இன்றைய இறைமொழி. வியாழன், 7 டிசம்பர் 2023. பாதுகாப்பு தரும் கடவுள்!

இன்றைய இறைமொழி
வியாழன், 7 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – வியாழன்
எசாயா 26:1-6. மத்தேயு 7:21, 24-27

பாதுகாப்பு தரும் கடவுள்

நேற்றைய வாசகங்களில், மெசியா என்பவர் பசி அகற்றி நிறைவு தருபவர் எனக் கண்டோம். இன்றைய வாசகங்கள் மெசியாவை பாதுகாப்பு தரும் கடவுள் என முன்மொழிகின்றன.

எசாயா இறைவாக்கினர் நூலில் காணப்படும் ‘மீட்கப்பட்டோரின் பாடல்‘ என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய முதல் வாசகப் பாடம். மீண்டும் அழகுடன் கட்டி எழுப்பப்பட்ட எருசலேம் நகரம், அந்த நகரத்தைக் காக்கும் பாதுகாப்பான சுவர்கள் மற்றும் கொத்தளங்கள். எழில்மிக்க பாதுகாப்பான நகரத்தைக் கட்டி எழுப்புகிறவர் ஆண்டவர். இந்த நகரத்தின் கதவுகளை அவர் திறந்துவிடுகிறார். திறந்த கதவுக்குள் நுழைவது ஒருவர் அந்த இல்லத்தின் அல்லது நகரத்தின்மீது கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது.

எருசலேமுக்குள் எதிரிகள் நுழைந்தபோது அவர்கள் கதவுகளை உடைத்துக்கொண்டு நுழைந்தனர். இப்போது எருசலேம் நகருக்கு உரியவர்கள் அதன் வாயில் வழியே நுழைகிறார்கள். எதிரிகளின் நுழைவு உள்ளிருப்போரின் அமைதியைக் குலைத்தது. இப்போது நுழைபவர்கள் அமைதியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்கள். இந்த நம்பிக்கையே செயல்களாக அவர்களுடைய வாழ்வில் மாறுகிறது. ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் செய்த செயல்களை – உயரத்தில் வாழ்வோரைத் தாழ்த்துதல், எளியவரை உயர்த்துதல் – அவர்களும் செய்கிறார்கள்.

இங்கே, ஆண்டவராகிய கடவுள்தாமே நகரை மீண்டும் கட்டி எழுப்புகிறார். அந்த நகரை மீண்டும் இஸ்ரயேல் மக்களுக்கு உரிமையாக்குகிறார். உரிமையாக வந்த மக்களோடு உடனிருந்து அவர்களுக்கு அமைதி அருள்கிறார். அவர்களுடைய எதிரிகளைத் தகர்க்கிறார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குப் பாதுகாப்பையும் அவர்களுடைய உள்ளங்களுக்கு அமைதியையும் அளிக்கிறார். பாதுகாப்பை உணர்கிற உள்ளம் இயல்பாகவே அமைதிகொள்கிறது.

நற்செய்தி வாசகம் மலைப்பொழிவின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானப்பாடங்கள் பொதுவாக இரு தெரிவுகளை முன்வைத்து அவற்றிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு வாசகரைத் தூண்டுகின்றன. அந்த வரிசையில், ஞான ஆசிரியரான இயேசு, தம் மலைப்பொழிவு முடிக்கும்போது, இரு தெரிவுகளை முன்மொழிந்து – பாறை மீது வீட்டைக் கட்டுதல், மணல்மீது வீட்டைக் கட்டுதல் – அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். தெரிவை மேற்கொள்ளுமுன், சொற்கள் வழியாக அல்ல, மாறாக, தந்தையின் திருவுளத்திற்கு ஏற்றாற்போல் செயலாற்றுவதன் வழியாகவே விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்பதைத் தம் சீடர்கள் அறிய வேண்டும் என விரும்புகிறார்.

மணல்மீது வீடு கட்டுதல் எளிதான செயல். அதற்குத் தேவையான உழைப்பு குறைவு. பலரும் இதையே தெரிவுசெய்வர். ஆனால், ஆபத்துக்காலத்தில் இந்த வீடு அழிந்துவிடும்.

பாறைமீது வீடு கட்டுதல் கடினமான செயல். அதற்குத் தேவையான உழைப்போ அதிகம். சிலரே இதைத் தெரிவுசெய்வர். ஆனால், எந்த ஆபத்தையும் இந்த வீடு எதிர்கொள்ளும்.

வெறும் நம்பிக்கை மட்டும் கொண்டிருந்து, சொற்களால் அதை அறிக்கையிடுவது என்பது எளிதான செயல். ஆனால், செயல்படுதல் கடினமானது. செயல்பாடுகள் வழியாகவே நாம் விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள இயலும்.

இன்னொரு பக்கம், மணல் வீடு பாதுகாப்பின்மையின் அடையாளமாகவும், பாறைமீது கட்டப்பட்ட வீடு பாதுகாப்பின் அடையாளமாகவும் இருக்கிறது. மெசியா பாதுகாப்பான வீட்டைக் கட்டுகிறார். அவர் இடுகிற அடித்தளம் பாறைமீது அமைகிறது.

மெசியா வாசிப்பில் இதைக் காணும்போது, ஆண்டவராகிய கடவுள் எருசலேம் நகரைக் கட்டி எழுப்புகிறார். மெசியாவின் உடனிருப்பு பசி அகற்றி நிறைவு தருகிறது என்று நேற்றைய வாசகத்தில் கண்டோம். பசித்த வயிற்றுக்கு உணவளித்த மெசியா பாதுகாப்பு தருபவராக இன்றைய வாசகங்களில் முன்மொழியப்படுகிறார். மெசியாவாகிய கிறிஸ்து புதிய எருசலேம் என்னும் திருஅவையைக் கட்டி எழுப்புகிறார். ஏனெனில், அவர் வெறுமனே சொற்களால் அல்ல, மாறாக, தம் தந்தையின் திருவுளப்படி செயல்பட்டதால் உறுதியான பாறைமீது (‘பேதுருவின்மேல்!’) கட்டுகிறார்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடம் என்ன?

ஆண்டவராகிய கடவுளின் உடனிருப்பு நமக்கு பாதுகாப்பு தருகிறது. ஆண்டவர் தம் வீட்டைக் கட்டி எழுப்புவதுபோல நம் இல்லமும் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனில், நம் நம்பிக்கை செயல்களாகக் கனிய வேண்டும்.

இன்று நாம் கொண்டாடுகிற புனித அம்புரோஸ், நம் நம்பிக்கையும் செயல்களும் கைகோர்க்க நமக்காக இறைவேண்டல் செய்வாராக!

நிற்க.

கடவுளுக்கு ஏற்புடையவராதல் பற்றிப் போதிக்கிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,’ ‘நம்பிக்கையும் செயல்களும் இணைந்தே செல்கின்றன. ஆண்டவராகிய கடவுளின் அருளே நாம் அவர்மேல் நம்பிக்கை கொள்வதற்கு அடிப்படையாக இருக்கிறது’ என மொழிகிறது (காண். எண்கள் 1917-2016).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment