இன்றைய இறைமொழி
வெள்ளி, 24 நவம்பர் 2024
பொதுக்காலம் 33-ஆம் வாரத்தின் வெள்ளி
1 மக்கபேயர் 4:36-37, 52-59. லூக்கா 19:45-48
தூய்மையாக்கப்படும் கோவில்
எருசலேம் கோவில் தூய்மையாக்கப்படும் நிகழ்வு இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்களில் தரப்பட்டுள்ளது.
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் நகரை நெருங்கி வருகின்ற இயேசு, அந்நகருக்காகக் கண்ணீர் வடிக்கின்றார். எருசலேம் நகரத்தின் மையம், தலைமை, உச்சம் என்று இருந்த கோவிலுக்குள் நுழைகின்ற இயேசு இன்று அதைத் தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் அவருடைய பாடுகளின் நிகழ்வுக்கு முன்னும், யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்திலும் நடப்பதாகப் செய்கின்றனர். எருசலேம் கோவில் தலைமைக்குருவால் நிர்வகிக்கப்பட்ட காவலர்கள்கீழ் இருந்தது. அவ்வளவு எளிதாக இயேசு உள்ளே சென்று புரட்சி செய்திருக்க வாய்ப்பில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலர் இந்நிகழ்வை ஓர் இறையியல் நிகழ்வு என்று கருதுகின்றனர். அதாவது, மெசியாவின் வருகையின்போது கோவில் தூய்மையாக்கப்படும் என்பது எபிரேய நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் நிறைவாக இயேசு கோவிலைத் தூய்மை செய்கிறார் என்றும், இயேசுவே மெசியா என்றும் முன்மொழிகின்றனர் நற்செய்தியாளர்கள்.
இன்னொரு பக்கம், இயேசுவின் காலத்தில் கோவில் அதிகாரத்தின், அடக்குமுறையின், நிர்வாகப் பிறழ்வுகளின், பேராசையின் உறைவிடமாக இருந்தது. கோவிலின் பெயரால் வெகுசன மக்கள்மீது வரி சுமத்தப்பட்டது. தலைமைக்குருவே கோவிலின் தலைவராக இருந்ததால், அரசியல்தளத்திலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதே வேளையில், ஆண்டவராகிய கடவுள் வாழும் தளம் என்றும், அவருடைய பெயர் அங்கே குடிகொள்கிறது என்றும் இஸ்ரயேல் மக்கள் நம்பியதால் கோவில் அவர்களுடைய உணர்வுகளில் பதிந்த ஒன்றாகவும் இருந்தது.
ஆகையால்தான், இயேசு கோவிலைத் தொட்டவுடன் அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைக்கிறார்கள். இறுதியில் இதையே ஒரு குற்றச்சாட்டாகவும் அவர்மேல் சுமத்துகிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசு கோவிலுக்குள் நுழைந்து அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தோரை விரட்டியடிக்கின்றார். இரண்டாம் பகுதியில், அவருடைய எதிரிகள் அவரை ஒழித்துவிட நினைத்தாலும் செய்வதறியாது நிற்கின்றனர். ஏனெனில், மக்கள் அனைவரும் இயேசுவைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
(அ) நோக்கப் பிறழ்வு
கோவில் இறைவேண்டலின் வீடாக இருக்க வேண்டிய நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால், அந்த நோக்கம் பிறழ்வுபட்டு, கள்வர் குகையாக, இருள் நிறைந்ததாக, பேராசையும் அநீதியும் நிறைந்த இடமாக மாறுகிறது. நாம் அனைவரும் ஆண்டவராகிய கடவுள் குடிகொள்ளும் கோவில் என்கிறார் பவுல். கோவில் என்னும் நம் உடலின் நோக்கம் இறைவன் குடிகொள்வது என்றால், அந்த நோக்கம் பிறழ்வுபடாமல் காக்கப்படுகிறதா?
(ஆ) போதனையும் போதகரும்
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார் என்று பதிவு செய்கின்றார் லூக்கா. இயேசுவின் போதனையைக் கேட்கின்ற மக்கள் அவரைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர், அதாவது, அவரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில், இயேசுவின் போதனைக்கும் அவருடைய வாழ்வுக்கும் இடையே எந்தவொரு வேறுபாடும் இல்லை. இன்று நாம் இறைவார்த்தையைப் போதிக்கிறோம், அல்லது கேட்கிறோம். நம் வாழ்வில் முரண்கள் இருப்பது ஏன்?
(இ) அறச்சினம்
இரக்கம், மன்னிப்பு, பரிவு என்று இயேசு ஒரு பக்கம் போதித்தாலும், தவறுபவர்களை அவர் பொறுத்துக்கொண்டாலும், தவறுகளை அவர் பொறுத்துக்கொள்வதில்லை. அவருடைய அறச்சினம் நமக்கு வியப்பளிக்கிறது. தவறுகளோடு சமரசம் செய்துகொண்டு அவற்றைப் பொறுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தவறுகளைத் திருத்த முயற்சி செய்கின்றார். நான் என்னில் காணும் தவறுகளோடு சமரசம் செய்துகொள்கிறேனா? அல்லது திருத்த முயற்சி செய்கிறேனா?
இன்றைய முதல் வாசகத்தில், தலைமைக்குரு மத்தத்தியா தலைமையில் எருசலேம் கோவில் தூய்மையாக்கப்படுகிறது. செலூக்கிய அரசர் அந்தியோக்கு எபிப்பான் திருக்கோவிலின் பீடத்தின்மேல் பன்றி இறைச்சியைப் படைத்து அதைத் தீட்டாக்கினார். திருச்சட்ட நூல்களை எரித்தார். விருத்தசேதனத்தைத் தடை செய்தார். நம்பிக்கையாளர்கள்மேல் எண்ணற்ற துன்பங்களை வருவித்தார். தீட்டுப்பட்டிருந்த திருக்கோவிலைத் தூய்மையாக்கி அதை மறுஅர்ப்பணம் செய்து விழா எடுக்கிறார் மத்தத்தியா. இந்த விழாவே ஹனுக்கா என அழைக்கப்படுகிறது.
நம் உடல், உள்ளம் என்னும் கோவில் தீட்டுப்பட்டாலும் அதைச் சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இறைவனோடு ஒப்புரவாகும்போது நம் பாவச்செயல்களைவிட்டு மனந்திரும்பும்போது நம்மால் மீண்டும் புதிய நிலைக்கு எழ முடியும்.
நிற்க.
‘கடவுளுக்கு ஏற்புடையவராதல்’ பற்றிப் பேசுகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘, ‘கடவுளுக்கு ஏற்புடையவராதலில் இரு பரிமாணங்கள் உள்ளன: ஒன்று, பாவத்திலிருந்து கடவுளை நோக்கிய தனிமனிதரின் பயணம். இரண்டு, கடவுளிடமிருந்து மனிதரை நோக்கி வரும் மன்னிப்பு என்னும் பயணம். மனித வாழ்வின் நிறைவு என்பது நம் புனித நிலையே’ (காண். எண் 2018, 2029)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment