இன்றைய இறைமொழி. வெள்ளி, 1 டிசம்பர் 2023. அழியாதவை நோக்கி!

இன்றைய இறைமொழி
வெள்ளி, 1 டிசம்பர் 2023
பொதுக்காலம் 34-ஆம் வாரத்தின் வெள்ளி
தானியேல் 7:2-14. லூக்கா 21:29-33

அழியாதவை நோக்கி!

இன்று புதிய மாதத்தின் முதல் நாள். முதல் வெள்ளி. ஆண்டின் இறுதி மாதத்தின் முதல் வெள்ளி.

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது:

ஒன்று, காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத ஒன்றை அறிந்து கொள்ள இயேசு அழைப்பு விடுக்கின்றார். காணக்கூடிய அத்திமரத்தின் தளிரிலிருந்து காண இயலாத கோடைக்காலத்தை ஒருவர் அறிந்துகொள்ள முடிகிறது. அது போல, காணக்கூடிய அறிகுறிகளைக் கொண்டு காண இயலாத இறையாட்சியை அறிந்துகொள்ள முடியும்.

இரண்டு, அனைத்தும் நிகழும் வரை தலைமுறை ஒழியாது. விண்ணும் மண்ணும் ஒழிந்தாலும் ஆண்டவரின் வார்த்தைகள் ஒழிய மாட்டா. ஆண்டவரின் வார்த்தை நிறைவேறும் என நாம் நேர்முகமாக எடுத்துக்கொள்ளலாம். எசாயா இறைவாக்கு நூலில் தனது வார்த்தை என்றென்றும் நிலைத்து நிற்பதாக (காண். 40:8) ஆண்டவராகிய கடவுள் முன்மொழிகின்றார்.

நிகழ்வுகளைத் தெரிந்து தெளிதல் பற்றி இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

அன்றைய மக்கள் இயற்கையின் இயக்கத்தை வைத்துப் பல விடயங்களைக் கணிப்பார்கள்.இயற்கை ஒரு கணிதச் சமன்பாடு போல இயங்குகிறது என்பது கிரேக்க மெய்யியலாளர் பித்தாகரஸின் வாதம். இப்படி இருந்தால் அப்படி நடக்கும் என்று நாம் கணித்துவிட முடியும். இறுதிக்கால நிகழ்வுகளும் அப்படிப்பட்டவையே என்கிறார் இயேசு. அதாவது, மண்ணிலும் விண்ணிலும் நாம் காணும் அடையாளங்களைக் கொண்டு மானிட மகனின் வருகை அண்மையில் உள்ளது என்பதை நாம் கணித்துவிட முடியும்.

இந்தப் போதனை நமக்குச் சொல்வது என்ன?

(அ) தேர்ந்து தெளிதல்

ஒரு விடயத்தின் பல கூறுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, அல்லவை நீக்கி, நல்லவை தழுவலே தேர்ந்து தெளிதல். ‘இது அல்ல! இது அல்ல!’ என்று நாம் ஒவ்வொரு அடுக்காக நீக்கும்போதுதான் இயற்கையின் மறைபொருளை உணர முடிகிறது. தேர்ந்து தெளிதல் வளர நாம் நம் உள்ளுணர்வுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

(ஆ) காரணம் – காரியம்

இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் காரணம் – காரியம் என்றே நகர்கின்றன. ‘காரணம் – காரியத்திற்கு’ அப்பாற்பட்டவற்றை நாம் வல்ல செயல்கள் என்று சொல்கின்றோம்.

(இ) என் வார்த்தைகள் ஒழியா!

தம் வார்த்தைகள் அனைத்தும் நிறைவுறும் என இயேசு மொழிகின்றார். அதாவது, தம் வார்த்தை பொய்யாகாமல் நிறைவுபெறும் என்கிறார். நம்மைத் தயார்நிலைக்கும் விழிப்புநிலைக்கும் அழைக்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் தொன்மை வாய்ந்தவரைக் காட்சியில் காண்கிறார் இறைவாக்கினர் தானியேல். இந்தக் காட்சி இரு படிகளில் அமைகிறது. முதலில், நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று எழுகின்றன. யூத மரபில் கடல் என்பது பேய்களின் உறைவிடம். கடலிலிருந்து எழும் விலங்குகள் தீமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. பாபிலோனிய அரசர் பல்சசாரின் ஆட்சிக்காலத்தில் இக்காட்சி தானியேலுக்கு அருளப்படுகிறது. காட்சியில் காண்கிற நான்கு பெரிய விலங்குகள் நான்கு அரசுகளைக் குறிக்கின்றன: (அ) சிங்கம் (பாபிலோனியர்கள்), (ஆ) கரடி (மேதியர்கள்), (இ) சிறுத்தை (பாரசீகர்கள்), (ஈ) பெயரில்லாத கொடூர விலங்கு (செலூக்கியர்கள்). இந்த நான்கு அரசுகளும் அழிக்கப்பட்டுக் கடவுளின் அரசு மலர்கிறது. ‘தொன்மை வாய்ந்தவர்’ என்னும் சொல் கடவுளைக் குறிக்கிறது.

கிறிஸ்தவப் புரிதலின்படி ‘சிங்கம்’ ‘பாபிலோனியர்களையும்,’ ‘கரடி’ ‘மேதிய-பாரசீகர்களையும்,’ ‘சிறுத்தை’ ‘கிரேக்கர்களையும்,’ ‘பெயரில்லாத விலங்கு’ ‘உரோமையர்களையும்’ குறிக்கிறது. தொன்மை வாய்ந்த மானிட மகன் ஆண்டவராகிய இயேசு. அனைத்து அரசுகளும் அழிந்த பின்னர் ஆண்டவரே ஆட்சி செய்கிறார். கடவுளின் ஆட்சி முடிவுறாத ஆட்சியாக இருக்கிறது.

ஆக, கடவுளின் ஆட்சியும், நம் தலைமுறையும், இறைவார்த்தையும் அழிவற்றவையாக இருக்கின்றன. அழிந்து போகின்றவை அழியாதவற்றை அடையாளம் காட்டுகின்றன.

நிற்க.

‘அறிகுறிகளும் அடையாளங்களும் மனித வாழ்வில் முதன்மையான இடம் வகிக்கின்றன. ஒரே நேரத்தில் உடலும் ஆவியுமாக இருக்கிற மானிடர்கள் கண்ணுக்குப் புலனாகிற அடையாளங்கள் வழியாகக் கண்ணுக்குப் புலப்படாத ஆன்மிகத் தளங்கள் பற்றிய அறிவைப் பெறுகிறார்கள். சமூக விலங்குகளாக இருக்கிற மனிதர்கள் மொழி, செய்கைகள், செயல்பாடுகள் வழியாக ஒருவர் மற்றவரோடு தகவல்பரிமாற்றம் செய்கிறார்கள். இவற்றின் வழியாகவே கடவுளோடும் உறவாடுகிறார்கள்’ என்று கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (காண். எண் 1146).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment