இன்றைய இறைமொழி. புதன், 22 நவம்பர் 2023. எதிர்நோக்கால் தாங்கிக் கொள்தல்

இன்றைய இறைமொழி
புதன், 22 நவம்பர் 2023
பொதுக்காலம் 33-ஆம் வாரத்தின் புதன்
2 மக்கபேயர் 7:1, 20-31. லூக்கா 19:11-28

எதிர்நோக்கால் தாங்கிக் கொள்தல்

‘எதிர்நோக்கு, துணிவு, ஊக்கம் சீடத்துவ வாழ்வின் பண்புகள் ஆகும்.’

இன்றைய முதல் வாசகத்தில் ஒரு தாயும் ஏழு புதல்வர்களும் தங்களுடைய நம்பிக்கை வாழ்வுக்குச் சான்று பகரும் நிகழ்வை வாசிக்கிறோம். ‘எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்ட போதிலும், ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக்கொண்டார்’ எனத் தொடங்குகிறது நிகழ்வு.

இஸ்ரயேல் சமூகத்தில் குழந்தைப் பேறு என்பது ஆண்டவருடைய கொடையாகக் கருதப்பட்டது. நீடிய ஆயுள் என்பது அவருடைய ஆசீர் எனக் கருதப்பட்டது. நிகழ்வில் நாம் காணும் தாய் ஏழு ஆண்மக்களைப் பெற்றிருக்கிறார். ஆண்டவருடைய கொடைகளை நிறைவாகப் பெற்றிருக்கிறார். ஆனால், அவர்களுடைய குழந்தைகள் அவருடைய கண் முன்னாலேயே குறைவான ஆயுளுடன் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகிக் கொலை செய்யப்படுவதைக் காண்கிறாள். அவருக்கு ஆறுதல் தருவது அவர் பெற்றிருக்கிற எதிர்நோக்கே. அதாவது, நீடிய ஆயுள் என்பது இவ்வுலகையும் தாண்டிச் செல்லக் கூடியது என்பதைத் தன்னுடைய நம்பிக்கைக் கண்களால் உணர்ந்தவராக இருக்கிறார்.

பெயரில்லாத இந்தத் தாய் பெற்றிருந்த மூன்று பண்புகளை ஆசிரியர் பின்வருமாறு பதிவுசெய்கிறார்: (அ) நம்பிக்கையால் அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக்கொண்டார். (ஆ) பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் கொண்டிருந்தார். (இ) தன் மகன்களுக்கு, குறிப்பாக இளைய மகனுக்கு, ஊக்கம் தந்தார்.

எதிர்நோக்கு, துணிவு, ஊக்கம் இவை இருந்தால் எத்தகைய தீங்கையும் எதிர்கொள்ளலாம் எனக் கற்றுத் தருகிறார் மக்கபேயர் நூலில் நாம் காணும் தாய்.

நற்செய்தி வாசகத்தில்மினா எடுத்துக்காட்டை’ வாசிக்கிறோம். இதே உவமையை தாலந்து உவமை என வரையறுப்பதுடன், விண்ணரசு பற்றிய உவமை அது என எழுதுகிறார் மத்தேயு. தாலந்தைவிட மினா மதிப்பில் குறைவானது. சாமானியரும் புரிந்துகொள்ளுமாறு உவமையைத் தகவமைக்கிறார் லூக்கா.

நிகழ்வின்படி பத்து பேருக்குத் தலா ஒரு மினா என்று பிரித்துக்கொடுக்கிறார் தலைவர். மத்தேயு நற்செய்தியில் தாலந்துகள் வழங்கப்படுவதிலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது – ஐந்து, இரண்டு, ஒன்று. மூன்று பணியாளர்களிடம் கணக்குக் கேட்கப்படுகிறது. மூன்றாவது பணியாளர், ‘இதோ உமது மினா!’ என்று கைக்குட்டையில் தான் முடிந்து வைத்திருந்த மினாவை எடுத்து நீட்டுகிறார். அவரைக் கடிந்துகொள்கிற தலைவர் அவரைத் தண்டிக்கிறார். அவரிடமிருந்த மினா பத்து மினாக்கள் பெற்றிருந்தவருக்குக் கொடுக்கப்படுகிறது.

தம் தலைவரைப் பற்றிய முற்சார்பு எண்ணம், முயற்சி எடுப்பதற்கு அச்சம் என்னும் காரணங்களால் மினாவைப் பெருக்க இயலாத நிலையில் இருக்கிறார் இவர்.

எதிர்நோக்கு, துணிவு, ஊக்கம் இவரிடம் குறைவாக இருந்ததால் இவர் மினாவைப் பெருக்கவில்லை என்றும் பொருள்கொள்ளலாம்.

லூக்கா நற்செய்தியில், இறையாட்சிக்கான நேரடியான உவமையாக இது இல்லை என்றாலும், சீடர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கின்ற பாடமாக இது இருக்கிறது.

‘எதிர்நோக்கு, துணிவு, ஊக்கம் சீடத்துவ வாழ்வின் பண்புகள் ஆகும்.’

நிற்க.

‘நம்பிக்கைக்கான விடாமுயற்சி’ பற்றிப் பேசுகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘, நம் நம்பிக்கை தொடர்ந்து பெருகுவதுடன் எதிர்நோக்கும் துணிவும் ஊக்கமும் உடையவர்களாக நாம் விளங்கவேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது (காண். எண் 162)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment