இன்றைய இறைமொழி. ஞாயிறு, 10 டிசம்பர் 2023. நற்செய்தியின் தொடக்கம்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 10 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
எசாயா 40:1-5, 9-11. 2 பேதுரு 3:8-14. மாற்கு 1:1-8

நற்செய்தியின் தொடக்கம்

நம்மைச் சுற்றி நடப்பவை அனைத்தும் செய்திகளாக நம் காதுகளை வந்தடைகின்றன. சில செய்திகளைக் கெட்ட செய்திகள் என்கிறோம். சில செய்திகளை நல்ல செய்திகள் என்கிறோம். செய்திகள் கேட்பவருடைய உள்ளத்தில் ஏதோ ஒரு சலனத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. கெட்ட செய்திகள் நம் அமைதியைக் குலைக்கின்றன. நல்ல செய்திகள் நமக்கு மகிழ்ச்சி தருகின்றன. கெட்ட செய்திகளை நாம் விரும்புவதில்லை. நல்ல செய்திகளை நாம் விரும்புவதோடு அவற்றுக்காகக் காத்திருக்கவும் செய்கிறோம்.

பாபிலோனியாவில் நாடு கடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த மக்களுக்கு இறைவாக்குரைக்கிற எசாயா, ‘ஆறுதல் கூறுங்கள்! என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்!’ என்று ஆண்டவராகிய கடவுள் உரைத்த நற்செய்தியை அறிவிக்கிறார். பாவம், கண்டனம், தண்டனை என்று கேட்ட அவர்களுடைய காதுகள் இப்போது ஆண்டவர் உரைக்கும் கனிமொழியைக் கேட்கின்றன. ‘எருசலேமிடம் இனிமையாகப் பேசுமாறு’ ஆண்டவர் கட்டளையிடுகிறார்.

ஆண்டவர் எருசலேமுக்கு அளிக்கும் நற்செய்தியில் மூன்று கூறுகள் உள்ளன:

(அ) எருசலேமின் போராட்டம் நின்றுவிட்டது

யூதா என்னும் தென்நாட்டு மக்களின் சிலைவழிபாட்டை முன்னிட்டு ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தண்டிக்கிறார். அவர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார்கள். இரக்கமே உருவான ஆண்டவர் அவர்களை நீதியுடன் தண்டிக்கிறார். அவர்களுடைய தண்டனை முடிவடைந்தது என்று அவர் இப்போது சொல்வதன் வழியாக, அவர்கள் விரைவில் பெறவிருக்கிற விடுதலையையும் முன்னுரைக்கிறார்.

(ஆ) ஆண்டவருக்கான வழி தயாரிக்கப்படுகிறது

அரசர்கள், ஆளுநர்களின் வருகைக்கு முன் வழிகள் தயாரிக்கப்படுவதுண்டு. வழிகள் தயாரிப்பு அரசரை வரவேற்பதற்கு என இருந்தாலும் மேடுகள் தகர்க்கப்படுகின்றன, பள்ளங்கள் நிரப்பப்படுகின்றன. கோணலானவை நேராக்கவும் கரடுமுரடானவை சமதளங்களாகவும் மாற்றப்படுகின்றன. ஆண்டவரின் வருகைக்கான தயாரிப்பாக மட்டுமன்றி, மக்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கு வருவதற்கான தயாரிப்பாகவும் இது அமைகிறது. உருவகமாக இதைப் பார்த்தால், ‘பெருமை உணர்வு’ என்னும் மேடு அகற்றப்படுகிறது, ‘தாழ்வு மனப்பான்மை’ என்னும் பள்ளம் நிரப்பப்படுகிறது. ‘இரட்டை உள்ளம்’ என்னும் கோணல் நேராக்கப்படுகிறது. ‘வெறுப்பு’ என்னும் கரடுமுரடு சமதளமாக்கப்படுகிறது.

(இ) கடவுளே அவர்களுடைய ஆயராக வருகிறார்

எருசலேம் மக்களை ஆட்சி செய்த அரசர்கள் அவர்களைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றார்கள். இப்போது ஆண்டவராகிய கடவுள்தாமே அவர்களுடைய ஆயராக வருகிறார். வலிமை இல்லாதவர்களையும் துணை தேவைப்படுபவர்களையும் சிறப்பான கவனம் செலுத்தி வழிநடத்துகிறார்.

எருசலேமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டவுடன், எருசலேம் நற்செய்தி அறிவிக்கும் பணியைச் செய்கிறது. ‘சீயோனே, நற்செய்தி தருபவளே!’ என்று எருசலேம் நகரத்தாரை உருவகமாக அழைக்கிறார் கடவுள்.

‘கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்’ என்று தொடங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இயேசுவின் பிறப்பு, போதனை, வல்ல செயல்கள், பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு அனைத்தையும் ஒற்றைச் சொல்லாக ‘நற்செய்தி’ என மொழிகிறார் மாற்கு. ‘தொடக்கம்’ என்பது தன் நூலின் தொடக்கப்பகுதியைக் குறிப்பதோடு, இனி வருகிற அனைத்து நிகழ்வுகளின் முன்னுரையாகவும் இருப்பதாகக் கூறுகிறார் நற்செய்தியாளர். ‘கடவுளின் மகன்’ என்றும் ‘கிறிஸ்து’ (மெசியா, அருள்பொழிவு பெற்றவர்) எனவும் மொழிகின்றார் மாற்கு.

நற்செய்தியின் தொடக்கம்‘ எனப் பதிவு செய்கிற மாற்கு, உடனடியாக திருமுழுக்கு யோவான் பற்றிப் பதிவு செய்கிறார். ‘பாலைநிலத்தில் குரல்’ என்று எசாயா மொழிவதும், ‘உமக்கு முன் தூதன்’ என்று மலாக்கி (3:1) மொழிவதும் திருமுழுக்கு யோவானில் நிறைவு பெறுவதாகச் சொல்கிறார் மாற்கு.

திருமுழுக்கு யோவான் நற்செய்தியின் தொடக்கமாக மூன்று நிலைகளில் அமைகிறார்:

(அ) தான் அறிவித்த செய்தியின் வழியாக!

திருமுழுக்கு யோவான் அறிவிக்கும் செய்தி மக்களை மனம் திருப்புகிற செய்தியாக அமைகிறது. தங்களுடைய வாழ்க்கையின் போக்கை முழுவதுமாறு திருப்புமாறு அவர்களை அழைக்கிறார் எசாயா.

(ஆ) எளிமையான இருத்தல் வழியாக!

மாற்கு நற்செய்தியாளர் திருமுழுக்கு யோவானின் ஆடை, உணவுப் பழக்கம் பற்றிச் சொல்கிறார் மாற்கு. திருமுழுக்கு யோவானின் இருத்தல் முறையே எளிமையான மாற்றுக் கலாச்சாரத்தை முன்மொழிகிறது.

(இ) மெசியா பற்றிய அறிவிப்பு வழியாக!

தொடக்கமுதல் தான் மெசியா அல்ல என்று மக்களிடம் அறிவிக்கிறார். மெசியா தன்னைவிட வலிமையும் மேன்மையும் உடையவர் என அறிக்கையிடுகிறார்.

முதல் வாசகத்தில், எருசலேமுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. எருசலேம் நற்செய்தி அறிவிப்பவராக மாறுகிறது. நற்செய்தி வாசகத்தில், அனைத்து மக்களுக்குமான நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. திருமுழுக்கு யோவான் நற்செய்தி அறிவிப்பவராக மாறுகிறார்.

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று நாம் ஏற்றும் மெழுகுதிரி ‘அமைதி’ என்னும் மதிப்பீட்டைக் குறிக்கிறது. பயம், கலக்கம் என பாபிலோனியாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் அமைதி பெறுகிறார்கள். மனமாற்றத்தின் செய்தி வழியாக அமைதியை நோக்கித் தன் சமகாலத்தவரை அழைக்கிறார் திருமுழுக்கு யோவான். ‘எல்லாரும் மனம் மாற வேண்டும் கடவுள் விரும்புகிறார்’ எனத் தன் திருஅவைக்கு எழுதுகிறார் பேதுரு.

இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?

ஆண்டவராகிய கடவுள் நமக்கு அன்றாடம் நற்செய்தியை வழங்குகிறார். ஆறுதலும் கனிமொழியும் தருகிறார். அவர் தருகிற நற்செய்தியைப் பெறுகிற நாம் நம் இல்லங்களிலும் வாழ்விடங்களிலும் பகிர்ந்துகொள்ள நம்மை அழைக்கிறார்.

நற்செய்தியின் தூதுவராக வருகிற திருமுழுக்கு யோவான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தப்படுத்துவதோடு, தன் வாழ்வாலும் அதை அறிவிக்கிறார்.

அமைதியற்ற நம் உள்ளங்களுக்கு அமைதியாக வருகிறார் நம் ஆண்டவர்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment