இன்றைய இறைமொழி
சனி, 16 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – சனி
சீராக்கின் ஞானம் 48:1-4, 9-11. மத்தேயு 17:10-13
எலியா வந்துவிட்டார்!
இன்றைய இரண்டு வாசகங்களையும் இணைக்கிற ஒற்றைச் சொல் ‘எலியா‘.
முதல் வாசகம் சீராக்கின் நூலின் இரண்டாம் பகுதியான, ‘மூதாதையர் அஞ்சலி’ பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் முதன்மையான கதைமாந்தர்களுக்குப் புகழஞ்சலி செலுத்துகிறார் ஏசு பென் சீராக் (சீராக்கு ஞானநூலின் ஆசிரியர்).
எலியா பற்றிய இரண்டு கருத்துருகளை நாம் இங்கே கற்கிறோம்: (அ) ‘எலியா நெருப்பு போல இருந்தார்’ – நெருப்பு என்பது விவிலியத்தில் மாற்றம், புதிய உருவாக்கம், பழையன அழித்தல், கடவுளின் மாட்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. நெருப்பு தழுவும் எந்தப் பொருளும் நெருப்பாக மாறுகின்றன. எலியாவின் சொல் தீ போல ஒளிர்ந்து மக்களின் அறியாமை போக்கியது. பாகால் இறைவாக்கினர்களை எதிர்கொள்ளும் நிகழ்வில் வானிலிருந்து நெருப்பு பொழியச் செய்கிறார் எலியா. நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் அவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். (ஆ) ‘தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்பினார்’ – இங்கே தந்தை என்பது கடவுளையும் மகன் என்பது இஸ்ரயேல் மக்களையும் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் தம் சினத்தால் இஸ்ரயேல் மக்களிடமிருந்து தம் உள்ளத்தைத் திருப்பிக்கொண்டபோது, அவர்களை நோக்கி மீண்டும் திரும்புமாறு அவர்களுக்குக் கடவுளின் அடையாளமாகத் திகழ்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி, இயேசுவின் உருமாற்ற (தோற்றமாற்ற) நிகழ்வின் தொடர்ச்சியாக உள்ளது. மலையிலிருந்து இயேசுவும் சீடர்களும் இறங்கி வருகிறார்கள். மலையில் இயேசுவோடு எலியாவும் மோசேயும் நிற்கக் காண்கிறார்கள் சீடர்கள். ‘எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?’ எனக் கேட்கிறார்கள் சீடர்கள். மெசியா (அருள்பொழிவு பெற்றவர்) வருவதற்கு முன்னர் எலியா மீண்டும் வருவார் என்பது அன்றைய நம்பிக்கையாக இருந்தது. ஒருவேளை இயேசுவே மெசியாவோ எனத் தம் உள்ளங்களில் அரசல் புரசலாக எண்ணிக்கொண்டிருந்த சீடர்கள் அதைத் தெளிவுபடுத்த இவ்வாறு கேட்கிறார்கள். ‘எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்’ என இயேசு சொன்னபோது, திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் எனச் சீடர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
மறைமுகமாக திருமுழுக்கு யோவான் தமக்கு இரண்டு நிலைகளில் முன்னோடியாக இருந்ததை இயேசு இங்கே மொழிகிறார்: (அ) திருமுழுக்கு யோவானை மக்கள் கண்டுணரவில்லை. இயேசுவையும் கண்டுணரவில்லை. (ஆ) திருமுழுக்கு யோவான் எதிர்கொண்ட இரத்த சாட்சிய மரணத்தையே இயேசுவும் எதிர்கொள்வார்.
மெசியா வாசிப்பில், எலியா மெசியாவின் முன்னோடியாக இருக்கிறார் எனில், திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடியாக இருக்கிறார். எலியாவையும் மக்கள் கண்டுணரவில்லை. மெசியாவையும் கண்டுணரவில்லை.
எலியா, திருமுழுக்கு யோவான் என்னும் கதைமாந்தர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றைய வாசகங்களில் நம் முன் நிற்கிறார்கள். இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் செய்தி என்ன?
(அ) ‘எலியா’ என்றால் ‘ஆண்டவரே என் கடவுள்’ என்பது பொருள். அதாவது, ‘பாகாலே என் கடவுள்’ என மக்கள் வாழ்ந்த காலத்தில், யாவே ஆண்டவரைத் தன் கடவுள் என அறிக்கையிடுகிறார் இறைவாக்கினர் எலியா. வெறும் பெயராக மட்டுமல்ல, அதையே தன் பணிநோக்கமாகவும் அவர் ஏற்றார். எலியா கொண்டிருந்த நம்பிக்கை, துணிச்சல், சமரசம் செய்துகொள்ளாத திடம் ஆகியவற்றை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம்.
(ஆ) மக்கள் தன்னைக் கண்டுணரவில்லை என்றாலும், அவர்கள் விரும்பியவாறெல்லாம் தனக்குச் செய்தாலும் தன் பணியில் தெளிவாக இருந்தார் திருமுழுக்கு யோவான். மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும் மலர்கிற பூ போல, தன் பணியைச் செய்துவிட்டு மறைகிறார் திருமுழுக்கு யோவான். தன் வாழ்வின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர்கிற பூ போல, திருமுழுக்கு யோவான் போல, நம் வாழ்வின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பை நாம் உணரலாம்.
நிற்க.
‘இறைவாக்கினர்களின் தந்தை என அழைக்கப்படுகிறார் எலியா. ‘ஆண்டவரே என் கடவுள்’ என்று பொருள் தருகிற எலியாவின் பெயர் மக்கள் அனைவரும் கார்மேல் மலையில் உரைக்கிற நம்பிக்கை அறிக்கையாக மாறுகிறது. எலியாவை மேற்கோள் காட்டுகிற யாக்கோபு இறைவேண்டலில் நிலைத்திருக்கத் தூண்டுகிறார்: ‘நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன்விளைவிக்கும்’ (யாக் 5:16).’ (கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, எண். 2582)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment