இன்றைய இறைமொழி
திங்கள், 1 ஜனவரி 2024
இறைவனின் அன்னை தூய கன்னி மரியா
புத்தாண்டுப் பெருவிழா
எண்ணிக்கை 6:22-27. கலாத்தியர் 4:4-7. லூக்கா 2:16-21
தாயின் விரல் பிடித்த பயணம்
சிற்றூர் ஒன்றின் நடுவே ஓர் உயர்ந்த மலை. அந்த மலைமேல் ஏற வேண்டும் என்று ஒருவருக்கு விருப்பம். ஏற்கெனவே மலையிலிருந்து இறங்கி வருகிற ஒருவரைச் சந்திக்கிற அவர், ‘மேலே எப்படிச் சென்றீர்கள்? மேலே என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்கிறார். அவரும் இவருக்குப் பதிலுரைக்கிறார். அந்த வழி தனக்குச் சரி வராது என நினைக்கிற இவர், தொடர்ந்து நடக்கிறார். சற்று நேரம் கழித்து இன்னொருவரைச் சந்திக்கிறார். அவரிடமும் அதே கேள்விகளைக் கேட்கிறார். தொடர்ந்து நடக்கிறார். ஏறக்குறைய முப்பது பேரைச் சந்திக்கிறார். கேள்விகள் கேட்கிறார். ‘மலைக்கு மேலே சென்றால் இதுதான் தெரியுமா? இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறுவது இதைப் பார்க்கத்தானா?’ எனச் சொல்லி கீழேயே தங்கிவிடுகிறார்.
நிற்க.
முப்பது பேருடைய அனுபவங்களை அவர் கேட்டிருந்தாலும் அவர்களுடைய அனுபவம் ஒருபோதும் அவருடைய அனுபவமாக மாறப்போவதில்லை.
புதிய ஆண்டுக்குள் இன்று நாம் நுழைகிறோம். ‘உங்களுடைய கவலைகள் எல்லாம் புத்தாண்டு வாக்குறுதிகள்போல மறைந்துபோவதாக!’ என்பது ஓர் இத்தாலியப் பழமொழி. இந்தப் புதிய ஆண்டு நமக்கு அமைதியின், வளர்ச்சியின், வெற்றியின் ஆண்டாக அமைய வாழ்த்துகள்.
நம் புதிய ஆண்டுப் பயணம் எப்படி இருக்க வேண்டும்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று பயணங்கள் பற்றி வாசிக்கிறோம்: (அ) தீவனத்தொட்டியை நோக்கிய இடையர்களின் பயணம். (ஆ) குழந்தையைச் சந்தித்தபின் தங்கள் இல்லம் நோக்கிய இடையர்களின் பயணம். (இ) அன்னை கன்னி மரியாவின் உள்மனப் பயணம்.
(அ) தீவனத்தொட்டியை நோக்கிய இடையர்களின் பயணம்
இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது: ‘இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்’. மேலும், விண்ணகத் தூதர் பேரணி கடவுளைப் புகழ்ந்து பாடுகிறது. வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றவுடன், இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ‘வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டு விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் காண்கிறார்கள்’ (காண். லூக் 2:15-16).
பெத்லகேம் செல்லுமாறு வானதூதர்கள் இடையர்களுக்குக் கட்டளையிடவில்லை. அவர்கள் தாங்களாகவே புறப்படுகிறார்கள். தங்களுடைய ஆண்டவரை-மெசியாவை-மீட்பரைக் கண்டுகொள்ள விரும்புகிறார்கள். இறைவனை நோக்கிய இவர்களுடைய பயணம் உடனடியாகவும், விரைவாகவும், ஒருவர் மற்றவரோடு இணைந்ததாகவும் நடக்கிறது. மேலும், தங்கள் ஆடுகளை விட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள். மேலானதைப் பற்றிக்கொள்ள வேண்டுமெனில் கீழானதை விட வேண்டும்.
இந்தப் புதிய ஆண்டில் நம் பயணம் முதலில் இறைவனை நோக்கியதாக இருக்கட்டும். கண்டிப்பாக இறைவனை நோக்கிப் போக வேண்டும் என்னும் கட்டாயத்தால் அல்ல, மாறாக, ‘ஆண்டவர்-மெசியா-மீட்பர் எனக்குத் தேவை’ என்னும் தனிப்பட்ட விருப்பத்தால் போக வேண்டும். ஒவ்வொரு சூழலிலும் உடனடியாகவும் விரைவாகவும் நடைபெற வேண்டும். நாம் பயணத்தில் ஒருவர் மற்றவரை, குறிப்பாக, ஓர் ஆன்மிக வழிகாட்டியை நமக்கென வைத்துக்கொள்ள வேண்டும். ‘விரைவாகச் செல்ல வேண்டுமெனில் தனியாகச் செல், தூரமாகச் செல்ல வேண்டுமெனில் இணைந்து செல்’ என்பது ஆப்பிரிக்கப் பழமொழி (இப்பழமொழியை திருத்தந்தை பிரான்சிஸ், ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்னும் திருத்தூது ஊக்கவுரையில் பயன்படுத்துகிறார்). கூட்டியக்கத்துக்கான மாமன்றம் பற்றிய கலந்தாலோசித்தலின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறோம். திருஅவையில் நாம் பெறும் இறையனுபவம் அனைவரையும் உள்ளடக்கிய அனுபவமாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
(ஆ) குழந்தையைச் சந்தித்தபின் தங்கள் இல்லம் நோக்கிய இடையர்களின் பயணம்
‘குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா (2:17-18). இயேசுவின் சமகாலத்தில் இடையர்களைப் பொய்யர்கள், திருடர்கள் என அழைக்கப்பட்டார்கள். ஏனெனில், தங்கள் கவனக்குறைவால் ஆடுகள் குறைந்துபோனால், ‘அவற்றைக் கொடிய விலங்குகள் கொன்றுவிட்டன’ என்றுப் பொய்யுரைப்பர். மேய்ச்சல் நிலத்தைத் தேடி அலைவதற்குச் சோம்பல்பட்டு, மற்றவர்களின் விளைநிலங்களில் மந்தையை மேயவிடுவர். இப்படிப்பட்டவர்கள் ஆண்டவர்-மெசியா-மீட்பர் பற்றிய செய்தியை உரைக்கிறார்கள். இவர்களுடைய சொற்களைக் கேட்டு அனைவரும் வியப்படைகிறார்கள். ஆக, அவர்கள் பெற்றிருக்கிற செய்தி அவர்களுடைய தான்மையைக் கூட்டுகிறது. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொன்னாலும் நம் தான்மை என்பது நமக்கு உள்ளிருந்தே வருகிறது என்பதை இடையர்கள் உணர்ந்திருக்கிறார்கள். குழந்தையைப் பற்றி மரியா-யோசேப்பிடம் அறிவிக்கிறார்கள், மற்றவர்களிடமும் அறிவிக்கிறார்கள். இறையனுபவத்தைப் பெற்றவர்கள் அதைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ள இயலாது.
இடையர்களின் இந்தப் பயணம் நாம் ஒருவர் மற்றவரை நோக்கி மேற்கொள்ள வேண்டிய பயணத்தைக் கற்றுத்தருகிறது. நாம் மற்றவர்கள்மேல் முத்திரைகள் இடுவதுபோல, நம்மேலும் மற்றவர்கள் முத்திரைகள் இடுகிறார்கள். முத்திரைகளை உடைக்க வேண்டுமெனில் முற்சார்பு எண்ணங்களையும் பயங்களையும் விட வேண்டும். முன்பின் தெரியாத மரியா-யோசேப்பு ஆகியோருடனும் ஊராருடனும் உரையாடத் தொடங்குகிறார்கள். இடையர்களின் எளிய உள்ளம், திறந்த மனம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.
(இ) அன்னை கன்னி மரியாவின் உள்மனப் பயணம்
‘நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் மிக நீண்ட பயணம் நம் உள்மனப் பயணம்’ என்கிறார் பவுலோ கோயலோ. இந்தப் பயணத்திற்கு முடிவென்பதே கிடையாது. அன்றாடம் நம்மை நாமே தேடிக்கொண்டே இருக்க முடியும். ‘மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார்’ என நிகழ்வை நிறைவு செய்கிறார் லூக்கா (2:19). ‘அனைத்தையும் கருவூலமாக்கி … மரியா சேகரித்துக்கொண்டிருந்தார்’ என்றும் மொழிபெயர்க்கலாம். படங்களைக் கிழித்துப் போட்டு அவற்றை மீண்டும் சேர்த்துப் படத்தை உருவாக்கும் விளையாட்டில், நாம் ஒவ்வொரு படமாக ஒன்றோடொன்று பொருத்துவதுபோல, வானதூதரின் வருகை, மங்கள வார்த்தை, எலிசபெத்தை நோக்கிய பயணம், யோசேப்பின் தயக்கம், கனவில் அவர் பெற்ற தெளிவு, திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அகுஸ்து சீசரின் கணக்கெடுப்பு, பெத்லகேம் நோக்கிய பயணம், விடுதி, தீவனத்தொட்டி என அனைத்துப் புள்ளிகளும் ஒன்றோடொன்று இணைவதைக் காணத் தொடங்குகிறார். தன் உள் மனம் நோக்கிப் புறப்படுகிறார்.
மரியாவின் உள்மனப் பயணம் புத்தாண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய மூன்றாவது பயணம் ஆகும். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ‘புள்ளிகளை இணைத்தல்’ பற்றிப் பேசினார். நம் வாழ்வில் நடக்கிற அனைத்து நிகழ்வுகளும், நாம் சந்திக்கிற அனைத்து நபர்களும் ஒன்றோடொன்று, ஒருவரோடொருவர் இணைந்தவை. வாழ்வின் நிகழ்வுகளைக் கொஞ்சம் தள்ளி வைத்து, நாம் கொஞ்சம் தள்ளி நின்று அவற்றைப் பார்க்கும்போது அவை இணைந்திருக்கிற விதம் நமக்குப் புரியத் தொடங்குகிறது. பொறுமையும், உணர்வுகள் மேலாண்மையும் இதற்கு அவசியம். அனைத்தையும் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒருவர், பொருந்தாதவற்றைப் புறந்தள்ளிவிட்டு மனஅமைதி கொள்வார். பொருந்தாதவற்றைப் பொருத்த முயற்சி செய்வதில் நாம் பல நேரங்களில் நம் வாழ்வில் அமைதியை இழந்துவிடுகிறோம்.
ஆக, இறைநோக்கிய, பிறர்நோக்கிய, தன்நோக்கிய என மூன்று பயணங்களை நாம் இப்புதிய ஆண்டில் மேற்கொள்தல் நலம். இடையர்களும் அன்னை கன்னி மரியாவும் நமக்குத் தூண்டுகோல்களாக நிற்கிறார்கள்.
புதிய ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண் 6:22-27). ‘யோம் கிப்பூர்’ நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே இது. இந்த ஆசியுரையில் மூன்று வாய்ப்பாடுகள் உள்ளன: ‘ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!’ என்னும் ஆசி இறைவனை நோக்கிய நம் பயணத்துக்கான ஆசியாக இருக்கிறது. ஏனெனில், இறைவன் ஒருவரே நமக்கு ஆசி வழங்கவும் நம்மைக் காப்பாற்றவும் வல்லவர். ‘ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!’ என்னும் இரண்டாவது ஆசி, ஒருவர் மற்றவரை நோக்கிய நம் பயணத்துக்கான ஆசியாக இருக்கிறது. ஆண்டவருடைய திருமுகம் நம்மேல் ஒளிரும்போது நம்மால் மற்றவர்களிடம் இறைவனின் திருமுகத்தைக் காண முடியும். ‘ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!’ என்னும் மூன்றாவது ஆசி, நம் உள்மனப் பயணத்துக்கான ஆசியாக இருக்கிறது. நம் உள்மனத் தேடலின் நிறைவாக அமைதியை நாம் கண்டடைய அருள்கூர்கிறார் கடவுள்.
இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். ‘இறைவனின் தாய்’ என்றால், அவர் ‘இறைவனையே பெற்றெடுத்தார்’ என்ற பொருளில் அல்ல. ஏனெனில், ‘படைக்கப்பட்டவர்’ ‘படைத்தவரை’ பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனிதத் தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை ‘கிறிஸ்துவின் தாய்’ அல்லது ‘இயேசுவின் தாய்’ என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), ‘இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!’ என்று அறிவித்தது. ஆக, ‘இறைவனின் தாய்’ என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.
காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7), புனித பவுல், ‘காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்’ என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேரமும் இடமும் தேவை. நேரத்தையே, பவுல், ‘காலம் நிறைவுற்றபோது’ என்றும், இடத்தையே, ‘பெண்ணிடம்’ என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார். ‘கடவுளின் மகன்’ என்று இயேசுவைச் சொல்வதன் வழியாக, மறைமுகமாக மரியாளை ‘கடவுளின் தாய்’ எனச் சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள், ‘இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்’ என்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக் கொடுக்கின்றார் (காண். யோவா 1:12).
இன்றைய நாளில் இயேசுவுக்குப் பெயரிடும் நிகழ்வையும் கொண்டாடுகிறோம். கடவுள் மனித வரலாற்றுக்குள் நுழைந்ததோடல்லாமல் ‘இயேசு’ என்னும் பெயரையும் அவர் பெறுகிறார். தம் பெயருக்கேற்ப மானுடத்தைப் பாவத்தின் கட்டுகளிலிருந்து மீட்டு விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்.
புதிய ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் பயணத்தை இறைவன்தாமே தம் அமைதியால் நிறைவுறச் செய்வாராக!
தாயின் விரல் பிடித்துத் தொடங்குவோம் புதிய பயணம் இன்று! மலைக்கு மேலே செல்வது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மலைக்குச் சென்றால் அனுபவம் நம்முடையதாகும்!
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment