இன்றைய இறைமொழி. ஞாயிறு, 7 ஜனவரி 2024. அவரது விண்மீன்!

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 7 ஜனவரி 2024
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
எசாயா 60:1-6. எபேசியர் 3:2-3, 5-6. மத்தேயு 2:1-12

அவரது விண்மீன்!

அன்று அவரது விண்மீன் எழுந்தது. அரண்மனையின் உயரமான சுவர்களும் மாடமும் மறைத்ததால் ஏரோது அரசனால் விண்மீனைக் காண இயலவில்லை. தலைமைக் குருக்கள் ஆலயத்தின் வழிபாடுகளிலும் அங்கே வெட்டப்படும் ஆடுகளிலும் கொட்டப்படும் காணிக்கைகளிலும் கவனமாக இருந்ததால் விண்மீனை அவர்கள் காணவில்லை. மறைநூல் அறிஞர்கள் திருச்சட்ட நூல்களில் தங்கள் கண்களைப் பதிப்பதே முக்கியம் எனக் கருதியால், தலை உயர்த்தி விண்மீன் பார்ப்பதைக் கவனச் சிதறல் எனக் கருதினார்கள். எருசலேம் நகரில் வலம் வந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக் கவலைகள் பற்றியே அக்கறை கொண்டிருந்ததாலும், பல்வேறு சமூக, அரசியல், சமய அடக்குமுறை என்னும் நுகங்களைத் தாங்கியிருந்ததாலும் அவர்களால் விண்மீனை நிமிர்ந்து பார்க்கவில்லை. கீழ்த்திசை ஞானியரோ அந்த விண்மீனைக் கண்டனர். அந்த விண்மீனின் நகர்வைக் கண்டு அதைப் பின்தொடரத் தொடங்கினர். அந்த விண்மீன் காட்டியவரைக் கண்டு வணங்கினர். மற்றவர்களின் கண்களில் படாமலேயே மறைந்துபோனது விண்மீன்.

கூரான கவனம், நேர்த்தியான முதன்மை, தன்னூக்கம், பயணம் செய்வதற்கான தயார்நிலை, கூட்டுப் பொறுப்புணர்வு, துன்பங்கள் எதிகொள்தல், தேடல் போன்றவற்றைக் கொண்டிருப்பவரே அவரது விண்மீனைக் காணவும், தொடரவும், அவரைக் கண்டுகொள்ளவும் முடியும்.

நிற்க.

கீழத் திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு பெருவிழா என்றழைக்கப்படுகிற திருக்காட்சிப் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். கீழ்த்திசை (பாரசீக மற்றும் அதற்குக் கிழக்கே உள்ள நாடுகள்) ஞானியர், யூதர்களின் அரசரைத் தேடி வருகிறார்கள். இதுவே இந்நிகழ்வின் ஒற்றை வரி. யூதர்கள் தங்களுடைய அரசரைக் கண்டுகொள்ளவில்லை. புறவினத்தார்கள் அவரை அரசராகவும் மெசியாகவும் கடவுளாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். இதுதான் நிகழ்வின் முரண்.

கீழ்த்திசை ஞானியரின் பயணம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. தூரம், திருடர் பயம், மறைந்து தோன்றும் விண்மீன், பாலைவனப் புயல் என்று தடைகள் எவ்வளவு இருந்தாலும் புறப்படத் தயாராகிறார்கள். பயணத்தில் உறுதியாக இருக்கிறார்கள். விண்மீனைக் கண்டவாறே நடந்ததால் பெரும்பாலும் இரவிலேயே இருந்திருக்கும் இவர்களுடைய பயணம்.

இவர்கள் பயணம் அனைவருக்கும் தெரியக்கூடியதாக (public) இருக்கிறது. எருசலேமுக்குள் வருகிற இவர்கள் எல்லாரிடமும் விசாரிக்கிறார்கள்: ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ இக்கேள்வியைக் கேட்டவுடன், ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. தனக்கு மாற்றாக இன்னோர் அரசனா எனக் கலங்குகிறான் ஏரோது. தன் அரச பதவிமேல் கொண்ட மோகத்தால் தன் இரு மகன்களையும் மனைவியையும் சில நாள்களுக்கு முன்புதான் ஏரோது கொன்றிருக்க, அடுத்து என்ன நிகழுமோ எனக் கலங்குகிறார்கள் மக்கள். ஆக, யூதர்களின் அரசரான இயேசுவின் பிறப்பு, ‘கலக்கம்’ என்னும் எதிர்மறையான உணர்வை இவர்கள் நடுவே தூண்டுகிறது.

‘அவரது விண்மீன் எழக் கண்டோம்’ எனச் சொல்கிறார்கள் ஞானியர். விண்மீனைப் பார்ப்பதற்குப் பதிலாக மறைநூல்களைப் பார்க்குமாறு சொல்கிறான் ஏரோது. இறுதிவரை அவனும் அவனோடு இருந்தவர்களும் விண்மீனைப் பார்க்காமலேயே இருக்கிறார்கள். மறைநூல்களில் தேடி விடையைக் காண்கிறார்கள். ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பாகவே இறைவாக்கினர் மீக்கா மெசியாவின் பிறப்பு பெத்லகேமில் நிகழும் என முன்னுரைத்தார் (காண். மீக் 5:2). ‘என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர்’ என்னும் சொல்லாடலை இணைக்கிறார் மத்தேயு (காண். 2 சாமு 5:2).

எல்லாருக்கும் விடை தெரிந்தது. ஆனால், யாரும் மெசியாவைத் தேடவில்லை. ஞானியரோடு பயணம் செய்யவும் முயற்சி செய்யவில்லை. விமானநிலையங்களில் நகரங்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் போலத்தான் இவர்கள் இருந்தார்கள். அறிவிப்பாளர்கள் நகரங்களை அறிவிப்பார்களே அன்றி அவர்கள் அந்நகரங்களுக்குச் செல்வதில்லை. இவர்களும் மெசியா எங்கே பிறப்பார் என அறிந்திருந்தார்கள். ஆனால், அங்கே செல்லவில்லை. சில நேரங்களில் நாமும் இவர்களைப் போல இருக்கிறோம்.

‘ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளைத் தனியாக அழைத்துக் கொண்டு போகிறான்.’ இதுவரை நடந்தது அனைத்தும் பொதுவில் நடந்தன. விண்மீன் உதித்தது, ஞானியர் வந்தது, அவர்கள் கேள்வி கேட்டது, எருசலேம் கலங்கியது, மறைநூல் ஆராயப்பட்டது என அனைத்தும் பொது நிகழ்வுகள். ஆனால், இப்போது மறைவாக, தனியாக, யாருக்கும் தெரியாமல் ஒன்றைச் செய்கிறான் ஏரோது. ‘குழந்தையை நானும் வணங்குவேன்’ எனப் பொய்யுரைத்து ஞானியரை அனுப்புகிறான்.

மீண்டும் நட்சத்திரம் தோன்றியது எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. இப்போது ஞானியர் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஏரோதுவும் எருசலேமும் கலங்கிப் போயிருக்க, இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். மகிழ்ச்சி என்பது வெறும் புன்னகை அல்ல. மாறாக, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறார்கள். இங்கேதான் அவர்களுக்குப் பெரிய சவால் இருக்கிறது. இவ்வளவு தூரம் பின்பற்றிய விண்மீன் மாடடைக் குடிலுக்கு மேல் நிற்கிறது. யூதர்களின் அரசர் இங்கே பிறக்க முடியுமா? என்னும் கேள்வியைக் கேட்கவில்லை அவர்கள். மாறாக, வீட்டிற்குள் போய் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் காண்கிறார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள். ‘தரையை முத்தமிட்டார்கள்’ என்றும் சொல்லலாம்.

அவர்கள் விழுந்தார்கள், வணங்கினார்கள், (பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும்) வழங்கினார்கள். அவர்களுடைய பயணம் நிறைவுபெறுகிறது. அரசரைத் தேடி வந்தவர்கள் தங்களுடைய ஆண்டவரைக் கண்டுகொள்கிறார்கள்.

இப்பெருவிழா நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) பயணமும் தேக்கமும்

நற்செய்தி வாசகத்தில் ‘பயணம்-தேக்கம்’ என்னும் முரணைப் பார்க்கிறோம். தொடக்கமுதல் இறுதிவரை ஞானியர் பயணம் செய்பவர்களாக இருக்கிறார்கள். ஏரோதுவும், மறைநூல் அறிஞர்களும், எருசலேம் நகரத்தாரும் தேக்கநிலையில் இருக்கிறார்கள். தங்கள் இருப்பிடத்தை விட்டு அவர்கள் ஒரு அடி கூட நகரவில்லை. தேக்கநிலை என்பது இறப்புநிலை என மொழிகிறது இன்றைய முதல் வாசகம். பாபிலோனிய அடிமைத்தளையிலிருந்து யூதா மக்கள் பெறப் போகிற விடுதலையை முன்னுரைக்கிற எசாயா, ‘எருசலேமே! எழு! ஒளிவீசு!’ என அழைக்கிறார். இருளிலும் இறப்பிலும் தேக்கநிலையிலும் இருந்த மக்களைத் தட்டி எழுப்புகிறார் எசாயா. மேலும், அவர்கள் விடுதலை பெற்றவுடன் அனைத்து நாடுகளும் எருசலேம் நோக்கி வரும் என்றும், அனைத்துச் செல்வங்களும் அவர்களை வந்து சேரும் எனவும் மொழிகிறார். ‘பிறஇனத்தார் வருவர், புதல்வியர் தூக்கிவரப்படுவர், ஒட்டகங்களின் பெருந்திரள் வரும், சேபா நாட்டினர் வருவர்’ எனத் தொடர்ந்து மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் பற்றிப் பேசுகிறார் எசாயா. ஒரே இடத்தில் இருப்பதில் அல்ல, மாறாக, பயணம் செய்வதில்தான் வளர்ச்சியும், வெளிப்பாடும் உள்ளது என்பது நாம் கற்க வேண்டிய முதல் பாடம்.

(ஆ) அறிகுறிகளைப் புரிந்துகொள்தல்

ஆண்டவராகிய கடவுளின் வெளிப்பாடே இப்பெருவிழாவின் மையம். கடவுளின் வெளிப்பாட்டைக் காண வேண்டுமெனில் அறிகுறிகளை அடையாளம் கண்டு அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். விண்மீனும் மறைநூலும் அறிகுறிகள். அவற்றைப் புரிந்துகொள்வதன் வழியாகவே இறைவெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறார்கள் ஞானியர். இறைவெளிப்பாட்டின் மேன்மையான அறிகுறி கிறிஸ்து இயேசுவே என இன்றைய இரண்டாம் வாசகத்தில் மொழிகிறார் பவுல். தான் பெற்ற இறைவெளிப்பாட்டுக்குக் காரணம் கிறிஸ்துவே எனச் சொல்வதோடு, கிறிஸ்துவின் வழியாகவே பிற இனத்தார் யாவரும் இறைவெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறார். காண இயலாத கடவுளின் காணக்கூடிய முகமாக கிறிஸ்து இருக்கிறார். கடவுளின் முகத்தை பெத்லகேம் குழந்தையில் காண்கிறார்கள் ஞானியர். குழந்தையின் முகத்தில் யூதர்களின் அரசரையும் தங்களுடைய ஆண்டவரையும் கண்டார்கள் ஞானியர். ஆனால், ஏரோதுவோ இறுதி வரை குழந்தையைக் குழந்தை என்று மட்டுமே கண்டான். அடையாளங்களையும் அறிகுறிகளையும் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே அவரது விண்மீனைக் கண்டு பின்பற்ற இயலும்.

(இ) தேடலும் தேடல்முறையும் தேடுபொருளைக் கண்டடைதலும்

கடவுளைத் தேடுகிறவர்கள் மட்டுமே அவரைக் கண்டுகொள்ள முடியும். உடல், அறிவு, மனம் என்று மூன்று நிலைகளில் நம் தேடல் அமைகிறது. முதலில் ஞானியர் தங்கள் உடலால் (கண்களால்) தேடுகிறார்கள், விண்மீனைக் கண்டுகொள்கிறார்கள். இரண்டாவதாக, ‘யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?’ என்னும் கேள்வி வழியாக தங்கள் அறிவால் தேடுகிறார்கள். ‘பெத்லகேமில்’ என்னும் விடையை மறைநூலில் கண்டுகொள்கிறார்கள். மூன்றாவதாக, அவர்களுடைய தேடல் மனத்தால் தொடர்கிறது. ஆகையால்தான், எளிய வீட்டின் உள்ளே நுழைந்து அங்கே கைகளில் ஏந்தப்பட்டிருந்த குழந்தையைத் தங்கள் கடவுளாகக் கண்டு வணங்குகிறார்கள். கண்களாலும் அறிவாலும் தேடியபோது அவர்களிடம் சுமைகள் இருந்தன. மனத்தால் காணத்தொடங்கியவுடன் அவர்களுடைய சுமைகளை இறக்கி வைக்கிறார்கள். இனி அவர்கள் தங்கள் இல்லம் நோக்கிப் புறப்படுவார்கள். ‘அறிவு’, ‘உடல்’ என்று மீண்டும் அவர்கள் பயணம் செய்யத் தேவையில்லை. மறைநூல்களும், ஏரோதுவும், எருசலேம் நகரத்தாரும் அவர்களுக்குத் தேவையில்லை. கனவிலும் கடவுள் குரல் அறியக் கற்றுக்கொள்வார்கள். வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புவார்கள். கடவுளை அறிதலின் பயன் என்னவென்றால், நம்மை நோக்கி மீண்டும் பயணம் செய்வதே! இன்று நம் தேடல் பெரும்பாலும் உடல் அல்லது அறிவு அளவில் நின்றுவிடுகிறது. மனத்தால் (ஆன்மாவால்) தேடுவதே மேன்மையான தேடல்.

நம் இவ்வுலக வாழ்வின் இலக்கே இறையனுபவம் பெறுதலே. பிறப்பிலேயே மேன்மையான பிறப்பான மானிடப் பிறப்பை ஏற்றுள்ள நாம் இறையனுபவம் பெறுதலே நம் வாழ்வின் நோக்கம் என்பதை அறிதல் நலம். நம் உடல் துன்பம் போக்கவும், நலமும் வளமும் நமக்குத் தரவும் அவரைத் தேடுகிறோம். தூரத்திலிருந்து வந்த ஞானியர் தாங்கள் மதிப்புக்குரியது எனக் கருதிய அனைத்தையும் பெத்லகேம் குழந்தையின்முன் விட்டுச் செல்கிறார்கள். கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. நாமே முழுமையாக இருக்கிறோம். நம்மிடம் உள்ளவற்றைக் கொடுத்துவிட்டு வேறு வழியாக – உடலாலும் அறிவாலும் வந்த வழி அல்ல – மாற்று வழி செல்வதே அவசியம்.

நம் ஆன்மாவில் என்றும் ஒளிர்கிறது அவரது விண்மீன்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment