இன்றைய இறைமொழி. செவ்வாய், 14 நவம்பர் 2023. பயனற்ற பணியாளர்கள்.

இன்றைய இறைமொழி
செவ்வாய், 14 நவம்பர் 2023
பொதுக்காலம் 32-ஆம் வாரத்தின் செவ்வாய்
சாலமோனின் ஞானம் 2:23-3:9. லூக்கா 17:7-10.

பயனற்ற பணியாளர்கள்

‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ என்று சொல்வது அகவிடுதலையின் வெளிப்பாடு.

தம் சீடர் யார் என்பதைப் பல்வேறு உருவகங்கள் வழியாக – ‘விழித்திருக்கும் பணியாளர்,’ ‘பொறுப்பாளர்,’ ‘கோபுரம் கட்டுபவர்,’ ‘போருக்குச் செல்லும் அரசர்’ – எடுத்துரைத்த இயேசு, இன்றும் ஓர் உருவகத்தைத் தருகிறார் இயேசு: ‘பணியாளர்.’

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் பணியாளர் ஏற்கெனவே நிறையப் பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார். இல்லம் திரும்புகிற வீட்டுத் தலைவர் பணியாளரைப் பாராட்டுவதற்குப் பதிலாக, அல்லது அவருக்கு ஓய்வு தருவதற்குப் பதிலாக அவருக்கு மீண்டும் பணியைத் தருகிறார். இந்தப் பணியாளர் தம் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். ‘நான் பயனற்ற பணியாளர். என் கடமையைத்தான் செய்தேன்’ என வழிநடக்க வேண்டும்.

‘பயனற்ற பணியாளர்’ என்னும் சொல்லாடலின் பொருள் என்ன?

(அ) புனித யோசேப்பு ஆண்டை அறிமுகம் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூது மடலில், யோசேப்பு ‘பயனற்ற தந்தையாக மாறினார்’ என மொழிகிறார். வகுப்பறைக்குள் நுழைகிற ஓர் ஆசிரியர் ஏற்கெனவே மாணவர்கள் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாக இருந்தால், அவர்கள்முன் பயனற்ற ஆசிரியராக உணர்கிறார். தந்தையாகிய கடவுளே இயேசுவை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்ததால், யோசேப்பு பயனற்ற தந்தையாக தன்னை உணர்கிறார். ஆக, என் பணி தேவையில்லை என உணர்பவர் பயனற்ற பணியாளர்.

(ஆ) பயனற்ற பணியாளர் தன் எந்தப் பலனோடும் ஒட்டிக்கொள்வதில்லை. ‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே!’ எனக் கற்பிக்கிறது பகவத் கீதை. இயேசுவோ இன்னும் ஒரு படி போய், ‘எந்தப் பலனோடும் உன்னை ஒட்டிக்கொள்ளாதே’ எனத் தம் சீடர்களுக்குக் கற்பிக்கிறார். ஏனெனில், ‘பலனை எதிர்பார்க்கிற நிலையில்’ நான் பெறுபவராகவும் இன்னொருவர் கொடுப்பவராகவும் இருக்கிறார். கொடுப்பவர்-பெறுபவர் வேறுபாடு ஏற்றத்தாழ்வை உருவாக்குவதோ, ஒருவர் மற்றவருக்குக் கடன்பட வைக்கிறது. ஆனால், கடன்களிலிருந்து விடுதலை பெற்றவர் பயனற்ற பணியாளர்.

(இ) பயனற்ற பணியாளர் அடுத்தடுத்த பணிகள் நோக்கி நகர்கிறார். ஏனெனில், அவர் தன் வரையறையை உணர்ந்தவராக இருக்கிறார். தனக்கு வர வேண்டிய கூலியைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டுமே தவிர, தனக்கு வர வேண்டிய பாராட்டு பற்றி அல்ல.

‘பயனற்ற பணியாளர்’ உருவகத்தை நம் வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

(அ) நாம் செய்கிற பல செயல்களுக்குப் பயனை எதிர்பார்ப்பதோடு பாராட்டையும் அங்கீகாரத்தையும் விரும்புகிறோம். ஏனெனில், இவற்றின் வழியாகவே நம் இருத்தலின் பொருளை நிர்ணயம் செய்கிறோம். இப்படிச் செய்யும்போதெல்லாம் நம் வாழ்க்கையின் இயக்கத்தை மற்றவர்களின் கைகளில் கொடுத்துவிடுகிறோம். சீடத்துவம் என்பது ‘என் வாழ்க்கை, என் கையில்’ என வாழ்வது. பணியாளர் தலைவருடைய கைகளில் இருந்தாலும், தன் விருப்பப்படி தலைவர் அவரைப் பயன்படுத்தினாலும் பணியாளர் தன் வாழ்க்கையின்மேல் ஆற்றல் கொண்டிருக்கவே செய்கிறார். என் வாழ்க்கை எனக்குரியது என்னும் பொறுப்புணர்வோடு வாழ வேண்டியது முதல் பாடம்.

(ஆ) வாழ்க்கை நம்மேல் அடுத்தடுத்த கடமைகளைச் சுமத்திக்கொண்டே இருக்கிறது. ‘ஏழைகளும் வேலைகளும் என்றும் நம்மோடு இருக்கும்!’ கூடுகின்ற கடமைகள் நமக்கு வலியைத் தருகின்றன. வலிகள் இருக்கும்வரைதான் வாழ்க்கை இருக்கும். ஆக, வலிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்த வேலை என நகர்தல் நலம்.

(இ) பணியாளர் வேலைகள் செய்துகொண்டே இருந்தாலும், பாராட்டிலிருந்து விடுதலை பெற்றவராக இருப்பதுபோல, வேலைகளிலிருந்தும் தள்ளிநிற்க வேண்டும். வேலை என்பது அவருடைய கவலையாகவோ போதையாகவோ மாறிவிடக் கூடாது. ‘நான் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்!’ என்ற பரபரப்பும் கூடாது. இத்தகைய பணியாளர் தம்மிலேயே நிறைவில்லாதவர்.

இன்றைய முதல் வாசகத்தில், ‘அலகையின் பொறாமையால் சாவு வந்தது’ என மொழிகிற சாலமோனின் ஞானநூல் ஆசிரியர், இறப்பு ஒருவருக்குத் தருகிற விடுதலையைச் சுட்டிக்காட்டுகிறார்: இறப்பு நம் உழைப்பிலிருந்தும் கவலைகளிலிருந்தும் தொல்லைகளிலிருந்தும் நம்மை விடுவிக்கிறது. இறப்புக்குப் பின்னரும் தொடர்கிற வாழ்வு நாம் இவ்வுலகில் செய்யும் எல்லாச் செயல்களுக்குமான எதிர்நோக்கைத் தருகிறது.

‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ என்று சொல்வது அகவிடுதலையின் வெளிப்பாடு.

நிற்க.

‘வேலை நம்முடைய கடமை. உழைக்கிற ஒருவரே உண்பதற்குக்குரிய உரிமை பெறுகிறார். கடவுள் நமக்கு அளித்துள்ள திறமைகளை வேலையின் வழியாகவே பெருக்கிக்கொள்கிறோம். வேலையின் வழியாக நம் முழு இயல்பை அடைகிறோம். மனிதர்கள் தாங்கள் செய்கிற வேலைகளிலிருந்து தள்ளி நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ எனக் கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (எண்கள். 2427, 2428).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment