இன்றைய இறைமொழி
திங்கள், 27 நவம்பர் 2023
பொதுக்காலம் 34-ஆம் வாரத்தின் திங்கள்
தானியேல் 1:1-6, 8-20. லூக்கா 21:1-4
இரண்டு செப்புக்காசுகள்!
இன்றைய நற்செய்தி வாசக நிகழ்வு எருசலேம் ஆலயத்தில் நடைபெறுகிறது. பெண் ஒருவர் இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கைப் பெட்டியில் போடுகின்றார். அவருடைய செயலை இயேசு மிகவே பாராட்டுகின்றார்.
தன்னிடம் உள்ள இரண்டு செப்புக்காசுகளையும் போடச் செய்யும் அளவுக்கு அன்றைய சமூக அல்லது சமய நெறி இருந்தது என்று நினைக்கும்போது நமக்குச் சற்று கோபம் வரவே செய்கிறது. ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ள அனைத்துக் காசுகளையும் போடச் செய்யும் அளவுக்கு அன்றைய சமய அமைப்பு செயல்பட்டதை இயேசு கேள்விக்கு உட்படுத்தாமல், ‘காசு போடும் செயலை’ பாராட்டுவதும் நெருடலாக இருக்கிறது. ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ள காசுகளைப் போட்டுத்தான் ஓர் ஆலயமும் அதில் உள்ள குருக்களும் மேம்பட வேண்டும் என்பதை நாம் எப்படி நியாயப்படுத்த இயலும்?
நிகழ்வில் காணும் இப்பெண்ணை மூன்று சொல்லாடல்களால் அறிமுகப்படுத்துகிறார் லூக்கா:
(அ) ‘வறுமையில் வாடினார்’ – பொருளாதார வறுமை அல்லது ஏழ்மை இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது, அந்தப் பெண்ணிடம் இக்காசுகளைத் தவிர வேறு பணம் அல்லது சேமிப்பு இல்லை.
(ஆ) ‘அவர் ஒரு கைம்பெண்’ – ஏழ்மையே அவரைப் பிறரைச் சார்ந்தவராக வாழச் செய்திருக்க, கைம்பெண் என்னும் நிலை அவரை இன்னும் கையறுநிலைக்குத் தள்ளுகிறது. இயேசுவின் சமகாலத்தில் கைம்பெண்கள் நிலை சமய நிலையிலும் இரக்கத்துக்குரியதாக இருந்தது. ஏனெனில், கணவர் இறத்தல் என்பது மனைவியின் பாவத்தின் விளைவு என்றும் சிலர் எண்ணினர்.
(இ) ‘தன்னிடம் பற்றாக்குறை இருந்தும் தன்னிடம் உள்ள அனைத்தையும் காணிக்கையாகப் போட்டார்’ – தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் தன்னிடம் வைத்திருந்தது மிகவும் சொற்பமான பணம். ஏனெனில், ஒரு காசு என்பது 1 தெனாரியத்தில் 128-இல் ஒரு பகுதியாகும்.
‘பற்றாக்குறை‘ என்பது மனம் சார்ந்ததே அன்றி, பணம் சார்ந்தது அல்ல என நமக்கு இந்த ஒற்றைச் செயலால் சொல்லிவிட்டாள். ‘போதும்’ என்றால், இதுவே நமக்குப் போதும்! ‘போதாது!’ என்றால், எதுவுமே நமக்குப் போதாது! பற்றாக்குறை இல்லாத மனம் அனைத்தையும் இழக்கத் துணியும். வெறுங்கையராக நிற்கின்றார் கைம்பெண்.
பணம் என்றால் என்ன? என்னிடம் உள்ள ஒன்றை இன்னொற்றாக மாற்றி மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள உதவுவதே பணம். தனக்கென உள்ளதை, தன்னிடம் உள்ளதை இன்னொன்றாக மாற்றி – காணிக்கையாக மாற்றி, கடவுளுக்குக் கொடுத்து – அதன் மதிப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார். கைம்பெண் தன் பணத்தைக் கடவுளுக்குக் கடன் கொடுத்து அமர்ந்தாள். தன் செப்புக் காசுகளின் மதிப்பைத் தங்கக் காசுகள் எனக் கூட்டினாள்.
லூக்கா நற்செய்தியின் பின்புலத்தில் இந்நிகழ்வைப் பார்த்தால், பணம் என்பது சீடத்துவத்துக்கான தடை. ஆக, தனக்குள்ள அனைத்தையும் அவர் இழக்கத் தலைப்பட்டதால் சீடத்துவத்துக்கான முன்மாதிரியாக விளங்குகின்றார். மேலும், ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை’ என்று இயேசு பற்றற்ற நிலையில் இருந்தது போல, இப்பெண்ணும் அதே நிலையை ஏற்கின்றார். மலைப்பொழிவில் இயேசு சொல்வது போல, ‘அன்றைய நாளைப் பற்றிக் கூட’ அவர் கவலைப்படவில்லை. இயேசுவின் போதனையை அறிந்து செயல்படுத்துபவராக இருக்கின்றார்.
இந்த நிகழ்வு தரும் பாடம் என்ன?
‘மிகுதியிலிருந்து போடுவது’ மற்றும் ‘எல்லாவற்றையுமே போடுவது’ என்று கொடுப்பதில் இரு வகை உண்டு. இந்நிகழ்வில் நாம் காணும் ஏழைக்கைம்பெண் இயேசுவையே குறிக்கிறது என நான் நினைக்கிறேன். இயேசு எருசலேமுக்குள் வந்துவிட்டார். அவர் தம்மையே பலியாகப் படைக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார். தமக்குள்ள அனைத்தையுமே கொடுப்பதற்காகக் காத்திருக்கிறார். இயேசுவுடைய உடலும் உயிருமே அவரிடமிருந்த இரண்டு செப்புக்காசுகள். அவை இரண்டையுமே சிலுவை என்னும் மரப்பெட்டியில் காணிக்கையாகப் போடுகிறார். அவருடைய காணிக்கைகள் எருசலேம் ஆலயத்தின் திரைச்சீலையை இரண்டாகக் கிழிக்கின்றன.
நம்மிடம் இருக்கிற ‘இரண்டு செப்புக்காசுகள்’ எவை? இவைதான் என் வாழ்வின் எல்லாம் என நாம் எவற்றை நினைக்கிறோம்? அவற்றை இழக்க நாம் தயாராக இருக்கிறோமா?
இன்றைய முதல் வாசகத்தில் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோர் நெபுகத்னேசர் அரசனுடைய காலத்தில் தாங்கள் அரசன் வற்புறுத்திய உணவை உண்டு தங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமல் தங்களுடைய கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்ததால் அவர்கள் மற்ற அனைவரையும்விட பத்து மடங்கு ஞானத்தில் சிறந்து விளங்கியதைக் காண்கிறோம். இளைஞர்கள் எளிதானவற்றை நாடுவதற்குப் பதிலாக சரியானவற்றை நாடினார்கள்.
நிற்க.
‘திருப்பலியில் அப்பம் இரசம் என்னும் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கிற நாம் அவற்றைப் படைத்தவராகிய கடவுளுக்கு நன்றி கூறுகிறோம் … காணிக்கைகள் நம் நன்றியையும் சரணாகதியையும் அடையாளப்படுத்துகின்றன’ எனக் கற்பிக்கிறது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண் 1333).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment