இன்றைய இறைமொழி. செவ்வாய், 28 நவம்பர் 2023. அறிகுறிகளை அடையாளங்காணுதல்!

இன்றைய இறைமொழி
செவ்வாய், 28 நவம்பர் 2023
பொதுக்காலம் 34-ஆம் வாரத்தின் செவ்வாய்
தானியேல் 2:31-45. லூக்கா 21:5-11

அறிகுறிகளை அடையாளங்காணுதல்!

இன்றைய நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தில் இரண்டு நிகழ்வுகள் இருக்கின்றன: (அ) எருசலேம் கோவில் இடிக்கப்படுதல். (ஆ) உலக முடிவு பற்றிய எதிர்பார்ப்பு. லூக்கா நற்செய்தியாளர் தம் நற்செய்தியை எழுதுகிற காலத்தில் (காண். கிபி 75-85) எருசலேம் கோவில் இடிக்கப்படுகிறது. மேலும், உலக முடிவு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது. உரோமைப் படையெடுப்பு உருவாக்கிய அச்சமும் கலக்கமும் பல எதிர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. குழப்பமும் திகிலும் மேலோங்கி நிற்கின்றன.

இயேசுவின் சீடர்கள் இந்நிகழ்வுகளுக்கு எப்படி பதிலிறுப்பு செய்ய வேண்டும் என இயேசுவே முன்னுரைப்பதாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

(அ) கிறிஸ்துவே புதிய கோவில் என ஏற்றுக்கொள்தல்

கவின்மிகு கற்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ள கோவில் இடிக்கப்படும். இயேசுவின் சீடர்கள் கோவில் சார்ந்த தங்களுடைய நம்பிக்கையைச் சற்றே மாற்றி இயேசுவை மையமாக்கித் தங்களுடைய நம்பிக்கை வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

(ஆ) காலத்தின் அறிகுறிகளைத் தேர்ந்து தெளிதல்

மக்கள் ஒருவர் மற்றவரை ஏமாற்றுதலும் போர்களும் நிலநடுக்கங்களும் பஞ்சமும் கொள்ளைநோயும் அறிகுறிகள் என முன்மொழிவதோடு அவற்றைத் தேர்ந்து தெளியவும் அறிவுறுத்துகிறார் இயேசு. ஏமாந்துவிடாமல், திகிலடையாமல் வருகிற நிகழ்வுகளைச் சீடர்கள் எதிர்கொள்தல் வேண்டும். கடவுளின் வெளிப்பாடு எந்த நிகழ்விலும் இருக்கலாம் என்பதை அவர்கள் உணர்தல் வேண்டும்.

(இ) காத்திருத்தல்

‘ஆனால் முடிவு உடனே வராது!’ என்கிறார் இயேசு. ஆக, ஒருவர் தாமே முடிவைத் தேடிக்கொள்ள முயற்சி செய்வது தவறு. பொறுமையும் காத்திருத்தலும் சீடர்களின் அணிகலன்களாகத் திகழ வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், நெபுகத்னேசர் அரசர் காண்கிற கனவு ஒன்றுக்கு விளக்கம் தருகிறார் தானியேல். கனவின்படி ஆண்டவராகிய கடவுள் ஓர் அரசை நிறுவுகிறார். அது என்றுமே அழியாத அரசாகத் திகழ்கிறது. அரசரின் கனவைக் காலத்தின் அறிகுறி என உணர்கிற தானியேல் அதற்கு விளக்கம் தந்து அரசருக்குத் தேவையான தெளிவைத் தருகிறார்.

பெருந்தொற்று தொடங்கி இன்று நாம் எதிர்கொள்ளும் இயற்கைச் சீற்றம் வரை அனைத்தும் காலத்தின் அறிகுறிகளாக நம் கண்முன் நடந்தேறுகின்றன. எல்லாம் முடிந்துவிடும்! என்ற எச்சரிக்கைiயும் அவை நமக்குத் தருகின்றன.

‘எல்லாம் முடிந்துவிடும்!’ என்னும் வாக்கியம் நேர்முகமான அல்லது எதிர்மறையான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்துகிறது. நேர்முகமாக, வாழ்க்கையை முழுமையாக வாழத் தூண்டுகிறது. எதிர்மறையாக, வாழ்க்கையைப் பற்றிய சோர்வை ஏற்படுத்துகிறது.

நிற்க.

நாம் காண்கிற அனைத்தையும் ஆய்ந்து பார்த்து மனச்சான்றின் ஒளியில் தேர்ந்து தெளிய வேண்டும் எனக் கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (காண். எண்கள் 1777-82).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment