இன்றைய இறைமொழி. ஞாயிறு, 26 நவம்பர் 2023. எனை நீதிவழி நடத்திடுவார்!

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 26 நவம்பர் 2023
ஆண்டின் பொதுக்காலம் 34-ஆம் ஞாயிறு
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா
எசேக்கியேல் 34:11-12, 15-17. 1 கொரிந்தியர் 15:20-26, 28. மத்தேயு 25:31-46

எனை நீதிவழி நடத்திடுவார்!

நம் ஆண்டவராகிய இயேசு பிறப்பின்போது தாவீது அரசரின் மகன் என அறியப்பட்டார். கீழ்த்திசை ஞானியர், ‘யூதர்களின் அரசர்’ என வாழ்த்தி வணங்கினர். தன் அரசாட்சிக்குத் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என எண்ணிய பெரிய ஏரோது அவரைக் கொல்ல முயற்சி செய்தார். இயேசுவின் போதனைகளும் வல்ல செயல்களும் இறையாட்சியைக் குறித்துக் காட்டின. பிலாத்துவுடனான உரையாடலில் தம் அரசு இவ்வுலக ஆட்சியைச் சார்ந்தது அல்ல என முன்மொழிந்தார்.

இந்நாளில் இயேசு கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என நாம் கொண்டாடுகிறோம். அரசாட்சி முறைகள் மறைந்து மக்களாட்சி மலிந்து நிற்கும் இன்றைய நம் சூழலில், ஆட்சி செய்பவர்கள் எல்லாரும் அதிகாரத்தை மையமாக வைத்து மக்கள்மீது கொடுங்கோலாட்சி செய்யும் இக்காலத்தில், இயேசு கிறிஸ்து என்னும் அரசர் தம்மையே சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைத்துக்கொள்கிறார் என எடுத்துரைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

அரசர் அல்லது அரசர் தொடர்புடைய நேரடி சொல்லாடல்கள் மூன்றை இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம்:

(அ) அரியணையில் அமர்தல். ‘வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்’ (மத் 25:31) என்று தொடங்குகிறது நற்செய்திப் பகுதி.

(ஆ) அரசன். ‘அரசன்’ (பஸிலேயோஸ்) என்ற வார்த்தை இரண்டு வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (25:34, 40). ‘அரசர்’ என்ற வார்த்தையை நற்செய்தியாளர் நேர்மையாளர்களோடு (வலப்பக்கம் உள்ளவர்களோடு) உரையாடும் இடங்களில் மட்டுமே பதிவு செய்கின்றார். இடப்பக்கம் உள்ளவர்களோடு உள்ள உரையாடலில் அரசன் என்ற வார்த்தை இல்லை. மேலும், இருதரப்பினரும் அவரை ‘ஆண்டவர்’ என அழைக்க முடிந்தாலும், வலப்பக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர் அரசராக இருக்கின்றார்.

(இ) அரசாட்சி அல்லது அரசுரிமை. ‘அரசாட்சியை’ (பஸிலேயோ) உரிமையாக்கிக்கொள்ளுமாறு அரசர் வலப்பக்கம் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். ‘அரசாட்சி’ என்றால் என்ன என்பது இங்கே தெளிவாகக் குறிக்கப்படவில்லை என்றாலும், இந்த அரசாட்சி உலகின் தொடக்கமுதல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று என்பது மட்டும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் மூன்று சொல்லாடல்களை வைத்து இந்த நற்செய்தி வாசகத்திற்கும், இன்றைய பெருவிழாவுக்கும் தொடர்பு இருக்கிறது என முதற்கட்ட முடிவுக்கு நம்மால் வர முடிகிறது. இரண்டாம் கட்டமாக, இயேசுவே தன் வாயிலிருந்து தன்னை ‘அரசர்’ என்று சொல்வது இந்த நிகழ்வில் மட்டுமே.

இயேசுவின் ‘அரசர்’ தன்மை எப்படிப்பட்டது என்பதை இன்றைய நற்செய்தியிலிருந்து கற்றுக்கொள்கிறோம்:

1. அதிகாரம் என்பது தன்னுள்ளே ஊற்றெடுப்பது. எந்த அதிகாரம் ஒருவருக்கு உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதோ அதுவே ஒருவரை அரசர் ஆக்குகிறது. தன்னை வெல்பவர் தனக்குள் அதிகாரத்தைக் கண்டுகொள்கிறார். அதிகாரம் என்பது மற்றவர்கள்மேல் செலுத்துவதல்ல. அது தன்னை வெல்வதில்தான் அடங்கியிருக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:20-26,28), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் இறுதிப் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை, வழிபாட்டில் பிறழ்வு, சிலைகளுக்குப் படைத்தவை, பாலியல் பிறழ்வு போன்ற மேய்ப்புப்பணி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வரையறுத்த பவுல், இறுதியாக, இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லை என்று வாதிட்ட சிலருக்கு விடையளிக்கும் நோக்குடன் இறுதிக்கால நிகழ்வுகள் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றார். இறந்தோர் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒன்று. கிறிஸ்து வரும்போது இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் உயிர்பெறுவர். ‘கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிடுவார்.’ எல்லாவற்றுக்கும் மேலாக, கடைசிப் பகைவனாக இருக்கின்ற இறப்பும் அழிக்கப்படும். இறப்பு அழிக்கப்படுவதன் வழியாக, படைப்பு தன் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டுப் புதுப்பிக்கப்படும். அனைத்தின் மேலும் கிறிஸ்து ஆட்சி செலுத்துவார். இதனால், ‘கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.’ கிறிஸ்து செய்த மீட்புச் செயல், இறப்பின்மேல் வெற்றி, படைப்பில் ஏற்பட்ட ஒழுங்குநிலை, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மீண்டெழுந்த நெருக்கம் அனைத்தையும், ‘கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்’ என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாகச் சொல்லிவிடுகின்றார். ஆக, பாவம் அழித்த அமைதியையும், ஒழுங்கையும் கிறிஸ்து மறுபடியும் கொண்டுவருகின்றார்.

2. சின்னஞ்சிறியவர்களின் சகோதரர். தம் அதிகாரத்தை அல்லது அரசதன்மையை தம்மைவிட சின்னஞ்சிறியவர்களோடு ஒன்றிணைப்பதில் வரையறுக்கின்றார். ஆறு சொல்லாடல்கள் வழியாக சின்னஞ்சிறியவர்களைக் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த ஆறு சொல்லாடல்களுமே அரசத்தன்மைக்கு எதிர்மறையானவை: ‘பசி,’ ‘தாகம்,’ ‘ஆடையின்மை,’ ‘அந்நியம்,’ ‘நோய்,’ ‘சிறை.’ அரசனுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாத ஆறு சொல்லாடல்களைக் கையாண்டு தன் அரசத்தன்மையை வரையறுக்கின்றார் இயேசு. ‘பசித்திருப்போர்,’ ‘தாகமுற்றோர்,’ ‘ஆடையின்றி இருப்போர்,’ ‘அந்நியர்,’ ‘நோயுற்றோர்,’ ‘சிறையிலிருப்போர்’ என அனைவரையும் தம் சகோதர, சகோதரிகள் என்று சொல்வதன்வழியாக அவர்களும் அரசர்கள் என வரையறுக்கின்றார் இயேசு.

3. சின்னஞ்சிறிய செயல்களைச் செய்பவர்கள் அரசர்கள். இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 34:11-12,15-17), எருசலேமின் அழிவுக்கான காரணம் என்ன என்பதை அடிக்கடி நினைத்துப் பார்க்கும் இறைவாக்கினர் எசேக்கியேல், ‘இஸ்ரயேலர்களின் ஆயர்களாகிய’ தலைவர்களே எருசலேமின் அழிவுக்கு முக்கியக் காரணம் என்று பழிசுமத்துகிறார். ஏனெனில், அவர்கள் தங்கள் மக்களை மேய்ப்பதற்குப் பதிலாக, அவர்களை மேய்ந்தனர். வளர்ச்சிக்கான பாதையில் அவர்களை இட்டுச் செல்லாமல் அழிவுக்குரிய சிலைவழிபாட்டுப் பாதையில் அவர்களை இட்டுச் சென்றனர். இன்றைய வாசகத்தில் நல்ல ஆயன் என்னும் புதிய தலைவரைப் பற்றி எசேக்கியேல் பேசுகின்றார். இந்த நல்லாயன் ஆண்டவராகிய கடவுளே.

நல்லாயனாகிய ஆண்டவராகிய கடவுள் மூன்று பணிகளைச் செய்கின்றார்: ஒன்று, சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் சென்று கூட்டிச் சேர்க்கின்றார். இங்கே, ‘சிதறுண்ட ஆடுகள்’ என்னும் சொல்லாடல் பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டு அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைக் குறிக்கிறது. ஆண்டவராகிய கடவுள் அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதாகச் சொல்வது அவர்கள் விரைவில் பெறவிருக்கின்ற விடுதலை வாழ்வைக் குறிக்கின்றது. இரண்டு, காயத்திற்குக் கட்டுப் போட்டு, நலிந்தவற்றைத் திடப்படுத்துகின்றார். சொந்த நாட்டிலேயே அலைந்து திரிந்தவர்களும், பாபிலோனிய அடிமைத்தனத்தால் சிதைந்து போனவர்களும் இங்கே அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆண்டவராகிய கடவுள், அவர்களின் உடல் காயங்களுக்கும், விரக்தி, சோர்வு, மரண பயம் என்னும் உள்ளத்தின் காயங்களுக்கும் மருந்திடுகின்றார். அவர்களைத் திடப்படுத்தி வலுவூட்டுகின்றார். மூன்று, நீதியுடன் மேய்த்து, நீதி வழங்குகின்றார். ‘கொழுத்ததையும் வலிiயுள்ளதையும் அழிப்பேன்’ என்னும் எச்சரிக்கை, இஸ்ரயேலின் ஆயர்கள் தங்கள் ஆடுகளைப் பேணிக்காக்கத் தவறியதற்காக, கடவுள் அவர்களுக்கு நீதியுடன் அருளும் தண்டனையை அவர்கள் ஏற்றாக வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலும், ஒவ்வோர் ஆடும் வலுவற்றதாய் இருந்தாலும், அதற்குரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பது ஆண்டவராகிய கடவுளின் விருப்பமாக இருக்கிறது.

தன் அரசநிலை அல்லது அரசாட்சி சின்னஞ்சிறியவர்கள்மேல் கொள்ளும் அக்கறையில் அடங்கியுள்ளது என்று மொழிகின்ற கிறிஸ்து அரசர், தன்னையே சின்னஞ்சிறியவர்களுள் ஒருவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார். கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும் நாம் இன்று அண்ணாந்து பார்க்க வேண்டும். சற்றே குனிந்து பார்ப்போம். நாம் அண்ணாந்து பார்த்து பிரமித்த அரசர்கள் எல்லாம் நம்மை அடிமையாக்கிவிட்டனர் அல்லது அடிமையாக்குகின்றனர். சற்றே குனிந்து நம்மையும், நமக்கு கீழ் இருப்பவர்களையும் பார்ப்போம். எல்லாரும் எழுந்துவிட்டால், யாரும் யாரையும் அண்ணாந்து பார்க்கத் தேவையில்லை.

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 23), ‘ஆண்டவர் என் ஆயர்’ என அழைக்கிற தாவீது, ‘அவர் என்னை நீதிவழி நடத்திடுவார்!’ என இறைவனுடைய நீதியை எடுத்துரைக்கிறார். சின்னஞ்சிறியவர்களோடு நாம் காட்ட வேண்டிய ஒன்றிப்பு இரக்கத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக, நீதியின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதும் நம் அரசர் கற்பிக்கும் பாடம்.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடுகிற வேளையில், நாம் ஒவ்வொருவரும் அவருடைய அரசின் இளவரசர்கள், இளவரசிகள் என்பதையும் நினைவுகூர்வோம்.

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment