இன்றைய இறைமொழி. செவ்வாய், 5 டிசம்பர் 2023. ஆவியால் பேருவகை

இன்றைய இறைமொழி
செவ்வாய், 5 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் முதல் வாரம் – செவ்வாய்
எசாயா 11:1-10. லூக்கா 10:21-24

ஆவியால் பேருவகை

இன்றைய முதல் வாசகத்தில் மெசியா பற்றிய எசாயாவின் முன்னறிவிப்பை நாம் வாசிக்கிறோம்: ‘ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்’ என மொழிகிறார் எசாயா. இந்த முன்னறிவிப்பு இயேசுவில் நிறைவேறுவதை நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. இயேசு ‘தூய ஆவியால் பேருவகையடைந்து’ கூறிய சொற்களை லூக்கா பதிவு செய்கிறார். மேலும், எசாயா காட்சியாக அல்லது கனவாகக் கண்ட அருள்பொழிவு பெற்றவரை, சீடர்கள் நேரடியாகக் காண்பதால் அவர்கள் இறைவாக்கினர்களைவிடப் பேறுபெற்றவர்கள் என வாழ்த்துகிறார் இயேசு.

ஆவி என்பதை ஆவியார் என்று எடுத்துக்கொள்ளும்போது நம் கிறிஸ்தவ நம்பிக்கையில் உள்ள மூவொரு இறைவனின் மூன்றாவது நபரையே இது குறிக்கிறது. எசாயாவின் சொற்களில் ‘ஆவி’ என்பது கடவுளின் ஆவியாரைக் குறிக்கிறது. ஆவியாரின் கொடைகள் எனப் பின்வருவனவற்றை முன்மொழிகிறார் எசாயா: ‘ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு.’

ஆவியால் அவர் நிரப்பப்படுகிற நாளில் மூன்று மாற்றங்கள் நடைபெறுவதாக எசாயா முன்னுரைக்கிறார்: (அ) விலங்குகள் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளும். (ஆ) ஆண்டவரை அனைவரும் அறிந்திருப்பார்கள். (இ) ஆண்டவரை அனைத்து இனத்தாரும் பற்றிக்கொள்ளுமாறு அவரிடம் வருவார்கள்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆவியால் பேருவகையடைந்து தந்தையைப் புகழ்கிறார். தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் மூன்று ஆள்கள் இந்த நிகழ்வில் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். வெளிப்படுத்துதல்-அறிதல் என்னும் இரண்டு சொல்லாடல்கள் முதன்மையாக இருக்கின்றன.

ஆவியால் பேருவகை அடைதல் – இதுவே இன்று நாம் கற்கும் பாடம்.

நாம் அனைவரும் தூய ஆவியாரை நம் திருமுழுக்கின்போது பெற்றோம். உறுதிப்பூசுதலில் அவரால் முத்திரையிடப்பட்டோம். தொடர்ந்து அவருடைய துணையுடன் வாழ்கிறோம். இவ்வாறாக, இயேசுவின் அருள்பொழிவு நிலையில் நாமும் பங்கேற்கிறோம்.

தம் சீடர்களுடைய உடனிருப்பு கண்டும், தம் தந்தை அனைவருக்கும் தம்மை வெளிப்படுத்துவது கண்டும் மகிழ்கிறார் இயேசு. நாம் சீடர்களாக வாழ்வது இயேசுவுக்கு மகிழ்ச்சி தருகிறது. நம் ஒவ்வொருவருடைய உடனிருப்பும்கூட நமக்கு ஊக்கம் தருகிறது. தூய ஆவியாரால் மகிழ்தல் என்பது தந்தை நம்மேல் பொழிந்துள்ள அளவற்ற அன்பை எண்ணிப் பார்த்தலில் நடக்கிறது.

தூய ஆவியாரால் இயக்கப்படுகிற வாழ்க்கை வாழவும், எந்நேரமும் தூய ஆவியாரைத் துணைகொண்டு நம் செயல்களில் ஈடுபடுவதும் நலம்.

நிற்க.

‘நாம் பெறுகிற தூய ஆவியாருடைய கொடைகளான ஞானம், விமரிசை, புத்தி, திடம், அறிவு, பக்தி, தெய்வபயம் போன்றவை நம்மில் ஏற்கெனவே உள்ள மதிப்பீடுகளோடு இணைந்து நம்மை நிறைவுள்ளவர்களாக்குகின்றன’ எனக் கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (காண். எண் 1831).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment