இன்றைய இறைமொழி
செவ்வாய், 9 ஜனவரி 2024
பொதுக்காலம் முதல் வாரத்தின் செவ்வாய்
1 சாமுவேல் 1:9-20. மாற்கு 1:21-28
அதிகாரத்தின் ஊற்று
நாம் செய்யும் செயல்கள், பேணும் உறவுகள் நம் அதிகாரத்துக்குள் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதிகாரம் அல்லது ஆற்றல் இழக்கும் தருணங்கள் நம்மைப் பின்நோக்கி இழுக்கின்றன. இந்த அதிகாரத்தின் ஊற்று நமக்குள்ளே ஊற்றெடுக்க வேண்டும் என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
இயேசுவும் அவருடைய திருத்தூதர்களும் (முதற்சீடர்களும்) தொழுகைக்கூடத்துக்கு வருகிறார்கள். இயேசுவின் சமகாலத்தில், எருசலேம் ஆலயம் பலி செலுத்தும் இடமாகவும், தொழுகைக்கூடம் மறைநூல் வாசிக்கும் இடமாகவும் இருந்தது. ஏற்கெனவே தொழுகைக்கூடங்களில் மறைநூல் அறிஞர்கள் இருந்தனர். இயேசுவின் போதனையைக் கேட்கிற மக்கள் கூட்டம் அவருடைய போதனை மறைநூல் அறிஞர்களின் போதனைபோல இல்லாதது கண்டு வியக்கிறார்கள்.
வழக்கமாக மறைநூல் அறிஞர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் பள்ளி அல்லது தாங்கள் கற்ற ஆசிரியரின் அதிகாரத்தை மேற்கோள்காட்டி போதிப்பார்கள். இந்த அதிகாரமே போதிப்பதற்கான உரிமையை அவர்களுக்கு அளித்தது. தச்சுத்தொழில் செய்யக்கூடிய பின்புலத்திலிருந்து வந்திருக்கிற இயேசுவுக்கு இந்த அதிகாரம் எப்படி வந்தது என மக்கள் உள்ளத்தில் கேள்வியெழுப்ப, தம் அதிகாரம் தனக்குள்ளிருந்தும், இறைமகன் என்னும் தான்மையிலிருந்தும் ஊற்றெடுப்பதாக இயேசு கூறுகிறார்.
மேலும், இயேசுவின் போதனையோடு இணைந்து வல்ல செயல் ஒன்றும் தொழுகைக்கூடத்தில் நடந்தேறுகிறது. தீய ஆவியை விரட்டி தீய ஆவி பிடித்தவருக்கு நலம் தருகிறார் இயேசு. ‘வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ!’ என்று தம் சொந்த அதிகாரத்தால் விரட்டுகிறார். தீய ஆவியும் கீழ்ப்படியும் அதிகாரத்தை இயேசு பெற்றிருப்பதைக் கண்டு மக்கள் வியக்கிறார்கள்.
இவ்வாறாக, ‘கடவுளின் மகன் இயேசு’ (காண். மாற் 1:1) என்பதை மாற்கு தன்னுடைய குழுமத்துக்கு வெளிப்படுத்துகிறார். தம்மிலேயே அதிகாரம் கொண்டிருக்கிற இயேசு கடவுளின் மகன் என்னும் நிலையில் அந்த அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், குழந்தைப்பேறு இல்லாத அன்னா ஆண்டவரின் இல்லம் தேடிச் செல்லும் நிகழ்வை வாசிக்கிறோம். ஆண்டவரின் இல்லத்திலிருந்த ஏலி குரு என்னும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அன்னாவைக் கடிந்துரைக்கிறார். ஏலியின் அதிகாரத்தைத் தாண்டியதாக இருக்கிறது கடவுளின் அதிகாரம். சாமுவேலைப் பெற்றெடுக்கிறார் அன்னா.
இன்றைய வாசகங்கள் வழங்கும் பாடம் என்ன?
ஆண்டவரின் அதிகாரத்துக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவதும், கடவுளின் பிள்ளை என்னும் தான்மையில் நம் அதிகாரம் ஊற்றெடுக்குமாறு பார்த்துக்கொள்வது நலம். நமக்கு வெளியே இருந்த வரக்கூடிய அதிகாரம் – நம் அலுவல் சார்ந்த, அந்தஸ்து சார்ந்த, சமூக நிலை சார்ந்த – நமக்குத் தரப்படுகிறது. அதுவே நம்மிடமிருந்து ஒருநாள் எடுத்துவிடவும் படும். ஆனால், நமக்கு உள்ளேயிருந்து ஊற்றெடுக்கிற அதிகாரம் எடுக்க முடியாததாக இருக்கிறது.
நிற்க.
‘அதிகாரம் என்பது பொறுப்புணர்வு என்று புரிந்துகொள்ளப்படும்போது கூட்டியக்கத் திருஅவையில் ஒன்றிணைப்பும் பங்கேற்பும் வளரும்’ என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 4).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment