இன்றைய இறைமொழி. திங்கள், 11 டிசம்பர் 2023. தூய வழி

இன்றைய இறைமொழி
திங்கள், 11 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் – திங்கள்
எசாயா 35:1-10. லூக்கா 5:17-26

தூய வழி

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருக்கிற இஸ்ரயேல் மக்கள் பெறுகிற விடுதலையையும் அவர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பி வருவதையும், இதற்காக ஆண்டவராகிய கடவுள் ஏற்படுத்தியுள்ள வழியையும் பற்றி எடுத்துரைக்கிறது இன்றைய முதல் வாசகம்.

இஸ்ரயேல் மக்கள் திரும்பி வரும் நிகழ்வு உருவகங்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. பூத்துக் குலுங்குதலும் மகிழ்ந்து பாடுதலும் புதிய வாழ்வைக் குறிக்கின்றன. எருசலேமின் அழகைக் காண இயலாமல் பார்வையற்றோர்போல இருந்த மக்கள் மீண்டும் எருசலேமைக் காண்பார்கள். தோரா வாசிக்கப்படுவதைக் கேட்க இயலாமல் காதுகேளாதோர்போல் இருந்த மக்கள் மீண்டும் தோரா கேட்பார்கள். அடிமைதத்தனத்தால் முடங்கிப் போயிருந்த அவர்களுடைய கால்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். இயற்கையிலும் வளமை மிளிரும். இந்த வளமை இஸ்ரயேல் மக்கள் பெறுகிற விடுதலை, மகிழ்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக இருக்கும்.

தொடர்ந்து, புதிய நெடுஞ்சாலை ஒன்று பிறக்கும். அந்தச் சாலை ‘தூய வழி’ என அழைக்கப்படும். ஏனெனில், இதுவரை சிலைவழிபாடு செய்து தங்களையே தீட்டுப்படுத்திக்கொண்ட மக்கள்போல இஸ்ரயேல் மக்கள் இருக்கமாட்டார்கள். அந்த வழியில் எந்தவிதமான தீங்கும் அவர்களுக்கு இருக்காது. அவர்களுடைய உள்ளம் மகிழ்ச்சி அடையும். துன்பமும் துயரமும் பறந்தோடும். ஆக, ஆன்மிக அளவிலும் உடல் அளவிலும் மனதளவிலும் இஸ்ரயேல் மக்கள் நலம் பெறுவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் தூக்கிக்கொண்டு சென்று வீட்டின் கூரையைப் பிரித்து இயேசுவின்முன் கொண்டுவருகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அவருக்கு நலம் தருகிறார். முடக்குவாதமுற்றவரின் பாவங்களை முதலில் மன்னிக்கிறார் இயேசு. இவ்வாறாக, அவர் முதலில் ஆன்மிக நலம் பெறுகிறார். பின்னர் உடல் நலம் பெற்றவராகத் தன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார். இயேசுவின் எதிரிகள் உள்ளத்தில் நலமற்றவர்களாக நிற்கிறார்கள்.

‘இறைவன் வந்து நம்மை விடுவிப்பார்’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 85). இங்கேயே, இறைவனைத் தேடிச் செல்கிறார்கள் மக்கள்.

முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் நெடுஞ்சாலை ஒன்றை ஏற்படுத்தித் தம் மக்களோடு நெருக்கமாகிறார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் முடக்குவாதமுற்றவருக்கு நெருக்கமாக வரும் பொருட்டு வழி ஒன்றை ஏற்படுத்துகிறார்கள் நண்பர்கள்.

தூய வழி நலம்தரும் வழியாக மாறுகிறது.

இன்று நாம் பயணம் செய்கிற நெடுஞ்சாலை எது? நான் பெற வேண்டிய நலம் எது?

நிற்க.

‘நோயுற்றோருக்கு நலமளியுங்கள்!’ – இந்தக் கட்டளையை ஆண்டவராகிய கிறிஸ்து தம் திருஅவைக்கு வழங்கியுள்ளார். நோயுற்றோருக்கு நம் உடனிருப்பைக் காட்டவும் அவர்கள் நலம்பெற வேண்டி அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதும் நம் கடமையாகும் (காண். கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, எண். 1509)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment