இன்றைய இறைமொழி
திங்கள், 8 ஜனவரி 2024
ஆண்டவரின் திருமுழுக்கு விழா
எசாயா 55:1-11. மாற்கு 1:7-11
யோர்தான் ஆற்றில்
கிறிஸ்து பிறப்பு விழாவில் பாலன் இயேசு யூதர்களுக்கு (இடையர்கள்) தம்மையை வெளிப்படுத்துகிறார். திருக்காட்சி விழாவில் பிற இனத்தாருக்கு (கீழ்த்திசை ஞானியர்) வெளிப்படுத்துகிறார். இன்று, திருமுழுக்கு விழாவில், அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். இன்றைய நாள் ‘இறைவெளிப்பாடு‘ (‘தெயோஃபனி’) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், வானிலிருந்து தந்தையின் குரல், புறா வடிவில் தூய ஆவியார், யோர்தான் ஆற்றங்கரையில் மானிட உரு ஏற்ற மகன் என்று மூவொரு இறைவன் தம்மையே வெளிப்படுத்துகிறார்.
இன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். திருவழிபாட்டு ஆண்டில் இன்றுடன் கிறிஸ்து பிறப்புக் காலம் முடிகிறது. சில மரபுகளில் கிறிஸ்து பிறப்புக் காலம் ஆண்டவராகிய இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக்கிய விழா (பிப்ரவரி 2) வரை தொடர்கிறது.
(அ) யோர்தான் ஆறு
திருமுழுக்கு பெறுமாறு இயேசு (எபிரேயம், அரமேயத்தில் ‘யோசுவா’) யோர்தான் ஆற்றுக்கு வருகிறார். ‘யோசுவா,’ ‘யோர்தான் ஆறு’ என்னும் சொற்கள் உடனடியாக நமக்கு முதல் ஏற்பாட்டு நிகழ்வை நினைவூட்டுகின்றன (காண். யோசுவா 3). மோசே தலைமையில் தொடங்கிய விடுதலைப் பயணம் யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் யோர்தான் ஆற்றைக் கடப்பதில் நிறைவுக்கு வருகிறது. இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில் யோர்தான் ஆறு என்பது அவர்களுடைய வாழ்வின் புதிய தொடக்கம். வாக்களிக்கப்பட்ட நாட்டை அவர்கள் உரிமையாக்கத் தொடங்கியது யோர்தான் ஆற்றிலிருந்துதான். புதிய ஏற்பாட்டு யோசுவா என்னும் இயேசு, புதிய இஸ்ரயேலின் பிதாமகன் தாமே யோர்தான் ஆற்றில் இறங்குகிறார்.
(ஆ) மானுட ஒன்றிப்பு
யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவான் வழங்கிய திருமுழுக்கு பாவமன்னிப்பு மற்றும் மனமாற்றத்தின் அடையாளமாக இருந்தது. பாவம் இல்லாத இயேசு மானுடத்தோடு தம்மையே முழுமையாக ஒன்றித்துக்கொள்ளும் நிகழ்வு அவருடைய திருமுழுக்கில்தான் நடக்கிறது. இதையே, ‘ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டியதாயிற்று’ (காண். எபி 2:17) என்று வாசிக்கிறோம்.
(இ) தூய ஆவியால் திருமுழுக்கு
தான் தண்ணீரால் திருமுழுக்கு வழங்குவதாகவும் தனக்குப் பின் வருபவர் தூய ஆவியால் திருமுழுக்கு வழங்குவார் எனவும் மொழிகிறார் திருமுழுக்கு யோவான். திருமுழுக்கு நிகழ்வில் தூய ஆவியார் இயேசுவின்மேல் இறங்கி வருகிறார். அந்த ஆவியாரே இனி அவரைப் பாலைநிலத்துக்கும் பணித்தளத்துக்கும் நடத்திச் செல்வார். இயேசு தாம் இறந்து உயிர்த்தெழுந்தபின், ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று தம் சீடர்கள்மேல் ஊதுகிறார் (காண். யோவா 20:22). விண்ணேற்றத்துக்குப் பின் தூய ஆவியாரை அனுப்புகிறார் (காண். திப 2:1-11).
இவ்விழா நமக்குச் சொல்வது என்ன?
இயேசுவோடு இணைந்து நாமும் யோர்தான் ஆற்றில் இறங்க வேண்டும். அதுவே நம் வாழ்வின் புதிய தொடக்கமாக அமைகிறது. நாம் பெற்ற திருமுழுக்கு நம்மைப் பாவத்திலிருந்து தூய்மையாக்கியது. உறுதிப்பூசுதலில் நாம் பெற்ற தூய ஆவியார் நம்மை நம்பிக்கையில் உறுதிப்படுத்துகிறார். தூய ஆவியாரால் நாம் இயக்கப்பட வேண்டும். மானுடத்துடன் தம்மையே ஒன்றித்துக்கொண்ட இயேசு, ஆவியாரால் நிரப்பப்படுகிறார். தூய ஆவியாரால் நிரப்பப்படும்போது நாம் நம் மானுட வலுவின்மையை வென்றெடுப்பதோடு, உடலின் பிடியிலிருந்து மேலே எழும்பிச்செல்பவர்களாகவும் மாறுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘நீர்நிலைகளுக்கு வாருங்கள்’ எனத் தன் மக்களை அழைக்கிறார் ஆண்டவராகிய கடவுள். ‘நிறைவுதராத ஒன்றிற்காக ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்?’ எனக் கேட்கிறார். நிறைவு தரக்கூடிய இறைவனை நோக்கியதாகவே நம் பயணம் இருக்கட்டும். அவர்தம் சொல்லுறுதியே நம் நம்பிக்கை.
நிற்க.
கூட்டியக்கத் திருஅவை ஆவியாரால் வழிநடத்தப்படுகிறது என மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ், ஆவியாரின் குரலுக்குத் தொடர்ந்து செவிமடுப்பது அவசியம் என்றும், நம் ஆன்மாவின் அமைதியில் அவரைக் கண்டுகொள்ள முடியும் என்றும் கூறுகிறார். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 3).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment