இன்றைய இறைமொழி
சனி, 9 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – சனி
எசாயா 30:19-21, 23-26. மத்தேயு 9:35-10:1, 6-8
கடவுளின் நெருக்கம்
ஆண்டவராகிய கடவுளின் திருவுளத்தை அறிய இயலாத நிலையில் இஸ்ரயேல் மக்கள் தாங்களாகவே முடிவுகள் எடுத்துச் செயல்படத் தொடங்குகிறார்கள். குறிப்பாக, சிரிய-எப்ராயிம் சண்டையின்போது (ஆகாசு அரசருக்குப் பின்னர்) எகிப்து நாட்டுடன் கைகோர்த்து தங்கள் எதிரியான அசீரியாவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் எகிப்து நாட்டை நோக்கித் திரும்பச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிற கடவுள், தாம் இஸ்ரயேல் மக்களோடு உடனிருப்பதை எடுத்துக்கூறுகிறார். எதிர்நோக்கு நிறைந்த பகுதியாக இருக்கிறது இன்றைய முதல் வாசகம்.
இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த மூன்று பிரச்சினைகளிலிருந்து கடவுள் அவர்களுக்கு விடுதலை தருகிறார்: (அ) அழுகின்ற அவர்கள் தங்கள் அழுகையிலிருந்து விடுதலை பெறுவார்கள். (ஆ) ஆண்டவரைக் காண இயலாத நிலையிலிருந்த அவர்கள் ஆண்டவரைக் கண்டுகொள்வார்கள். (இ) வறுமையிலிருந்த அவர்கள் வளமையைக் காண்பார்கள்.
இரு நிலைகளில் ஆண்டவர் அவர்களுக்கு அருகில் வருகிறார்: (அ) போதகரை (ஆண்டவரை) அவர்கள் தங்கள் கண்களால் காண்பார்கள். (ஆ) அவருடைய குரலைத் தங்கள் உள்ளங்களில் கேட்பார்கள்.
உடன்படிக்கைப் பேழை வழியாக, சீனாய் மலையின் நெருப்பின் வழியாகக் கடவுளைக் கண்ட அவர்கள் இனி அவரை நேருக்கு நேராகக் காண்பார்கள். இறைவாக்கினர்கள், குருக்கள், அரசர்கள் வழியாக ஒலித்த குரல் இனி மக்களுடைய உள்ளங்களில் ஒலிக்கும்.
கடவுளின் நெருக்கம் மூன்று நிலைகளில் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும்: (அ) இஸ்ரயேல் மக்கள் பொருளாதாரத்தில் வளமை அடைவார்கள். (ஆ) நிலமும் இயற்கையின் ஆற்றல்களான கதிரவனும் நிலவும் மேன்மை அடையும். (இ) இயற்கையின் ஏற்றத்தாழ்வுகள் மறைகின்றன.
மெசியா வாசிப்பில், கடவுள் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு நெருக்கமாக வருகிறார்.
நற்செய்தி வாசகத்தில், மக்கள் கூட்டத்தைக் காண்கிற இயேசு அவர்கள்மேல் பரிவுகொள்கிறார். அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கிறார், அவர்களுடைய நோய்நொடிகளைக் குணமாக்குகிறார், அவர்களோடிருக்கும்படி தம் திருத்தூதர்களை அனுப்புகிறார்.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) கடவுளின் நெருக்கம் நம் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அவர் நம்மை நெருங்கி வருவதற்குத் தடையாக இருக்கிற காரணிகள் அவரைப் பற்றிய முற்சார்பு எண்ணம், அவர்மேல் கொள்ளும் பயம், நம் கண்டுகொள்ளாத்தன்மை போன்றவை.
(ஆ) கடவுளின் நெருக்கத்தை அனுபவிக்கிற ஒருவர் அதை மற்றவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில், அதற்கான ஆற்றலை ஆண்டவர்தாமே நமக்கு அளிக்கிறார்.
(இ) அனைத்தும் கொடை என ஏற்றுக் கடவுளுக்கு நன்றி கூறுதல். ‘கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்!’ என இயேசு மொழிகிறார். அனைத்தையும் கடவுளின் கொடையாகவே பார்க்கிற ஒருவர் இயல்பாகவே நன்றி உணர்வுடன் வளர்வார்.
நிற்க.
‘ஒளி, இருள், காற்று, நெருப்பு, தண்ணீர், நிலம், மரம், அதன் கனி என அனைத்தும் கடவுளைப் பற்றிப் பேசுவதோடு, அவரின் மேன்மையையும் நெருக்கத்தையும் நமக்கு உணர்த்துகின்றன’ எனக் கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (காண். எண் 1147)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment