இன்றைய இறைமொழி
புதன், 6 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – புதன்
எசாயா 25:6-10. மத்தேயு 15:29-37
எனக்கொரு விருந்தினை!
இன்றைய வாசகங்களிலும் பதிலுரைப்பாடலிலும் மேலோங்கி நிற்கிற ஒரு சொல்லோவியம் ‘விருந்து.’
படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேல் ஏற்பாடு செய்கிற விருந்து பற்றி முன்னுரைக்கிறார் இறைவாக்கினர் எசாயா. இந்த விருந்தின் கூறுகளாக இறைவாக்கினர் முன்மொழிபவை இரண்டு: ஒன்று, இந்த விருந்தை ஏற்பாடு செய்கிறவர் ஆண்டவராகிய கடவுள். இரண்டு, இந்த விருந்து மகிழ்ச்சியின் விருந்து. ஏனெனில், மக்களினங்களின் முகத்தை மூடியுள்ள முக்காடுகள் அகற்றப்படும். ஏனெனில், முக்காடு அணிதல் என்பது இறப்புக்காகத் துக்கம் கொண்டாடுவதைக் குறித்தது. துக்கத்திற்குக் காரணமாக இருக்கும் சாவும் அழிக்கப்படும் என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு மலைமேல் மக்களுக்கு நலம் தருகிறார். பரிவுகொண்டு அவர்களுடைய பசியை ஆற்றுகிறார். பசி மறைந்து நிறைவு வருகிறது. ஒன்றுமில்லை என்னும் நிலை மறைந்து ஏழு கூடைகளில் அப்பங்கள் எஞ்சி இருக்கின்றன.
மெசியாவின் வருகையின்போது அவர் அனைத்து மக்களுக்கும் விருந்தளிப்பார் என்னும் எசாயாவின் இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது. ஆண்டவர்தாமே விரும்பி அளிக்கும் இந்த விருந்து மகிழ்ச்சியின் விருந்தாக அமைகிறது.
பதிலுரைப்பாடலில் (திபா 23), தாவீது ஆண்டவராகிய கடவுளிடம், ‘எனக்கொரு விருந்தினை நீர் ஏற்பாடு செய்கிறீர். எனது கிண்ணம் நிரம்பி வழிகிறது’ எனப் பாடுகிறார்.
விருந்து என்னும் சொல்லோவியம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) பசி என்பது அடிப்படையான உணர்வு. இந்த உணர்வு அனைவருக்கும் பொதுவானது. தொடர்ந்து நமக்கு வரக் கூடியது. நம் வலுவின்மையின் அடையாளமாக இருக்கிறது இந்த உணர்வு. நம் பசியை ஆற்றுவதன் வழியாக, நம் வலுவின்மையில் நமக்கு வலு சேர்ப்பவராக இருக்கிறார் கடவுள்.
(ஆ) வயிறு நிறைந்தவுடன் நம் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது. பசி என்னும் உணர்வு மறைந்து நிறைவு நம்மைத் தழுவிக்கொள்கிறது. நிறைவு உணர்வு நம்மை மற்ற பணிகள் நோக்கி நகர்த்துகிறது.
(இ) பரிவு ஒன்றே பசி ஆற்றும். ஆண்டவராகிய கடவுளின் பரிவுள்ளம் அவருடைய பசியாற்றுதல் செயலில் வெளிப்படுகிறது. ஆண்டவருடைய விருந்தில் பங்கேற்கும் நாம் பசித்திருப்பவர்களை நாடிச்சென்று அவர்களுக்கு நிறைவு தரும் வண்ணம் நாம் பரிவுள்ளம் கொண்டிருத்தல் நலம்.
நிற்க.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த இறைவேண்டலுக்கான விளக்கம் தருகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,’ ‘இறைவார்த்தைப் பசி, இவ்வுலகத்தாரின் பசி’ ஆகியவற்றில் நாம் நிறைவுகாண நம்மை அழைக்கிறது (காண். எண். 2835)
நிற்க.
வாழ்க்கை என்னும் பயணத்தின் 42-வது மைல்கல்லை நான் இன்று கடக்கிறேன். உங்களுடைய செபங்களையும் ஆசீரையும் வேண்டுகிறேன். மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி உள்ள இயேசுவின் தலைமுறை அட்டவணையில் 42 என்னும் எண் பயன்படுத்தப்பட்டள்ளது. மூன்று முறை பதினான்கு எனக் குறிக்கப்பட்டுள்ள இந்த எண் முழுமைக்கும் முழுமை என்னும் பொருள் தருகிறது. ஆண்டவராகிய கடவுள்தாமே நம் கிண்ணங்களைத் தம் அருளால் நிரம்பி வழியச் செய்வாராக! இன்றும்! என்றும்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment