இன்றைய இறைமொழி
திங்கள், 13 நவம்பர் 2023
பொதுக்காலம் 32-ஆம் வாரத்தின் திங்கள்
சாலமோனின் ஞானம் 1:1-7. லூக்கா 17:1-6.
நம்பிக்கையின் வெளிப்பாடு
இயேசுவின் சீடத்துவப் போதனையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: ஒன்று, ஒருவர் தனிநபராக சீடத்துவத்தைத் தழுவுதல் பற்றியது. இரண்டு, ஒருவர் சீடர்குழாமின் உறுப்பினராகச் செயல்படுதல் பற்றியது. இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி, சீடர்குழுவினர் செயல்படுதல் பற்றியதாக இருக்கிறது.
முதன்முதலாக, சீடர்கள் குழுமம் நம்பிக்கையால் கட்டி எழுப்பப்பட்டதாக இருக்க வேண்டும். ‘எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்!’ என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்க, ‘கடுகளவு நம்பிக்கை இருந்தாலே அளப்பரிய செயல்கள் நடந்தேறும்’ என அறிவுறுத்துகிறார். நம்பிக்கையை மிகுதியாக்குவதற்கான வழியை இயேசு சொல்லவில்லை. மாறாக, நம்பிக்கையின் பயன்பற்றியே பேசுகிறார்.ஏனெனில், நம்பிக்கை என்பது ஒருபக்கம் கடவுளின் கொடை என்றாலும், இன்னொரு பக்கம் ஒவ்வொருவரும் அதைத் தன் முயற்சியால் வளர்த்தெடுக்க வேண்டும்.
நம்பிக்கை என்றால் என்ன? ‘தம்மை வெளிப்படுத்தும் இறைவனுக்கு மாந்தர்களாகிய நாம் கொடுக்கும் பதிலிறுப்பே நம்பிக்கை’ என நம்பிக்கையை வரையறுக்கிறது கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண் 142). ‘நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதிளூ கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’ என மொழிகிறது விவிலியம் (காண். எபி 11:1). நம்பிக்கை செயல்வடிவம் பெறாதவரை அது உயிரற்றதே என்கிறார் யாக்கோபு (காண். 2:26).
நம்பிக்கை என்பது நாம் ஞாயிறு திருப்பலிகளில் செய்யும் அறிக்கை என்று சுருக்கிக்கொள்ள முடியாது. மாறாக, இயேசுவே இறைமகன் என ஏற்றுக்கொள்வதும் ஒருவர் மற்றவரை சகோதர சகோதரிகளாகக் கருதி சமத்துவம், மாண்பு, அன்பு, பணிவிடை போற்றுவதே நம்பிக்கை என்று சொல்லலாம்.
இத்தகைய நம்பிக்கையே சீடர்களை ஒரே குழுவாகக் கட்டி எழுப்புகிறது. நம்பிக்கையால் கட்டி எழுப்பப்பட்ட குழுமத்தில் இரு பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒன்று, நம்பிக்கையில் குன்றியிருப்பவரைப் பாவத்தில் விழச் செய்வது. இரண்டு, நம்பிக்கை வேறு வாழ்க்கை வேறு என்ற அடிப்படையில் உறவுநிலைகளில் பிறழ்வுகள் கொண்டு பகைமை பேணுவது, மற்றவர்களின் குறைகளைத் திருத்த முயற்சி செய்யாத கண்டுகொள்ளாமை.
சிலைகளுக்கு படைத்தல் பற்றி கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், நம்பிக்கையில் குன்றியவர்களுக்கு இடறல்வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் (காண். 1 கொரி 8:12).
சின்னஞ்சிறியவர்களைப் பாவத்தில் இடறிவிழச் செய்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய பெரிய தண்டனையின் – கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி ஆழ்கடலில் ஆழ்த்துவது – பின்புலத்தில் இத்தவற்றின் கனத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். ‘பசித்திருப்போர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர், அந்நியர், நோயுற்றோர், சிறையிலிருப்போர்’ ஆகியோர் சின்னஞ்சிறியவர்கள் என மத்தேயு நற்செய்தியில் அழைக்கப்படுகிறார்கள் (காண். மத் 25:31-46). ஆனால், லூக்கா நற்செய்தியில் ‘சின்னஞ்சிறியோர்’ என்பது சீடர்கள் என்னும் சகோதரத்துவக் குழுவையே குறிக்கிறது (காண். 12:32). நம்பிக்கையில் குன்றியவர்களுக்கு இடறலாக இருத்தல் கூடாது என்பது முதல் பாடம்.
தொடர்ந்து, குழுமத்தில் இணைந்து வாழும் சீடர்கள் ஒருவர் மற்றவரைத் திருத்தவும் மன்னிக்கவும் தயாராக இருத்தல் வேண்டும். திருத்த இயலுபவற்றைத் திருத்தவும் திருத்த இயலாதவற்றை ஏற்று அவரை மன்னிக்கவும் வேண்டும். நம்பிக்கை வாழ்வே குழும வாழ்வின் இலக்காக இருக்கும்போது தவறுகளைத் திருத்துவதும் மன்னிப்பதும் எளிதாக அமையும்.
ஆக, சிறிதளவேனும் நம்பிக்கை கொள்தல், நம்பிக்கையில் தளர்வுற்றவர்களைத் தாங்குதல், நம்பிக்கை வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உறவுகளை நெறிப்படுத்திக்கொள்தல் ஆகியவை இயேசு வழங்கும் பாடங்களாக அமைகின்றன.
சாலமோனின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் மூன்று வகையினர் ஞானத்தைப் பெற இயலாது என எச்சரிக்கிறது: ‘வஞ்சனை செய்பவர்கள், பாவம் செய்பவர்கள், அறிவற்ற எண்ணங்கள் கொண்டிருப்பவர்.’ ஞானம் நம்மை வழிநடத்த வேண்டுமெனில் அதற்கேற்ற மனநிலை நம்மிடம் வேண்டும். பிறரன்பை நாம் வாழ்வாக்க வேண்டுமெனில், நம்பிக்கை மனநிலை வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment