இன்றைய இறைமொழி. வெள்ளி, 10 நவம்பர் 2023. செல்வத்தின் பயன்.

இன்றைய இறைமொழி
வெள்ளி, 10 நவம்பர் 2023
பொதுக்காலம் 31-ஆம் வாரத்தின் வெள்ளி
உரோமையர் 15:14-21. லூக்கா 16:1-8

செல்வத்தின் பயன்

அழியக்கூடிய செல்வம் அழியக்கூடிய மனிதருக்கு அழியாப் பயனைத் தரும்! செல்வத்துக்காகக் பணியாற்றிய பொறுப்பாளர் செல்வத்தையே தனக்குப் பணியாற்ற வைக்கிறார்.

செல்வர் ஒருவருடைய வீட்டுப் பொறுப்பாளர் உரிமையாளரின் சொத்துகளைப் பாழாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டபோது, உரிமையாளரின் செல்வத்தைக் கொண்டே தனக்கென பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்ளும் நிகழ்வை உவமையாகத் தருகிறார் இயேசு.

காணாமற்போன மகன் எடுத்துக்காட்டைத் தொடர்ந்து வருகிற இந்த உவமை, செல்வத்தைப் பற்றிய இயேசுவின் போதனைக்கு முன்னுரையாக இருக்கிறது. லூக்கா நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் செல்வம் சேர்த்தல் சீடத்துவத்துக்கான பெரிய தடையாகும். ஆனால், செல்வத்தால் மற்ற பயன்கள் இருக்கிறது என்பதையும், செல்வத்தைப் பயன்பாட்டுப் பொருளாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்பவர்கள் சிறந்தவர்கள் என்பதையம் இந்த உவமை நமக்குச் சொல்கிறது.

உவமையின்படி, செல்வர் ஒருவர் தன் வீட்டுப் பொறுப்பாளரின் பொறுப்பற்ற தன்மை பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பணியிலிருந்து நீக்க விரும்புகிறார். இக்கட்டான இச்சூழலைக் கையாள்வதுடன் உரிமையாளரின் நல்லெண்ணத்தையும் பெறுகிறார் பொறுப்பாளர்.

வீட்டுப் பொறுப்பாளரின் செயல்பாடுகள் எவை?

(அ) தன் கையறுநிலை உணர்கிறார்

பொறுப்பாளரைப் பணியிலிருந்து நீக்கப் போகிறார் தலைவர். பொறுப்பாளருக்கு இப்போது இரு தெரிவுகள்: உடல் உழைப்பைச் செலுத்தி (மண்வெட்டி பிடித்து) உழைப்பது, இரந்து உண்ணுவது (மற்றவர்களின் தயவில் இருப்பது). இவை இரண்டுமே தன்னால் இயலாது என்பதை ஏற்றுக்கொள்கிறார் பொறுப்பாளர்.

(ஆ) மாற்று வழி யோசிக்கிறார்

செல்வத்தால் தான் அழிகிற நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அச்செல்வத்தைக் கொண்டே தன் இருத்தலை உறுதியாக்கிக்கொள்ள நினைக்கிறார் பொறுப்பாளர். தலைவரின் வெறுப்பைச் சம்பாதித்துவிட்டார். இப்போது அதையே பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் விருப்பத்தைச் சம்பாதிக்கிறார். தலைவருக்குக் கடன்பட்டவர்களைத் தனக்குக் கடன்படுமாறு செய்கிறார்: ‘நூறு குடம் எண்ணெய் ஐம்பது’ என்றும் ‘நூறு மூடை கோதுமை எண்பது’ என்றும் மாறுகிறது.

(இ) தலைவரின் பாராட்டைப் பெறுகிறார்

தலைவரின் வெறுப்பைப் பெற்றவர் இப்போது பாராட்டைப் பெறுகிறார். செல்வம் என்பது வெறும் பயன்பாட்டுப் பொருள் என்பதை உணர்ந்ததோடல்லாமல், உடனடியாகச் செயல்பட்டுப் பிரச்சினையை எதிர்கொள்கிறார் பொறுப்பாளர். செல்வத்தால் வந்த பிரச்சினை செல்வத்தாலேயே நீங்குகிறது.

அறநெறிப் பார்வையில் நெருடலாக இருக்கிறது இந்த உவமை. ஏனெனில், வீட்டுப் பொறுப்பாளர் இறுதிவரை உரிமையாளரின் சொத்துகளைப் பாழாக்குபவராகவே இருக்கிறார். மற்றவர்களை ஏமாற்றுவதற்கும் பொறுப்பில் இருப்பவர்கள் தமக்கேற்றவாறு செயலாற்றுவதற்கும் கற்றுக்கொடுக்கும் உவமை அல்ல இது.

இந்த உவமை நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு!

பிரச்சினைகள் எழும்போது நாம் அவற்றைக் கண்டு பயப்படுகிறோம். ஆனால், தீர்க்க முடியாத பிரச்சினை என எதுவுமே இல்லை. நமக்குத் தேவையானதெல்லாம் கொஞ்சம் பொறுமையும் நிதானமும் சிந்தனையும்தான். சொத்து விடயங்களில் மட்டுமல்ல வாழ்க்கை மேலாண்மையிலும் திட்டமிடுதலும், வரவிருப்பவற்றை முன்னுணர்ந்து செயல்படுதலும் அவசியம்.

(ஆ) ஞானமும் பணமும்

‘ஞானம் நிழல்தருவது போலப் பணமும் நிழல்தரும்’ என்கிறார் சபை உரையாளர் (7:12). பணமும் ஞானமும் இணைந்து செயலாற்றுவதை நாம் இந்த உவமையில் காண்கிறோம். தன் முன்மதியைக் கொண்டு பணத்தைத் தனக்கேற்றாற்போலச் செயல்பட வைக்கிறார் பொறுப்பாளர். செல்வத்துக்காகக் பணியாற்றிய பொறுப்பாளர் செல்வத்தையே தனக்குப் பணியாற்ற வைக்கிறார்.

(இ) அழியக்கூடிய செல்வமும் அழியாத உறவுகளும்

அழியக்கூடிய செல்வத்தைக் கொண்டு அழியாத உறவுகளைச் சம்பாதிக்கிறார் பொறுப்பாளர். சொத்து அழிந்துவிடும். ஆனால், கடன்பட்டவர்களுக்கு அவர் செய்த உதவி அவர்கள் மனத்திலிருந்து அழியாது. பணத்தை நல்லெண்ணமாக மாற்றி, அவர்களுடைய உள்ளங்களில் முதலீடு செய்கிறார் பொறுப்பாளர்.

நேர்மையும் நாணயமும் சமரசம் செய்துகொள்ளக்கூடிய முதன்மையான மதிப்பீடுகள் என்றாலும், வளங்களைப் பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்திக்கொள்தல் சிறப்பு எனக் கற்றுக்கொடுக்கிறது உவமை.

இன்றைய முதல் வாசகத்தில், உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் அறிவுரைப் பகுதியை நிறைவு செய்கிற பவுல், ‘கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப் பணி‘ எனச் சொல்கிறார். கிறிஸ்துவின் பெயரை அறியாதவர்களுக்கே தான் பணி செய்தாகச் சொல்கிற பவுல், ‘வேறொருவருவர் இட்ட அடித்தளத்தின்மேல் கட்டி எழுப்ப நான் விரும்பவில்லை’ என்கிறார். ஒன்றிலிருந்து இரண்டை நோக்கி அல்ல, மாறாக, பூஜ்யத்திலிருந்து ஒன்றை நோக்கிச் செல்வதே சிறப்பு எனக் கற்றுத் தருகிறார் பவுல்.

பூஜ்ய நிலைக்குத் தள்ளப்பட்ட வீட்டுப் பொறுப்பாளர் தன் முன்மதியால் முதல்நிலைக்கு உயர்கிறார்.

நிற்க.

‘களவு செய்யாதே!’ என்னும் ஏழாவது கட்டளைக்கு விளக்கம் தருகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி,’ சொத்துகள் பொதுநன்மைக்கானவை எனவும், தனிமனித மாண்பை மையமாகக் கொண்டே சொத்துகளின் பயன்பாடு அமைய வேண்டும் எனவும் கற்பிக்கிறது (காண். எண்கள் 2450-2463).

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment