இன்றைய இறைமொழி. ஞாயிறு, 24 டிசம்பர் 2023. எனக்கு நிகழட்டும்!

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 24 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு
2 சாமுவேல் 7:1-5, 8-12, 14-16. உரோமையர் 16:25-27. லூக்கா 1:26-38

எனக்கு நிகழட்டும்!

நம் வாழ்வின் நிகழ்வுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: (அ) நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகள் – இந்நிகழ்வுகளில் செயலாற்றுபவர் நாமே. நாமே திட்டமிட்டுச் செய்கிற செயல்கள், பயணங்கள், முயற்சிகள், முன்னெடுப்புகள் ஆகியவை இவற்றில் அடங்கும். இந்நிகழ்வுகள் நம் கட்டுக்குள் இருக்கின்றன. அவற்றின் போக்கை நிறுத்தவோ, மாற்றவோ நம்மால் இயலும். ஆனால், இந்நிகழ்வுகள்மேல் நமக்கு உள்ள அதிகாரமே நமக்கு பதற்றத்தையும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்துவிடுகின்றன. (ஆ) நமக்கு நிகழ்கிற நிகழ்வுகள் – இந்நிகழ்வுகளைப் பொருத்தவரையில் நாம் செயப்படுபொருள்களே. எதிர்பாராமல் கிடைக்கும் உதவி, நமக்கு ஒருவர் காட்டும் இரக்கம் தாராள உள்ளம் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்நிகழ்வுகள் நம் கட்டுக்குள் இருப்பதில்;லை. இவற்றின் போக்கை நிறுத்தவோ மாற்றவோ பெரும்பாலும் இயலாது. இருந்தாலும், இவ்வகை நிகழ்வுகள் நமக்குச் சுதந்திரத்தைக் கொடுப்பதோடு இவை நம் வாழ்வை மேன்மைப்படுத்துகின்றன.

நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகளை விடுத்து, நமக்கு நிகழ்கிற நிகழ்வுகளைப் பற்றிக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாசரேத்தில் வாழ்ந்த கன்னி மரியாவுக்கு அறிவிக்கப்படும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். கன்னி மரியாவுக்கு நிகழ்கிற சிலவற்றைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர்: ‘அருள்மிகப் பெற்றவர்,’ ‘ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்,’ ‘கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்,’ ‘கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்,’ ‘உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்’.

மரியாவின் பதிலிறுப்பு நமக்கு வியப்பு தருகிறது. ‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்கிறார் மரியா. ‘உம் சொற்படியே நான் செய்கிறேன்’ என்றோ, ‘நான் செய்கிறேன்’ என்றோ அவர் சொல்லவில்லை.

முதல் வாசகத்தில் நாம் காண்கிற தாவீது, ‘ஆண்டவருக்காக நான் செய்கிறேன்,’ ‘அவருக்காக நான் ஓர் இல்லம் காட்டுகிறேன்’ என்று முன்வருகிறார். நாத்தான் வழியாக தாவீது அரசரிடம் உரையாடுகிற ஆண்டவராகிய கடவுள் தாம் அவருக்குச் செய்த அனைத்து நிகழ்வுகளையும் அவருக்கு நினைவூட்டுகிறார்: ‘ஆடுமேய்த்துக்கொண்டிருந்த உன்னை அழைத்தேன்,’ ‘எதிரிகளை அழித்தேன்,’ ‘புகழ்பெறச் செய்தேன்.’ ஆடு மேய்க்கிற ஒருவர் இஸ்ரயேலின் அரசராக மாறுமாறு செய்கிறார் கடவுள்.

ஆக, ‘நான் செய்கிறேன்’ என்னும் மனப்பாங்கை விடுத்து, ‘நீரே செய்யும்’ என்று ஆண்டவரிடம் சரணாகதி அடையுமாறு தாவீது தூண்டப்படுகிறார். மேலும், ஆண்டவராகிய கடவுள் அவருக்கு ஒரு வாக்குறுதி தருகிறார்: ‘ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போகிறார்.’ இங்கே, வீடு என்பது தாவீதின் வழித்தோன்றலைக் குறிக்கிறது. மெசியா வாசிப்பில், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த வாக்குறுதி நிறைவேறுகிறது: ‘அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.’

நாமே நிகழ்த்துகிற நிகழ்வுகளை விடுத்து, நமக்கு நிகழும் நிகழ்வுகளுக்கு நம்மையே கையளிக்க அழைக்கிறார்கள் தாவீதும் மரியாவும். நம் வாழ்வில் நாம் எதையாவது செய்ய வேண்டும் என நினைத்துச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறோம். அடுத்தடுத்து ஓடுகிறோம். கடவுளுக்காக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தும் செயல்படுகிறோம். இந்தப் பரபரப்பிலும் கலக்கத்திலும் ஆண்டவராகிய கடவுள் நம் வாழ்வில் செயல்பட அவரை அனுமதிக்க மறந்துவிடுகிறோம்.

ஆண்டவராகிய கடவுள் தம்மில் செயலாற்றுமாறு அனுமதிக்கிற மரியா, ‘எனக்கு நிகழட்டும்’ எனச் சரணாகதி அடைகிறார். எதுவும் செய்யாமல் இறைவனின் கைகளில் நம்மைச் சரணாகதி ஆக்குதல் நலம். இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி அழைத்துச் செல்கிற ஆண்டவராகிய கடவுள், அவர்கள் செங்கடலைக் கண்டு பயந்தபோது, ‘ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்’ (காண். விப 14:14) என்கிறார். கடவுள் செயலாற்றுமாறு அவர்கள் அனுமதித்தாலே போதும்! அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இன்று நாம் ஏற்றுகிற மெழுகுதிரி ‘அன்பு’ என்னும் மதிப்பீட்டைக் குறிக்கிறது. அன்பிலும் மேற்காணும் இரு நிகழ்வுகள் உண்டு: ‘நாமே நிகழ்த்துகிற அன்பு,’ ‘நமக்கு நிகழ்கிற அன்பு.‘ நாமே நிகழ்த்துகிற அன்பில் தயக்கம், அச்சம், முற்சார்பு எண்ணம், ஏமாற்றம் இருக்கும். ஆனால், நமக்கு நிகழ்கிற அன்பு ஒரு கொடையாக மட்டுமே நம்மை நோக்கி வரும்.

‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ என்னும் சரணாகதி மனப்பான்மை நம்மில் பிறக்க இன்று முயற்சி செய்வோம். தாவீதின் ஏக்கம், மரியாவின் அச்சம் போக்கக் காரணமாக இருந்தது இந்த மனப்பான்மையே.

இந்த மனப்பான்மை பிறப்பதால் நாம் அடையும் நன்மைகள் எவை?

(அ) கட்டின்மை அல்லது சுதந்திரம் நமக்குக் கிடைக்கும். கீழ்ப்படிதலால் கிடைக்கும் பெரிய பலன் கட்டின்மையே. சாலையைக் கடக்கும் தந்தைக்கு அது ஒரு பொறுப்பு. ஆனால், அத்தந்தையின் விரல் பிடித்து நடக்கும் குழந்தைக்கு அது ஒரு விளையாட்டு.

(ஆ) பொறுமையும் சகிப்புத்தன்மையும் வளரும். நமக்கு வருகிற நிகழ்வுகளை மட்டுமல்ல, அவற்றோடு தொடர்புடைய மனிதர்களையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வோம்.

(இ) நம்மால் அனைத்தும் இயலாது என்னும் தாழ்ச்சி பிறக்கும். சில நேரங்களில் எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என நினைக்கிறோம். இந்த எண்ணம் பரபரப்பை உருவாக்கி தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்துகிறது.

இந்த மனப்பான்மை அடையத் தடைகள் எவை?

(அ) அதீத நம்பிக்கை கொள்வது – தாவீதிடம் இருந்த பிரச்சினை இதுவே. தன் அரசு, வளர்ச்சி, புகழ் அனைத்தும் தன்னால் வந்தது என எண்ணியவராக, ‘என்னால் ஓர் ஆலயமும் கட்ட முடியும்!’ எனச் சொல்கிறார். அவருடைய அதீத நம்பிக்கையை மறைமுகமாகக் கடிந்துகொள்கிற ஆண்டவர் தாவீதின் எளிய பின்புலத்தைச் சுட்டிக்காட்டி, அதீத நம்பிக்கையை, நம்பிக்கையாக மாற்றுகிறார்.

(ஆ) ‘இது எங்ஙனம் ஆகும்?’ என்ற மரியாவின் கேள்வி நம்மிலும் எழுவதுண்டு. அப்படி எழுகிற நேரங்களில், இந்தக் கேள்வியை ஆண்டவரை நோக்கிக் கேட்பதற்குப் பதிலாக நமக்கு நாமே கேட்டுக்கொண்டு நாமே அதற்கு விடை காண நினைக்கிறோம். விளைவு, அவசரம் நம்மைப் பற்றிக்கொள்கிறது.

(இ) அனைத்தையும் நம் கட்டுக்குள் கொண்டுவர நினைப்பது. நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும் அனைவரும் நம் கட்டுக்குள் இருக்க வேண்டும் என அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், அமர்ந்து யோசித்துப் பார்த்தால் இத்தகைய எண்ணம் நம் அமைதிiயைக் குலைக்கிறது என்பதை உணர்கிறோம்.

தந்தையின் இதயத்தோடு‘ (Patris Corde, 2020)என்னும் திருத்தூது மடலில் யோசேப்பைப் பற்றிப் பேசுகிற திருத்தந்தை பிரான்சிஸ், தன் படகின் போக்கை மாற்றுகிற சுக்கானைக் கடவுளிடம் கொடுத்துவிட்டு அமைதியாக அமர்கிறார் யோசேப்பு என்கிறார்.

‘உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!’ என்னும் துணிச்சலைப் பெற அன்னை கன்னி மரியாவும் யோசேப்பும் நமக்காகப் பரிந்துபேசுவார்களாக!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment