இன்றைய இறைமொழி. சனி, 11 நவம்பர் 2023. செல்வம்.

இன்றைய இறைமொழி
சனி, 11 நவம்பர் 2023
பொதுக்காலம் 31-ஆம் வாரத்தின் சனி
உரோமையர் 16:3-9, 16, 22-27. லூக்கா 16:9-15

செல்வம்

‘செல்வம் என்பது வழித்துணையாக இருக்கலாமே தவிர, வழியாகவும் வழியின் இலக்காகவும் இருக்கத் தேவையில்லை.’

அர்த்தமுள்ள இந்துமதம்‘ என்னும் நூலில் கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘செல்வம்’ என்னும் சொல், ‘செல்வோம்‘ என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதாவது, நமது கைக்கு வருகின்ற ஒன்று, மீண்டும் நம் கையை விட்டுச் செல்வோம் என்ற நிலையில் இருக்கிறது. செல்வோம் என்பதே செல்வம் என மருவியது என்பது கவியரசின் கருத்து.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமையைச் சொன்ன இயேசு, அதன் தொடர்ச்சியாக, செல்வம் பற்றிப் போதிக்கின்றார். லூக்கா நற்செய்தியில் சீடத்துவத்துக்கு முதல் எதிரியாக இருப்பது செல்வம். ‘செல்வம் நமக்குத் தன்னிறைiவும் தன்மதிப்பையும் சுதந்திரத்தையும் கொடுப்பதால் எந்த மதமும் செல்வத்தை மேன்மையாகப் பேசுவதில்லை. ஏனெனில், மனிதர்கள் ஏழ்மையைப் பற்றிச் சிந்திக்கும் வரைதான் மதம் உயிர்வாழ முடியும். எல்லாரும் செல்வம் சேர்த்துவிட்டால் கடவுளை யாரும் நினைக்கமாட்டார்கள். ஆக, மதங்கள் தொடர்ந்து ஏழ்மையைப் புகழ்ந்துகொண்டே இருக்கும்’ என்கிறார் ஓஷோ. மேலும், ‘உங்கள் வீட்டுக்கு அருகில் ஓர் ஏழை இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். உங்கள் மதத்தைக் கொண்டு அவருடைய ஏழ்மையை நீக்குங்கள். அதை விடுத்து, ‘நானும் உன்னைப் போலவே ஏழையாக இருக்கிறேன்’ என்று சொல்லி அவனிடம் சென்று, ‘எனக்கு உணவு தா!’ என்று கையை நீட்டினால் அவனுடைய பளு இரட்டிப்பாகிவிடும். காய்ச்சலாகக் கிடக்கும் ஒருவனுக்கு மருத்துவர் உடல்நலம் தரவேண்டுமே தவிர, அவனிடம் சென்று, ‘எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது’ என்று அவனுக்கு அருகில் அமரக் கூடாது’ என்கிறார் ஓஷோ.

நிற்க.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘செல்வம்’ என்னும் ஒற்றைச் சொல்லை மூன்று நிலைகளில் பயன்படுத்துகின்றார் இயேசு: (அ) ‘நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்,’ (ஆ) ‘யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?’ (இ) ‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.’

முதலில், ‘நேர்மையற்ற செல்வம்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தும் இயேசு, ‘செல்வம்’ என்பது பயன்படுத்த வேண்டிய பொருள்தானே தவிர, வாழ்வின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றார். செல்வம் விரைவில் அழியக்கூடியது என்றாலும், அழியக்கூடிய செல்வத்தைக் கொண்டு அழியாத உறவுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இரண்டாவதாக, ‘உண்மைச் செல்வம்’ என்பது இறையாட்சி சார்ந்தவற்றைக் குறிக்கிறது. உண்மைச் செல்வத்தை உரிமையாக்கிக் கொள்பவர் பொய்யான செல்வத்தைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் போதனை. ‘சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவர்’ என்னும் சொல்லாடல் வழியாக, இவ்வுலகச் செல்வம் என்பது சிறியது எனவும், உண்மைச் செல்வம் என்பது பெரியது எனவும் இயேசு மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்.

மூன்றாவதாக, ‘செல்வம்’ என்பதைக் கடவுளுக்கு எதிராக முன்வைக்கின்றார் இயேசு. ‘கடவுள்’ மற்றும் ‘செல்வம்’ என்னும் இரண்டில், ஒருவர் ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவு செய்ய முடியும். ஒன்று மற்றொன்றுக்கு முற்றிலும் முரணானது. இங்கே செல்வம் ஒருவருக்குத் தன்னிறைவைத் தருவதால் கடவுளை நோக்கித் திரும்புவதற்குப் பதிலாகத் தன்னை நோக்கி அவரைத் திருப்புகிறது. எந்த ஒரு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்னும் உருவகத் தொடர் வழியாக, ‘கடவுளும் செல்வமும்’ இரு தலைவர்களாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார் இயேசு. செல்வம் தலைவராக மாறிவிடக்கூடிய நிலை சீடர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருக்கிறது.

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், ‘பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்’ என்று பதிவு செய்கின்றார் லூக்கா. ‘நேர்மையான நிலையில் இருந்தால் செல்வம் வரும். தாங்கள் செல்வராய் இருப்பதால் நேர்மையாளர்கள்’ என்று கற்பித்தனர் பரிசேயர். ஆனால், அவர்கள் தங்களிலே நேர்மையற்றவர்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

முதல் வாசகத்தில், உரோமையருக்கு எழுதுகிற திருமடலை நிறைவுசெய்கிற பவுல் தன் பணியில் உடனிருந்த அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து வாழ்த்துகிறார். மனித வளம் என்னும் செல்வமும் பணிக்கு இன்றியமையாதது என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம்.

‘செல்வம் என்பது வழித்துணையாக இருக்கலாமே தவிர, வழியாகவும் வழியின் இலக்காகவும் இருக்கத் தேவையில்லை.’

நிற்க.

‘பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக!’ என்னும் பத்தாவது கட்டளைக்கு விளக்கம் தருகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘, பொருள்சேர்க்கும் செயலுக்கு அடிப்படையாக இருக்கிற பேராசை களையப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. மேலும், ஏழையரின் உள்ளம் கொண்டவர்களாகக் கடவுளையே சார்ந்திருக்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளத் தூண்டுகிறது (எண். 2541-2547)

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment