இன்றைய இறைமொழி
ஞாயிறு, 31 டிசம்பர் 2023
திருக்குடும்பத் திருவிழா
தொடக்கநூல் 15:1-6, 21:1-3. எபிரேயர் 11:8, 11-12, 17-19. லூக்கா 2:22-40
கடவுளுக்கு உகந்த குடும்பம்
இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் நடுவில் உள்ள ஒரு வழக்கம் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை ஒரு துணிப்பையில் வைத்து அதை மரத்தில் கட்டிவைப்பது. அவர்களைப் பொருத்தவரையில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உயிர் தருவது கடவுள் என்பதும், அந்த உயிர் இந்த உலகுக்குப் பத்திரமாக வந்துவிட்டது எனத் தங்கள் முன்னோர்கள் வழியாக கடவுளுக்குச் செய்தி அனுப்புகிறார்கள் என்பதும் அவர்களுடைய நம்பிக்கை.
நம் இந்திய மரபில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை எடுப்பது இன்னொரு வழக்கம். போரில் வெற்றிகொண்ட அரசன் முன்னால், வெற்றிகொள்ளப்பட்ட அரசன் தன் மணிமகுடத்தைக் கழற்றி வைப்பதுபோல, மொட்டையிடும் சடங்கில் நம்மை அரசாளுகிற கடவுளின் திருமுன் குழந்தையின் மணிமகுடத்தைக் கழற்றி வைத்து, ‘இனி இந்தக் குழந்தையை நீர்தாமே ஆண்டு நடத்தியருளும்!’ எனச் சொல்கிறோம்.
‘ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமம் தேவைப்படுகிறது’ என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. ‘ஒரு குழந்தையை வளர்க்க கடவுள் தேவைப்படுகிறார்’ என நமக்குச் சொல்கிறது இன்று நாம் கொண்டாடும் இயேசு, மரியா, யோசேப்பு திருக்குடும்பத் திருவிழா.
‘ஆண்டவர்’ என்னும் சொல்லோடு தொடங்கி, ‘கடவுள்’ என்னும் சொல்லோடு நிறைவுபெறுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்: ‘ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குச் சென்றார்கள்’ … ‘குழந்தையும் கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.’ நற்செய்தி நிகழ்வின்படி இரு சடங்குகளுக்காக திருக்குடும்பம் எருசலேமுக்கு வருகிறது:
(அ) மரியாவின் தூய்மைச் சடங்கு – குழந்தைப்பேறு தாயைத் தீட்டாக்குகிறது எனச் சொல்கிற மோசேயின் சட்டம், ஆண் குழந்தை பிறந்த 40-வது நாளிலும், பெண் குழந்தை பிறந்த 80-வது நாளிலும் அவர் தூய்மையாக்கப்பட வேண்டும் என மொழிந்தது (காண். லேவி 12:1-8).
(ஆ) ‘மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை’ என ஆண்டவர் மொழிவதால் (காண். விப 13:2), ‘கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தும் ஆண்டவருக்குப் பலியிடப்பட்டு மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்’ (காண். விப 13:15). இதன் பின்புலத்தில், ஆண் தலைப்பேறான இயேசு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறார். இச்சடங்கின்படி குழந்தை லேவியர் ஒருவருடைய கைகளில் கொடுக்கப்பட்டு மீண்டும் பெற்றோரால் பெற்றுக் கொள்ளப்படும். அந்த வகையில் சிமியோன் இயேசுவை தன் கைகளில் ஏந்துகிறார்.
திருக்குடும்பத்தில் விளங்கிய மூன்று பண்புகள் நற்செய்தி வாசகத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன.
(அ) பணிவு: அன்னை கன்னிமரியாவுக்கு தூய்மைச்சடங்கு தேவையில்லாத நிலையிலும், இயேசு ஆண்டவராக இருந்ததால் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படத் தேவையில்லாத நிலையிலும், மோசேயின் திருச்சட்டத்திற்குப் பணிந்து எருசலேமிற்கு வருகிறது திருக்குடும்பம்.
(ஆ) எளிமை: ‘ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவர், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ கொண்டுவரட்டும்’ (காண். லேவி 12:6) எனச் சொல்கிறது மோசேயின் சட்டம். இயேசுவின் பிறப்பு எளிமையாக மாட்டுக்கொட்டிலில் நடந்ததுபோல, அர்ப்பணிப்பும் எளிமையாக நடக்கிறது. ‘ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’ என எழுதுகிறார் பவுல் (2 கொரி 8:9).
(இ) மௌனம்: நிகழ்வில், சிமியோன் மரியாவை நோக்கிப் பேசுகிறார், கடவுளைப் புகழ்கிறார். அன்னா கடவுளுக்கு நன்றி கூறுகிறார், மற்றவர்களிடம் குழந்தையைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், மரியாவும் யோசேப்பும் மௌனமாக நிற்கிறார்கள்.
மேற்காணும் மூன்று பண்புகள் இன்று நம் குடும்பங்களில் விளங்க வேண்டும். ஆண்டவருடைய திருச்சட்டத்திற்கும் திருஅவையின் திருச்சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் பணிந்து நிற்க நம் குடும்பங்கள் தயாராக இருக்கின்றனவா? இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதை விடுத்து, இல்லாததை இருப்பதுபோலக் காட்ட முயற்சிக்கிற குடும்பங்கள் எளிமையிலிருந்து தூரமாகிவிடுகின்றன. உரையாடல் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு மௌனமும் நமக்கு அவசியம். இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்கள், காணொலிகள் ஆகியவை நம் மௌனத்தைக் களைகின்றன.
மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நாசரேத்திலிருந்து எருசலேமுக்குச் செல்கிற திருக்குடும்பம், மீண்டும் எருசலேமிலிருந்து நாசரேத்து திரும்புகிறது.
இங்கே நாம் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரு திசைகள் உண்டு: ஒன்று, ஆலயம் நோக்கி. இரண்டு, வீடு நோக்கி. இறைவனின் திருச்சட்டத்திற்குப் பணிந்து ஆலயம் செல்கிறது திருக்குடும்பம். நாசரேத்து இல்லம் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும், ஞானத்தின் வளர்ச்சிக்கும், கடவுளுக்கு உகந்த நிலையில் வளர்வதற்கும் ஏற்ற தளமாக அமைகிறது.
இவ்வாறாக, கடவுளுக்கு உகந்ததாக எருசலேம் செல்கிற திருக்குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக நாசரேத்து திரும்புகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தமக்குப் பிள்ளைப்பேறு தந்து நம் வழிமரபைப் பெருகச் செய்வார் என்னும் நம்பிக்கை ஆபிரகாமுக்கு இருந்தாலும், இன்னொரு பக்கம் அவநம்பிக்கையும் அவசரமும் அவரைப் பற்றிக்கொள்கின்றன. ஆகையால்தான், ‘எலியேசர்தான் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்’ எனச் சொல்கிறார். இரண்டாம் வாசகத்தில், ஆபிரகாமின் கீழ்ப்படிதலைப் பற்றி வாசிக்கிறோம். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கு ஏற்ப நடப்பார் என நம்புகிற ஆபிரகாம் தன் மகனைப் பலியிட முன்வருகிறார்.
திருக்குடும்பத் திருவிழா நம் குடும்பங்களுக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
(அ) பணிவு, எளிமை, மௌனம் ஆகியவற்றைக் நம் பண்புகளாகவும் மாற்றிக்கொள்தல்.
(ஆ) ஆலயம் சென்றாலும், இல்லம் திரும்பினாலும் நம் மனம் கடவுளை நோக்கியே இருத்தல்.
(இ) உடல், ஞானம், ஆன்மிக வளர்ச்சிக்கான தளமாக நம் இல்லத்தை மாற்றி அமைத்தல்.
பல நேரங்களில் நம் இல்லங்கள் வெறும் உடைமாற்றும் இடங்களாகவும், உறங்கும் இடங்களாகவும் சுருங்கிவிட்டன. ஒருவர் மற்றவரிடம் உரையாடவோ உறவாடவோ நமக்கு நேரம் கிடைப்பதில்லை. விளைவாக, இறைவேண்டல் செய்யும் நேரமும் குறைந்துவிட்டது. கடவுளை விட்டு நாம் தூரமாகச் செல்லும்போது ஒருவர் மற்றவரைவிட்டும் தூரமாகச் செல்கிறோம். ஏனெனில், கடவுள்தாமே படைப்பின் முதல் குடும்பத்தை ஆசீர்வதித்துப் பெருகச் செய்தார் (தொநூ 1:28).
நிற்க.
நற்செய்தி வாசகம் இன்னொரு வகையான குடும்பத்தையும் நம் கண்முன் கொண்டுவருகிறது. சிமியோன் என்னும் முதியவர் இறைவனின் இல்லத்தில் இருக்கிறார். 82 வயது நிரம்பிய அன்னா ஆலயத்தில் பணிபுரிகிறார். இவர்கள் இறைவனையும் இறைவனுக்கு உகந்த அனைத்து மக்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களாக மாற்றிக்கொண்டவர்கள்.
இந்த உலகில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குடும்பத்துக்கு உரியவரே. போர், இயற்கைச் சீற்றம், ஏழ்மை, இறப்பு போன்ற காரணிகளால் பெற்றோர்கள் பிள்ளைகளிடமிருந்தும், பிள்ளைகள் ஒருவர் மற்றவரிடமிருந்தும், இணையர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த உலகத்தையும் திருக்குடும்பமாகக் கருதுபவர்கள் மேன்மையானவர்கள். அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பம் என்ற கட்டிலிருந்து விடுதலை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அனைவரையும் அனைத்தையும் அன்பு செய்யக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு சிறிய குழந்தையிலும் பிறஇனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியைக் காண்கிறார்கள்.
மனிதர்கள் குடும்பங்களை அமைக்கிறார்கள். ஆனால், கடவுள்தாமே அதைத் திருக்குடும்பமாக மாற்றுகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment