறுதல், இயேசுவின் தனிமையான இறைவேண்டல், கலிலேயா நாடு முழுவதும் பயணம் என இயேசுவின் பணி தொடர்கிறது.
இன்றைய முதல் வாசகத்திலும் இத்தகைய சிற்றலை விளைவைக் காண்கிறோம். இளவல் சாமுவேல் ஆண்டவரின் இல்லத்தில் வாழ்கிறார். ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருக்கிற அக்காலத்தில், ‘சாமுவேல், சாமுவேல்’ என்னும் குரல் கேட்டு, ‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என சாமுவேல் பதிலிறுப்பு செய்கிறார். விளைவாக, அவர் ஆண்டவரின் திருமுன் பெரிய இறைவாக்கினராக மாறுகிறார்.
‘உம் அடியான் கேட்கிறேன்’ என்னும் சொற்கள் அவருடைய பெயரின் நீட்சியாகவே இருக்கின்றன. சாமுவேலை ஆண்டவரிடமிருந்து ‘கேட்டுப் பெற்றார்’ அன்னா. சாமுவேல் ஆண்டவரின் சொற்களைக் கேட்கிறார். பின்னர் இஸ்ரயேல் மக்களின் பேச்சைக் கேட்டு, ஆண்டவரிடமிருந்து ஓர் அரசரை (சவுலை) அவர்களுக்கெனக் கேட்டுப் பெற்றுக்கொடுப்பார்.
இயேசுவும் சாமுவேலும் ஏற்படுத்திய சிற்றலை விளைவு நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன?
(அ) முதல் கல் எறியப்பட வேண்டும்
சீமோனுடைய மாமியாரின் காய்ச்சல் பற்றிக் கேட்டவுடன் தாமாகவே முன்வந்து அவருக்கு நலம் தருகிறார் இயேசு. தாமாகவே முதல் கல்லை எறிகிறார். பிரச்சினை எனச் சொல்லப்பட்ட ஒன்றை, தம் பணிக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்கிறார் இயேசு. சாமுவேல் முதல் கல்லை எறியுமாறு – ‘ஆண்டவரே, பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று சொல்லுமாறு – இளவல் சாமுவேலைத் தூண்டுகிறார் ஏலி. முதல் கல் எறியப்படாமல் சிற்றலைகள் உருவாவதில்லை. முதல் முயற்சி எடுக்காமல் செயல்கள் நடந்தேறுவதில்லை. முதல் கல் எறியத் தடையாக இருப்பது தயக்கம். எந்தவொரு செயலுக்கும் அதன் முதல் ஐந்து நொடிகள்தாம் முக்கியம் எனச் சொல்கிறது ‘தெ 5 செகண்ட் ரூல்’ (‘The Five Second Rule) (ஆசிரியர், ‘மெல் ராபின்ஸ்’) என்னும் நூல். அந்த ஐந்துநொடிகளில்தான் தயக்கம், எதிர்மறையான எண்ணம், தள்ளிப்போடும் எண்ணம், தன்ஐயம் போன்றவை எழும். அவற்றை வென்றுவிட்டால் செயல் தொடங்கிவிடும்.
(ஆ) தனியே திரும்பிப் பார்த்தல்
குளத்தில் எறியப்பட்ட கல் உருவாக்கிய சிற்றலைகளுக்கு இரு திசைகள் உண்டு. ஒரு திசை குளத்தின் கரை. இன்னொரு திசை குளத்தின் மையம். குளத்தின் கரை நோக்கிய திசை மட்டுமே இருந்தது என்றால் கரை உடைந்துவிடும். அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவது எதிர்திசை விசையே. ஒரு பக்கம் தம் பணி வாழ்வில் மக்கள் என்னும் திசையை நோக்கி இயேசு சென்றாலும், அவருடைய விடியற்காலை என்னவோ எதிர்திசையை நோக்கியதாக – கடவுளை, தந்தையை நோக்கியதாக – இருக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தனியே அமர்ந்து திரும்பிப்பார்;த்தல் அவசியம்.
(இ) அறிமுகம் என்னும் சோதனை
‘பாப்புலாரிட்டி’ மற்றும் ‘ஃபெமிலியாரிட்டி’ என்பவை நம் பயணத்தின் மிகப்பெரிய சவால்கள். இவை இரண்டுமே நமக்கு வெளியே உள்ள, நமக்கு நெருக்கமான மனிதர்களிடமிருந்து வருகின்றன: ‘பாப்புலாரிட்டி’ (‘பீப்புள்’, மக்கள்), ‘ஃபெமிலியாரிட்டி’ (‘ஃபேமிலி’, குடும்பம்). ‘எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்’ என இயேசுவிடம் சொல்கிறார் சீமோன். அறிமுகமான இடத்திலேயே தங்குவது நல்லது என இயேசுவைச் சோதிக்கிறார் பேதுரு. இயேசுவோ சோதனையை வென்று, ‘நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம்’ என்கிறார். நாம் ஏற்கெனவே செய்த செயல்கள் நமக்கு அறிமுகமானவை என்பதால் அவற்றைத் தொடர்ந்து செய்ய நினைக்கிறோம். அல்லது ஏற்கெனவே அறிமுகமான இடம், நபரோடு நம் இருத்தலை முடித்துக்கொள்கிறோம். சிற்றலை குளத்தின் நடுவில் பிறந்தாலும் அது அங்கேயே தங்கிவிடுவதில்லை. அடுத்தடுத்து என நகர்கிறது. ஆண்டவரின் இல்லம், ஏலி என்னும் அறிமுகங்களைத் தாண்டி மக்களை நோக்கி வெளியே நகர்கிறார் சாமுவேல்.
நிற்க.
‘தன்னை மட்டுமே உற்றுநோக்குகிற திருஅவை அதிகாரத்தை மையப்படுத்தியதாகவும், தன்இருத்தலைத் தக்க வைக்க முயற்சி செய்வதாகவும், தன்னையே தூய்மையானது எனக் கருதி மற்றவரிடமிருந்து விலக்கிக்கொள்வதாகவும் இருக்கும். மாறாக, தனக்கு வெளியே நோக்கி நகர்கிற திருஅவை, மக்களை, குறிப்பாக விளிம்புநிலை மக்களை நோக்கியதாக, இருக்கும். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 5).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment