இன்றைய இறைமொழி
சனி, 6 ஜனவரி 2024
கிறிஸ்து பிறப்புக் காலம்
1 யோவான் 5:5-6, 8-13. மாற்கு 1:7-11
அன்பார்ந்தவர் நீர்!
தன்னுடைய நாற்பது நாள்கள் பயணத்துக்குப் பின்னர், 23 ஆகஸ்ட் 2023 அன்று நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் சந்திராயன்-3 என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எடுத்த நம் முயற்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. நிலவிலிருந்து பூமிக்கு லேண்டர் அனுப்பிய முதல் செய்தி, ‘இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன். நீயும்தான்!’ என்பதாகும்.
நிற்க.
காலத்தைக் கடந்த கடவுள், காலத்திற்கு உட்பட்டு தம் மகனை அனுப்பிய பின்னர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் கழித்து அவருக்கு அனுப்பும் செய்தி, ‘என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்!’
இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வே இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவைப் பொருத்தவரையில் அவருடைய திருமுழுக்கு, (அ) அவருடைய பணிவாழ்வின் தொடக்கத்தை அடையாளப்படுத்துவதாகவும், (ஆ) அவருடைய அடித்தள அனுபவமாகவும், (இ) அவருடைய தான்மையை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கிறது.
(அ) ‘கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு பெற்றார்’ என்று நிகழ்வைப் பதிவு செய்கிறார் மாற்கு. ‘நாசரேத்து’ என்பது இயேசுவின் குழந்தைப் பருவம், ‘யோர்தான்’ என்பது இயேசுவின் பணித்தொடக்கம் என இவ்விரண்டு பெயர்களையும் நாம் உருவகமாக எடுத்துக்கொள்வோம். இட நகர்வு மட்டுமல்ல, நேர நகர்வும் இங்கே நிகழ்கிறது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் தாண்டி நிற்கிறார் இயேசு.
(ஆ) ‘நீர் என் அன்பார்ந்த மகன்’ என்று வானிலிருந்து இயேசு கேட்ட குரல் அவருக்கு அடித்தள அனுபவமாக இருக்கிறது. அடித்தள அனுபவம் என்பது நம் இருத்தலையும் இயக்கத்தையும் புரட்டிப்போடுகிற அனுபவம். ஓரேபு மலையில் மோசே பெற்ற அனுபவம், எருசலேம் ஆலயத்தில் எசாயா பெற்ற அனுபவம், தமஸ்கு செல்லும் வழியில் சவுல் (பவுல்) பெற்ற அனுபவம் என இவை யாவுமே அடித்தள அனுபவங்கள்தாம். இவை இவர்களின் வாழ்வின் போக்கையே மாற்றுகின்றன. கடவுளின் அன்பார்ந்த மகனாகத் தம் பணியைத் தொடர்கிற இயேசு, கடவுளின் அரசைப் பற்றிப் போதிக்கத் தொடங்குவார். அனைவரும் சகோதர, சகோதரிகள் என்னும் புதிய கருத்தை எடுத்துரைப்பார். விடுதலையையும் அனைவரையும் உள்ளே ஏற்றுக்கொள்வதையும் முன்மொழிவார். தம் பணியில் எதிர்ப்புகளைச் சந்திக்கும்போதும், தமக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்யப்படும்போதும், தாம் புரிந்துகொள்ளப்படாதபோதும், தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போதும் இந்த அனுபவத்தை நோக்கியே திரும்புவார்.
(இ) இயேசு கடவுளுடைய அன்பார்ந்த மகனாக இருப்பதோடல்லாமல், அவருடைய இருத்தல் கடவுளுக்கு மகிழ்ச்சி தருகிறது. கடவுளின் பூரிப்புக்குக் காரணமாக இருக்கிறார் இயேசு. ஆக, தன்னுடைய மகிழ்ச்சிக்காகவோ, அல்லது மற்றவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்ல, மாறாக, கடவுளைப் பூரிப்படையச் செய்வதே இயேசுவின் தான்மையாக இருக்கிறது.
தண்ணீரிலிருந்து நிலத்திற்கு ஏறி வந்தவுடன் வானின் குரல் மேகத்திலிருந்து ஒலிக்கக் கேட்கிறார் இயேசு. சற்றுமுன் அவர் கேட்ட யோவானின் குரலை – ‘இவர் தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பார்’ – உண்மையாக்கும் பொருட்டு தம் பணியைத் தொடங்குகிறார் இயேசு.
நாம் திருமுழுக்கு பெற்றபோதும், ‘அன்பார்ந்தவர் நீர்!’ என்னும் தந்தையின் குரல் ஒலிக்கக் கேட்டோம். கடவுளால் அறியப்படுவது மட்டுமல்ல, அவரால் அன்பு செய்யப்படுவதும் ஒரு மேலான அனுபவமே. கடவுளின் இக்குரல் நம் உள்ளங்களில் எப்போதும் – குறிப்பாக, நாம் சோர்ந்து போகும்போதும், நம் பயணம் தொய்வடையும்போதும், நம் கால்கள் தடுமாறும்போதும், தான்மை மறுக்கப்படும்போதும் – ஒலிக்க வேண்டும். மேலும், ‘நீர் கடவுளின் அன்பார்ந்தவர்’ என்று நாம் ஒருவர் மற்றவரை வாழ்த்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தம் ஆவியைப் புகுத்தி நம்மை நம் பெற்றோர் வழியாக இந்த உலகுக்கு அனுப்பிய கடவுள், நாம் அவரைச் சென்று அடையும் வரை நமக்குத் தொடர்ந்து வழங்கும் உறுதிப்பாடு இதுவே: ‘அன்பார்ந்தவர் நீர்!’
நாம் செய்ய வேண்டியது என்ன?
(அ) நம் நாசரேத்தை (பாதுகாப்பு வளையத்தை) விடுத்து யோர்தான் (பணித்தளம்) செல்ல வேண்டும்.
(ஆ) ஒட்டுமொத்த மானுடத்தின் கண்ணீர் என்னும் தண்ணீரில் இணைந்து நிற்க வேண்டும்.
(இ) தொடர்ந்து கரையில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நிற்க.
நம் அருள்கொடை அடையாளம் அல்ல, மாறாக, திருமுழுக்கு அடையாளமே நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்கவும், நம் வேறுபாடுகளைக் கொண்டாடவும், ஒருவர் மற்றவருக்குப் பணி செய்யவும் நம்மைத் தூண்டுகிறது என்பதே கூட்டியக்கத்துக்கான மாமன்றம் முன்மொழிகிற பாடம். (யூபிலி கி.பி. 2025 துணுக்கு 2).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment