இன்றைய இறைமொழி
செவ்வாய், 21 நவம்பர் 2023
பொதுக்காலம் 33-ஆம் வாரத்தின் செவ்வாய்
2 மக்கபேயர் 6:18-31. லூக்கா 19:1-10
சக்கேயுவும் எலயாசரும்
‘சக்கேயுவின் வேகமும் எலயாசரின் துணிவும் நம்பிக்கைப் பயணத்துக்கான பாடங்கள்.’
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்முன் இரண்டு கதைமாந்தர்களைக் கொண்டுவருகிறது: சக்கேயு, எலயாசர். இன்று அன்னை கன்னி மரியா காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வையும் நினைவுகூர்கிறோம். அன்னை கன்னி மரியாவின் வேகமும் துணிவும் நற்செய்திப்பாடங்களில் மிளிர்கின்றன.
‘சக்கேயு பார்க்க விரும்பினார்,’ ‘சக்கேயு குட்டையாய் இருந்தார்’ என்ற இரண்டு சொல்லாடல்கள் வழியாக சக்கேயுவை அறிமுகம் செய்கிறார் லூக்கா. ‘சக்கேயு’ என்னும் சொல் ‘சக்கார் யாவே‘ (‘கடவுள் நினைத்தார்’) அல்லது ‘சக்கா யாவே‘ (‘கடவுள் மட்டும்’) என்னும் இரண்டு சொல்லாடல்களிலிருந்து வந்திருக்கலாம்.
கடவுள் சக்கேயுவை நினைத்தார். ஏனெனில், இயேசு அவரை நிமிர்ந்து பார்க்கிறார்.
கடவுள் மட்டுமே போதும் என்று சக்கேயு நினைத்தார். ஆகையால்தான், இயேசு வந்தவுடன் அவருக்காகத் தம் வீட்டில் உள்ள அனைத்தையும் இழக்கத் துணிகிறார்.
சக்கேயு மூன்று நிலைகளில் குறை உள்ளவராக இருக்கிறார்: (அ) குட்டையாக இருக்கிறார். ஆக, உடல்சார்ந்த குறை. (ஆ) மக்களின் கேலிப்பேச்சுகளால் உள்ளத்தில் குறையுற்றவராக இருந்தார். (இ) தன் சொந்த மக்களுக்கு எதிராக வரி வசூலித்ததால் பாவி எனக் கருதப்பட்டுக் கடவுளிடமிருந்து தூரமாக இருந்தார்.
இவருடைய குறை மூன்று நிலைகளில் நிறைவுபெறுகிறது: (அ) இயேசு அவருடைய இல்லத்திற்கு வந்து அவரோடு தங்குகிறார். (ஆ) இயேசு சக்கேயுவுக்கு மீட்பைத் தருகிறார். மீட்பு இன்றே இப்போதே நடந்தேறுகிறது. (இ) இழப்பதன் வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்கிறார்.
மரத்தில் இலைகளுக்கு நடுவே நின்றிருந்த சக்கேயு எல்லார் முன்னிலையிலும் எழுந்து நிற்கிறார். சக்கேயுவின் வேகம் அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றுகிறது. குறைகள் நிறைகளாக மாறக் காரணம் அவருடைய வேகம்.
முதல் வாசகத்தில், எலயாசர் என்னும் கதைமாந்தர்பற்றி வாசிக்கிறோம். தலைசிறந்த மறைநூல் அறிஞர், வயது முதிர்ந்தவர், மாண்புறு தோற்றம் உடையவர் என அறிமுகம் செய்யப்படுகிற இவர் பன்றி இறைச்சி உண்ணுமாறு வற்புறுத்தப்படுகிறார். ‘உண்பது போல நடித்தால் போதும்!’ என்று இவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதாவது, அரசரைத் திருப்திப்படுத்துமாறு நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அப்படிச் செய்வதற்கு மறுக்கிறார் இவர்.
ஏனெனில், தன் செயல்பாடு ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை முன்னுரைக்கிறார்: (அ) தன் வயதுக்குரிய முதிர்ச்சியான கண்ணியமான செயல்பாட்டை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். (ஆ) கடவுளைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலாக அரசரைத் திருப்திப்படுத்துவதாக மாறிவிடும். நிலையான பரிசை உதறித்தள்ளிவிட்டு நிலையற்ற இன்பத்தைப் பற்றிக்கொண்டார் என்னும் அவப்பெயர் ஏற்படும். (இ) இளையோர் இதைப் பற்றிக் கேள்விற்றால் அவர்கள் இவரைக் குறித்து இடறல்படுவார்கள்.
இவ்விளைவுகளை முன்னுணர்ந்தவராக, பன்றி இறைச்சியை உண்ண மறுத்து, சித்திரவதைக் கருவி நோக்கி நடக்கிறார்.
‘சக்கேயுவின் வேகமும் எலயாசரின் துணிவும் நம்பிக்கைப் பயணத்துக்கான பாடங்கள்.’
நிற்க.
‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ அன்னை கன்னி மரியாவைக் கடவுள் முன்குறித்து வைத்துத் தேர்ந்துகொண்டார் என மொழிகிறது (காண். எண் 488).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment