இன்றைய இறைமொழி. வெள்ளி, 29 டிசம்பர் 2023. வெளிப்பாடு அருளும் ஒளி

இன்றைய இறைமொழி
வெள்ளி, 29 டிசம்பர் 2023
கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5-ஆம் நாள்
1 யோவான் 2:3-11. லூக்கா 2:22-35

வெளிப்பாடு அருளும் ஒளி

‘ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்’ (சஉ 11:7). விவிலியத்தில் ‘கதிரவனைக் காணுதல்’ என்னும் சொல்லாடலுக்கு ‘பிறத்தல்’ என்னும் பொருள் உண்டு. கிறிஸ்து பிறப்பு விழாவில் ஒளி முதன்மையான அடையாளமாக உள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கும் நிகழ்வில், குழந்தையைக் கைகளில் ஏந்துகிற சிமியோன், ‘பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி!’ எனச் சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்கிறார். இயேசுவை மீட்பு என அழைக்கிறார் சிமியோன். இஸ்ரயேல் மக்கள் ஏற்கெனவே யாவே என்னும் கடவுளைத் தங்கள் கடவுளாகக் கொண்டுள்ளனர். அந்தக் கடவுளைப் போற்றுகிறார் சிமியோன். இயேசுவின் வழியாக கடவுள் பிற இனத்தாருக்கு வெளிப்படுத்தப்படுகிறார். ஒளியின் இயல்பு அனைத்தையும் தன்னை நோக்கி ஈர்ப்பது. சிமியோனை இழுக்கிறது இயேசு என்னும் ஒளி.

இன்றைய முதல் வாசகத்தில் அன்பு பற்றிப் பேசுகிற யோவான், அன்பின் இயல்பும் அனைத்தையும் தம்மிடம் ஈர்த்துக்கொள்வதே என எழுதுகிறார். அன்பு செய்பவர், வெறுப்பவர் என்னும் மானிடரை இரண்டாகப் பிரிக்கிற யோவான், வெறுப்பவர் இருளில் வாழ்கிறார் எனவும் அன்பு செய்பவர் ஒளியில் வாழ்கிறார் எனவும் குறிப்பிடுகிறார்.

கிறிஸ்து பிறப்பின் ஒளியைக் கொண்டாடுகிற இந்நாள்களில், அன்பு செய்வதன் வழியாக நாமும் அதே ஒளியை நம் வாழ்வில் பிரதிபலிக்க முயற்சி செய்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment