இன்றைய இறைமொழி. ஞாயிறு, 3 டிசம்பர் 2023. தந்தையும் தலைவரும்

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 3 டிசம்பர் 2023
திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
எசாயா 63:16-17, 64:1, 3-8. 1 கொரிந்தியர் 1:3-9. மாற்கு 13:33-37

தந்தையும் தலைவரும்

இன்று புதிய திருவழிபாட்டு ஆண்டுக்குள் நுழைகிறோம்.

இந்தியத் தலத் திருஅவையில் இன்றைய ஞாயிற்றை ‘கம்யூனியோ ஞாயிறு‘ எனக் கொண்டாடுகிறோம். ‘நம் இந்தியத் திருஅவைக்கு நாமே கைகொடுப்போம்!’ என்னும் நோக்கத்துடன் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்யூனியோ என்னும் அமைப்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இறைவேண்டல், பணி, உடனிருப்பு என தேவையிலிருக்கும் மறைப்பணித்தளங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது. இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக இறைவேண்டல் செய்வதோடு, நம் திருஅவைக்கு நாமே! என்று துடிப்புடன் நாமும் உதவிக்கரம் நீட்டுவோம்.

யூபிலி கி.பி. 2025: எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்னும் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பின் பின்புலத்தில் பார்க்கும்போது, இந்த நாளில் நாம் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடான ‘கடவுளின் வார்த்தை’ (இலத்தீன் மொழியில், ‘தேயி வெர்பும்’) என்னும் கொள்கைத் திரட்டின் கருத்துகளைச் சிந்திக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் தம்மையே திருவிவிலியத்திலும் திருமரபிலும் வெளிப்படுத்துகிறார். இவ்வாறு வெளிப்படுத்துகிற கடவுளுக்கு மனிதர்களாகிய நாம் தரும் பதிலிறுப்பே நம்பிக்கை.

இன்று நாம் ஏற்றுகிற மெழுகுதிரி எதிர்நோக்கை அடையாளப்படுத்துகிறது. ‘நீர் வானங்களைப் பிளந்து வர மாட்டீரோ?’ என்று இஸ்ரயேல் மக்கள் எதிர்நோக்கியிருந்ததை முதல் வாசகத்திலும், வீட்டுத் தலைவரைப் பணியாளர்கள் எதிர்நோக்கியிருக்க வேண்டியதன் அவசியத்தை நற்செய்தி வாசகத்திலும் கேட்கவிருக்கிறோம்.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாட நம்மையே தயாரிக்கும் காலம் இது. அவருடைய இரண்டாம் வருகையை எதிர்நோக்கும் காலம் இது. அவருடைய அன்றாட வருகையைக் கண்டுகொள்ளும் காலம் இது.

விழித்திருத்தல், பரபரப்பு, எதிர்பாராத அவருடைய வருகை, தயார்நிலை, தயார்நிலையில் இல்லையென்றால் தண்டனை என எந்நேரமும் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பதை விடுத்து, கொஞ்சம் சாய்ந்தே அமர்ந்துகொள்வோம். பரபரப்பில் அல்ல. மாறாக, அமைதியான, ஒய்யாரமான, ஓய்வில்தான் அவருடைய வருகை இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 63) அழகான இரண்டு சொல்லாடல்கள் உள்ளன: (அ) ‘ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை’, மற்றும் (ஆ) ‘நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்’.

எசாயா இறைவாக்கினர் நூலின் 63-ஆம் அலகு ‘குழுமப் புலம்பல்’ என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இஸ்ரயேலின் சார்பாகக் கடவுளிடம் பேசும் இறைவாக்கினர், கடவுளை, ‘தந்தை’ என அழைக்கிறார். ‘தந்தை’ என்ற சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் பரவலாகப் பயன்பட்டாலும், பழைய ஏற்பாட்டில், பெரும்பாலும் குலமுதுவர்களை (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகப் பகுதியில், ‘ஆண்டவரே தந்தை‘ என அழைக்கிறார் எசாயா. மேலும், ‘ஆபிரகாம் எங்களை அறியார். இஸ்ரயேல் (யாக்கோபு) எங்களை ஏற்றுக்கொள்ளார்’ என்று தங்களுடைய மூதாதையரின் தந்தையர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

‘ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை’ என்னும் சொற்கள் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்காக ஏங்குவதைச் சுட்டிக்காட்டுகின்றன. கடவுளோடு உறவு நெருக்கத்தில் இருக்கின்ற அவர்கள் தங்களது கடினமான வாழ்க்கைச் சூழலில், தங்கள் கையறுநிலையில் தங்கள் கடவுளிடம், குழந்தைகள் போலச் சரணாகதி அடைகின்றனர். மேலும், தங்களது பிறழ்வுபட்ட வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கின்றனர்: ‘நாங்கள் பாவம் செய்தோம் … நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப் போல உள்ளோம் … எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள் போலாயின. நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல எங்களை அடித்துச் சென்றன.’ தீட்டு, அழுக்கான ஆடைகள், கருகிய இலைகள், காற்றில் அடித்துச் செல்லப்படும் இலைகள் போன்ற உருவகங்கள் (சொல்லோவியங்கள்) இஸ்ரயேலின் பரிதாபமான நிலையைக் காட்டுவதுடன், இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒரு தந்தை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. தங்களுடைய மண்ணகத் தந்தையர்களான அரசர்களும், இறைவாக்கினர்களும், குருக்களும் தங்களைக் கைவிட, விண்ணகத்தில் வாழும் என்றுமுள தந்தையை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

களிமண் – குயவன்‘ உருவகம் இறைவாக்கினர் இலக்கியங்களில் நிறைய முறை பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுளே தன்னைக் குயவன் என்று முன்வைக்கின்றார். குயவன் கையில் உள்ள களிமண் போல இஸ்ரயேல் தன்னையே கடவுளிடம் கையளிக்கக் கூடாதா? என்று கடவுளும் ஏங்கியுள்ளார். அந்த ஏக்கத்தை இஸ்ரயேல் இங்கு நிறைவு செய்கிறது. ‘நாங்கள் களிமண் – நீர் எங்கள் குயவன்’ என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களின் சரணாகதியைக் காட்டுவதோடு, ‘இதோ நாங்கள் உம் கைகளில்! உம் விருப்பம் போல எங்களை வளைத்துக் கொள்ளும்!’ என்று இறைவேண்டல் செய்வது போல உள்ளன.

மேலும், ‘நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரோ?‘ என்ற இறைவாக்கினரின் வார்த்தைகள், கடவுளின் அவசரம் மற்றும் அவசியத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ‘வானங்களைப் பிளந்து கடவுள் இறங்கி வந்த நிகழ்வு’ ஏற்கெனவே சீனாய் மலையில் நடந்தேறியது. அங்கேதான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், ‘நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்’ என்று சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தங்களுடைய சிலைவழிபாட்டால் தாங்கள் இழந்த அதே உணர்வை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கமும் அழுகையும் எசாயாவின் வார்த்தைகளில் இருப்பதை நாம் அறிய முடிகிறது.

ஆக, தந்தையை விட்டுத் தூரம் போன மகன், தன் தந்தைக்காக ஏங்குவதோடு, தன் தந்தையின் கையில் தன்னையே சரணாகதியாக்குவதோடு, தன் தந்தை உடனடியாக வந்து தன்னை அள்ளிக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதாக அமைகின்றது இன்றைய முதல் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:3-9), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிரிவினை, பரத்தைமை, சிலைவழிபாடு போன்ற பிரச்சினைகள் பவுலின் கண்களில் விழுந்த தூசி போல அவருக்குக் கலக்கம் தந்தாலும், ‘நீங்கள் எல்லா வகையிலும் செல்வரானீர்கள்!’ ‘உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை!’ என்று வாயார வாழ்த்துகிறார். ஏனெனில், பவுலைப் பொருத்தவரையில் இறையருள் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படையானது. கொரிந்து திருஅவையில் பிரிவுகளுக்கும் சண்டை சச்சரவுகளும் இருந்தாலும், இறையருள் அங்கே ஒருபோதும் குறைவுபடுவதில்லை.

இறையருள் குழுமத்தை இரண்டு நிலைகளில் உறுதிப்படுத்துகிறது: (அ) குழுமம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறது, (ஆ) எந்தவித குறைச்சொல்லுக்கும் குழுமம் ஆளாகாதவாறு கடவுள் இறுதி வரை அதை உறுதிப்படுத்துகின்றார்.

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (காண். மாற் 13:33-37) இயேசுவின் பாடுகள், மற்றும் இறப்புக்கு முன் வழங்கப்பட்ட சான்று வாக்கியம் போல அமைந்துள்ளது. ‘கவனமாயிருங்கள், விழிப்பாய் இருங்கள், விழித்திருங்கள்’ என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயார்நிலையை இது வலியுறுத்துவதாக அமைகிறது. இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது நற்செய்தியாளரின் புரிதலாக இருந்தது.

தயார்நிலையை ஓர் உருவகம் வழியாக எடுத்துரைக்கிறார்: நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர். அவர் தன்னுடைய வேலைக்காரர்களைப் பொறுப்பாளர்களாக்கி, அவர்களை காவல்காக்கச் செய்கின்றார். நெடும் பயணம் என்பது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் அல்லது அவருடைய மறைந்த நிலையைக் குறிக்கிறது. தாம் தம் சீடர்குழுவை விட்டுச் சென்றவுடன், அது தூங்கிப் போகலாம், அல்லது மந்த நிலையை அடையலாம் என்ற அச்சம் இயேசுவுக்கு இருந்ததால், ‘விழிப்பாய் இருங்கள்’ என்று அவர்களை எச்சரிக்கின்றார். ஏனெனில், சீடர்களின் பொறுப்புணர்வு பெரிது.

ஆக, வேலைக்காரர் அல்லது பணியாளர் என்ற நிலையில் இருந்த சீடர்கள், வீட்டின் பொறுப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதுடன், வீடு முழுவதையும் கவனித்துக்கொள்ளும் கடமையையும் பெறுகிறார்கள். இங்கே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம் தலைவர் எனப் புரிந்துகொள்கிறோம்.

முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுளை நம் தந்தை என்றும் நற்செய்தி வாசகத்தில் அவரை நம் தலைவர் என்றும் அழைக்கிறோம்.

‘ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை’ என அழைத்து, ‘உம் கைகளில் களிமண் நாங்கள்’ என்று சரணாகதி அடைவதே இந்த ஞாயிற்றின் செய்தியாக இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் சந்திக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் – மரியா, யோசேப்பு, இடையர்கள், ஞானியர், எலிசபெத்து, செக்கரியா, சிமியோன், அன்னா – கடவுளுடைய கைகளில் தங்களையே சரணாகதி ஆக்கினர். ஏனெனில், வரவிருக்கும் குழந்தையே தங்கள் அனைவரின் தந்தை என்றும் தலைவர் என்றும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இன்றைய வழிபாட்டின் வாழ்வியல் சவால் என்ன? ‘நீரே எம் தந்தை-தலைவர்’ என்று பெத்லகேம் குழந்தையிடம் சரணாகதி அடைவது.

நம்மையே தந்தை எனவும் தலைவர் எனவும் கருதி வாழ்வது மேற்காணும் சரணாகதிக்குத் தடையாக அமைகிறது. என் வாழ்க்கைக்கு நானே தந்தை எனக் கருதும்போது அதீத பரபரப்பும் கவலையும் என்னைப் பற்றிக்கொள்கின்றன. நானே தலைவர் என்று உணரும்போது மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்த என் உள்ளம் விரும்புகிறது. இதற்கு மாறாக, கடவுளே தந்தை என நான் எண்ணும்போது என் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு எப்போதும் புன்னகைக்கும் குழந்தைபோல என்னால் மாற முடிகிறது. அவரே என் தலைவர் எனவும் நான் அவருடைய பொறுப்பாளர் எனவும் நினைக்கும்போது அதிகார உணர்வு மறைகிறது.

‘நீரே குயவன் – நான் களிமண்’ என்னும் சரணாகதி என்னில் எழுந்தால், அவர் வானத்தைக் கிழித்துக்கொண்டு கீழே இறங்கி வருகிறார்.

உமது வலக்கை நட்டு வைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!’ (காண். திபா 80) என்பது நம் இறைவேண்டலாகட்டும்.

திருவருகைக்கால செபங்களும் வாழ்த்துகளும்!

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment