இன்றைய இறைமொழி
புதன், 29 நவம்பர் 2023
பொதுக்காலம் 34-ஆம் வாரத்தின் புதன்
தானியேல் 5:1-6, 13-14, 16-17, 23-28. லூக்கா 21:12-19
வாழ்வின் எச்சரிக்கைகள்
இளைஞன் ஒருவன் தன் விலைமிகு ஃபெராரி கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு மலைப்பக்கம் சென்றான். திடீரென, ‘ஏய் … மாடு!’ என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். இளவல் ஒருத்தி, அவன் காரை நோக்கிக் கையை நீட்டி, ‘ஏய் … மாடு!’ என்று கத்திக் கொண்டிருந்தாள். ‘நானா … நானா .. மாடு … நீதான் மாடு!’ என்று கண்ணாடியை இறக்கிக் கொண்டு கத்த முனைந்தவன் சில நொடிகளுக்குள் எதிரில் நின்ற மாடு ஒன்றின்மேல் மோதி தன் வாகனத்தைப் பாழாக்கிக் கொண்டான். நின்றிருந்தவள், ‘ஏய் … மாடு இருக்கிறது! கவனமாகப் போ!’ என எச்சரித்தாள். ஆனால், சென்றவனோ, அவள் தன்னைத்தான், ‘மாடு’ எனக் கடிவதாக நினைத்துக்கொண்டதால் எச்சரிக்கையை நிராகரித்தான்.
வாழ்வின் எச்சரிக்கைகள் நம்மைச் சுற்றி வலம் வந்துகொண்டே இருக்கின்றன. எச்சரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களையே தயார்படுத்தி வருகின்ற ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாதவர்கள் அல்லது நிராகரிப்பவர்கள் தங்களையே பாழ்படுத்திக்கொள்கின்றனர்.
இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் வாழ்வின் எச்சரிக்கைகளைத் தாங்கி நிற்கின்றன.
முதல் வாசகத்தில், பாபிலோனிய அரசர் நெபுகத்னேசர் தன் மனைவியருடன் இணைந்து விருந்து கொண்டாடுகின்றார். விருந்தில் அவர்கள் பயன்படுத்தும் பாத்திரம் அனைத்தும் ஆண்டவருடைய ஆலயத்தின் பாத்திரங்கள். நெபுகத்னேசர் மற்றும் விருந்தினர்களின் கைகளில் ஆலயத்தின் பாத்திரங்கள் மதுப் பாத்திரங்களாக மாறி நிற்க, அங்கே தோன்றுகின்ற ஒரு மனிதனுடைய கைவிரல்கள், அரண்மனையின் உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே – அதாவது, அனைவருக்கும் தெரியும் வண்ணம் – எழுதத் தொடங்குகின்றன.
‘நீர் தராசில் நிறுக்கப்பட்டீர். எடையில் மிகவும் குறைந்துள்ளீர்’ என்று ஆண்டவராகிய கடவுள் அவரை எச்சரிக்கின்றார். நெபுகத்னேசர் அரசருக்கு வழங்கப்படும் எச்சரிக்கை அவர் செய்த தவறுக்காக அவருக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு நேர்முகமான எச்சரிக்கை அளிக்கின்றார். அதாவது, தம்மைப் பின்பற்றும் சீடர்கள் பெறுகின்ற துன்பங்களை முன்னறிவித்து, அவர்கள் விழிப்போடு நடந்துகொள்ள அறிவுறுத்துகின்றார். இந்த எச்சரிக்கை அவர்களுடைய தவறுக்காகக் கிடைக்கும் தண்டனை பற்றியது அல்ல. மாறாக, அவர்கள் மேற்கொண்ட தெரிவுக்காக அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய துன்பம் பற்றிய எச்சரிக்கை.
முதல் வாசகத்தின் எச்சரிக்கை, வருகின்ற ஆபத்தைக் குறிப்பதாக இருக்கிறது. தம் சீடர்கள் எதிர்கொள்ள வேண்டிய இரண்டு பிரச்சினைகள் பற்றி எச்சரிக்கிறார் இயேசு: (அ) துன்பம் – இயேசுவைத் தங்கள் ஆண்டவராக ஏற்றதால் உரோமை அரசு சுமத்துகிற துன்பம். (ஆ) உறவினர்களின் மறுதலிப்பும் காட்டிக்கொடுத்தலும் வெறுப்பும் – இயேசுவின்மேல் கொண்டுள்ள நம்பிக்கை குடும்பத்திலும் பிளவை உண்டாக்கும்.
பிரச்சினைகள் பற்றி எச்சரித்தவுடன், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய முறை பற்றியும் அறிவுறுத்துகிறார் இயேசு: (அ) கடவுள்தாமே நாவன்மையும் ஞானமும் அருள்வார். (ஆ) மனவுறுதியோடு இருக்கக் கற்றுக்கொள்தல். கடவுள்மேல்கொள்ள வேண்டிய பற்றுறுதி அடிப்படையான அறிவுரையாக இருக்கிறது.
நிற்க.
இறையியல் மதிப்பீடுகளான நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு பற்றிப் போதிக்கிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘, ‘நாம் தளர்வுறுகிற நேரத்தில் நமக்குத் துணையாக இருப்பதும், தள்ளிவிடப்படும் நேரங்களில் உற்சாகம் தருவதும் எதிர்நோக்கு’ என மொழிகிறது (காண். எண் 1818)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment