இன்றைய இறைமொழி. வெள்ளி, 5 ஜனவரி 2024. கடவுளால் அறியப்படுதல்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 5 ஜனவரி 2024
கிறிஸ்து பிறப்புக் காலம்
1 யோவான் 3:11-21. யோவான் 1:43-51

கடவுளால் அறியப்படுதல்

நாம் அதிகமாகக் கேட்கிற ஒரு சொல்லாடல் ‘சமூக ஊடகக் கட்புலப்பாடு‘ (ஆங்கிலத்தில், ‘சோஷியல் மீடியா விஸிபிலிட்டி’ ‘social media visibility‘). தொழில்நிறுவனத்துக்கு மட்டுமல்ல, தனிநபருக்கும் கட்புலப்பாடு தேவையானதாக இருக்கிறது. சாலையில் நாம் காணும் விளம்பரப் பதாகைகள், கட்அவுட்கள், பில்போர்ட், சமூக ஊடகங்களில் நாம் பரவலாக்கம் செய்யும் நம் வீடியோ, டெக்ஸ்ட், பெயர், வாட்ஸ்ஆப்பில் நாம் வைக்கும் ஸ்டேடஸ், நாம் எழுதிய புத்தகத்தின்மேல் நாம் இடும் பெயர், நம் வீட்டுக்கு வெளியே வைத்திருக்கும் பெயர் பலகை என எல்லாவற்றுக்கும் காரணம் இந்த ஒற்றைச் சொல்தான்: ‘கட்புலப்பாடு’ (‘விஸிபிலிட்டி’). எத்தனை பேருக்கு நம்மைத் தெரியும், எத்தனை பேர் நம் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் பார்த்தார்கள், நம் வீடியோ அல்லது எழுத்துக்கு எத்தனை லைக்ஸ் வந்தது என்னும் கவலைகள் எழுவதற்குக் காரணமும் இதுவே.

இன்னொரு பக்கம், முன்பின் தெரியாத ஒரு நபர் நம்மைப் பார்த்து, ‘நீங்கதான அவர்?’ எனக் கேட்கும்போது நம் மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. நம்மைவிட சமூகநிலையில் பெரிய ஒருவரோ, முதன்மையான பிரமுகரோ இந்தக் கேள்வியைக் கேட்டால் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது.

மேலும், நாம் மற்றவர்களை அறிந்துகொள்வதை விட, மற்றவர்கள் நம்மை அறிந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட கதைமாந்தர் ஒருவரைச் சந்திக்கிறோம். அவர்தான் நத்தனியேல். இவர் மற்ற நற்செய்தி நூல்களில் பர்த்தலமேயு எனவும் அறியப்படுகிறார். இவர் இந்தியாவுக்கும் வந்ததாகவும் மரபுவழிச் செய்தி உண்டு.

நத்தனியேலின் நண்பர் பிலிப்பு இவரிடம் வந்து, ‘இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்’ என்கிறார். தான் கண்டதை ஒரு நம்பிக்கை அறிக்கையாக வெளிப்படுத்துகிறார் பிலிப்பு. நத்தனியேலோ, ‘நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?’ என்கிறார். ‘கடவுளிடமிருந்து வந்த ஒருவர்’ பற்றி பிலிப்பு பேசும்போது, நத்தனியேல் ‘நாசரேத்திலிருந்து வந்ததை’ மட்டுமே பற்றிக்கொள்கிறார். பிலிப்புவின் அறிதல் அகலமாக இருந்தது. நத்தனியேலின் அறிதல் குறுகியதாக இருக்கிறது.

எந்தவொரு வாக்குவாதத்துக்கும் இடம்தர விரும்பாத பிலிப்பு, ‘வந்து பாரும்’ என்கிறார். நத்தனியேல் சென்று இயேசுவைக் காணும்போது, ‘இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்’ என்கிறார் இயேசு.

‘என்னை உமக்கு எப்படித் தெரியும்?’ எனக் கேட்கிறார் நத்தனியேல். ‘என்னை எங்கிருந்து உமக்குத் தெரியும்?’ என்றும் இக்கேள்வியை மொழிபெயர்க்கலாம். ‘நீர் அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உம்மைக் கண்டேன்’ என்கிறார் இயேசு. ‘அத்திமரத்தின் கீழ் இருத்தல்’ என்பதை ‘திருச்சட்டம் கற்றுக்கொண்டிருத்தல் அல்லது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருத்தல்’ என்று பெரிய கிரகோரியாரும், ‘அத்திமர இலைகளை ஆதாமும் ஏவாளும் உடுத்திக்கொண்டனர். அத்தி மரம் என்பது தொடக்கநிலை’ என்று அகுஸ்தினாரும் இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

நத்தனியேல் இயேசுவை நாசரேத்திலிருந்து வந்தவராகப் பார்க்கிறார். இயேசுவோ நத்தனியேலைத் தொடக்கத்திலிருந்தே அறிந்தவராகச் சொல்கிறார்.

நத்தனியேல் இயேசுவை அறிந்ததை விட, இயேசுவால் அறியப்பட்டவராக இருக்கிறார்.

ஒரு பக்கம் நாம் கடவுளை அறிந்துகொள்ள முயற்சிகள் எடுத்தாலும், இன்னொரு பக்கம் கடவுள் நம்மை அறிந்தவராக இருக்கிறார். நாம் கடவுளால் அறியப்பட்டவர்களாக இருக்கிறோம். இதையே பவுல் கலாத்தியத் திருஅவைக்கு எழுதுகிறார்: ‘இப்போது நீங்கள் கடவுளை அறிந்துள்ளீர்கள். உண்மையில், கடவுளால் அறியப்பட்டுள்ளீர்கள்’ (கலா 4:9).

‘ஆண்டவரே, நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கிறீர்’ என்று பாடுகிற திருப்பாடல் ஆசிரியர் (139), ‘என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு வியப்பாயுள்ளது. அது உன்னதமானது. என் அறிவுக்கு எட்டாதது’ (139:6) என்கிறார்.

கடவுளால் அறியப்படுதலின் நன்மைகள் எவை? (அ) நம் தன்மதிப்பு உயர்கிறது – அவர் பார்வையில் நாம் மதிப்புக்கு உரியவராக இருக்கிறோம். (ஆ) நம் பார்வை அகலமாகிறது – அவரிடமிருந்து கற்றுக்கொண்டு அவர் பார்ப்பதுபோலப் பார்க்கத் தொடங்குகிறோம். (இ) அவரின் உரிமைப்பொருளாக மாறுகிறோம் – அவரையே பற்றிக்கொள்கிறோம்.

இயேசுவால் அறியப்பட்டதைத் தான் அறிந்தவுடன், ‘ரபி, நீர் இறைமகன், நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்’ என்று சரணடைகிறார் நத்தனியேல்.

கட்புலப்பாடு (‘விஸிபிலிட்டி’) பற்றிய நம் ஆர்வத்தில், கடவுள் நம்மை அறிகிற கட்புலப்பாட்டையும் நினைவுகூர்வோம். சமூக ஊடக விஸிபிலிட்டி மறையக் கூடியது. அதன் நிலைத்தன்மை சில நிமிடங்கள்தாம். ஆனால், கடவுளின் பார்வையில் வருகிற விஸிபிலிட்டி என்றென்றும் நிலைத்திருக்கிறது.

நிற்க.

யூபிலி கி.பி. 2025-க்கான தயாரிப்பாக நாம் தொடங்கியுள்ள இந்த ஆண்டில் (2024), கடவுளுடைய பார்வை கொண்டு நாம் அனைவரையும் அனைத்தையும் காணும் வரம்வேண்டி இறைவேண்டல் செய்வோம். (யூபிலி துணுக்கு 1).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

2 responses to “இன்றைய இறைமொழி. வெள்ளி, 5 ஜனவரி 2024. கடவுளால் அறியப்படுதல்”

  1. Thayriam Avatar
    Thayriam

    Great indeed dear father is your reflection. Very deep and moving

    Like

  2. Arul Ajith Avatar
    Arul Ajith

    Such a creative and new way of looking God’s word fr

    Like

Leave a comment