இன்றைய இறைமொழி
வியாழன், 9 நவம்பர் 2023
பொதுக்காலம் 31-ஆம் வாரத்தின் வியாழன்
எசேக்கியேல் 47:1-2, 8-9, 12. 1 கொரிந்தியர் 3:9-11, 16-17. யோவான் 2:13-22.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு, விழா
நாமே ஆலயம்!
உரோமை மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக இருக்கின்ற புனித யோவான் இலாத்தரன் பேராலயம் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையைக் கொண்டுள்ளது. திருஅவையின் நம்பிக்கை மற்றும் அறநெறி சார்ந்த கொள்கைத்திரட்டை இந்த இருக்கையில் அமர்ந்தே திருத்தந்தை வெளியிடுகிறார். இப்பேராலயம் நான்கு பாப்பிறை பேராலயங்களில் ஒன்றாகும்.
புனித மீட்பர் பேராலயம், அல்லது புனித திருமுழுக்கு யோவான் பேராலயம் என்னும் பெயர்களிலும் இப்பேராலயம் அழைக்கப்படுவதுண்டு. தொடக்ககால உரோமைத் திருச்சபையில் அனைவருக்கும் இங்குதான் திருமுழுக்கு வழங்கப்பட்டது. கான்ஸ்டான்டின் பேரரசரால் கட்டப்பட்டு, 324-ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் அவர்களால் நேர்ந்தளிக்கப்பட்டது. உலகெங்கும் உள்ள அனைத்துப் பேரலாயங்களின் தாய் ஆலயம் இது. திருத்தந்தையின் தலைமையை உணர்த்தும் இந்தப் பேராலயத்தின் நேர்ந்தளிப்புப் பெருவிழாவில் திருத்தந்தையுடனான ஒன்றிப்பும் ஒற்றுமையும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு, ‘ஆலயம்‘ என்னும் வார்த்தை பற்றிய இரு புரிதல்களை நமக்குத் தருகின்றது.
முதல் வாசகத்தில் (காண். எசே 47:1-2,8-9,12), ‘ஆலயம்’, புதிய வாழ்வின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. பாபிலோனியாவின் அடிமைத்தனத்தின்போது ஆண்டவரின் மாட்சி எருசலேம் கோவிலை விட்டு அகல்கின்றது. மக்கள் திரும்பி வந்தபோது ஆண்டவர் மீண்டும் நகருக்குள் வருகின்றார். ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளும் இடத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அனைத்துலகையும் புதுப்பிப்பதாகவும், அதற்குப் புத்துணர்வு அளிப்பதாகவும் காட்சி காண்கிறார் இறைவாக்கினர் எசேக்கியேல். எருசலேம் ஆலயத்திலிருந்து புறப்படும் தண்ணீர் ஒரே நேரத்தில் அற்புதமாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்கிறது. அற்புதம் – ஏனெனில் இது பாலைநிலமான, மேடுபள்ளங்கள் நிறைந்த இடத்திலிருந்து புறப்படுகிறது. மேலும், கணுக்கால், முழங்கால், இடுப்பு என அதன் ஆழம் கூடிக்கொண்டே வருகிறது. ஆசீர்வாதம் – ஏனெனில் இது பாயும் இடமெல்லாம் பசுமையும், செழுமையும், வளமையும் பிறக்கிறது.
இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 3), கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற திருமுகத்தின் தொடக்கத்தில், ‘கட்டடம்,’ ‘கோவில்’ என்னும் இரு சொல்லோவியங்களைக் கையாண்டு, அவர்களிடம் விளங்க வேண்டிய உறவு ஒன்றிப்பையும் தூய்மை நிலையையும் எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:13-22), ‘ஆலயம்’ என்பது ‘இடம் சார்ந்த பிரசன்னம்’ என்ற புரிதலைச் சற்றே மாற்றி, அது ‘ஆள் சார்ந்த பிரசன்னம்’ என்ற புதிய புரிதலைத் தருகின்றார் இயேசு. எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் இயேசு, தன்னுடலை ஆலயத்திற்கு உருவகப்படுத்துகிறார். ஆனால், மற்ற யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. வெளிப்புறப் பார்வையில் இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்துவதுபோலத் தெரிந்தாலும், ஆழ்ந்த புரிதலில், அவர் கோவிலுக்கு மாற்றாகத் தம்மையே முன்வைப்பதை உணர முடிகிறது.
இன்றைய நாள் நமக்குக் கொடுக்கும் செய்தி என்ன?
அ. கடவுள் நம் நடுவில் வாழ்கிறார்
கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதன் காணக்கூடிய அடையாளம்தான் ஆலயம். கடவுளுடைய உடனிருப்பு, அவர் தருகிற பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது கோவில். கோவில் பற்றிய ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன திருப்பாடல்கள். எருசலேம் கோவிலை நோக்கி ஏறிச்செல்லும்போது பாடப்படுகிற பாடல்கள் கடவுள்-மனித நெருக்கத்தையும், மனிதர்கள் ஒருவர் மற்றவர்மேல் காட்ட வேண்டிய பொறுப்புணர்வையும் எடுத்துரைக்கின்றன.
ஆ. நம் எண்ணங்கள் உயர்கின்றன
பெரிய ஆலயங்கள், பெரிய கோபுரங்கள், பெரிய தூண்கள் என என அமைந்திருக்கும் ஆலயங்களை நாம் உயர்ந்து பார்க்கும்போது நம் கண்கள் மட்டுமல்ல, நம் எண்ணங்களும் உயர்கின்றன. தாழ்வானவற்றை விடுத்து உயர்வானவற்றைப் பற்றிக்கொள்ள ஆலயங்கள் அழைப்பு விடுக்கின்றன. இன்னொரு பக்கம் ஆலயங்களுக்குள் நுழையும் நாம் அவற்றோடு ஒப்பிடப்படும்போது மிகவும் சிறியவர்கள் என்பதை உணர்கிறோம்
இ. ஆலயம் நம் ஒவ்வொருவரின் தொப்புள்கொடி
இறைவனையும் நம்மையும் இணைக்கும் தொப்புள்கொடியே ஆலயம். இதன் வழியாகவே இறையருள் நமக்குக் கிடைக்கிறது. திருமுழுக்கின்போது நாம் பெறும் உறவுப் பிணைப்பு, நாம் இறந்தபின்னும் இந்த ஆலயத்தின் வழியே தொடர்கிறது.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு நாளில், நம் பங்கு அல்லது மறைமாவட்டத்தின் ஆலயத்தின் நேர்ந்தளிப்பையும் நினைவுகூர்வோம். நாம் ஒவ்வொருவருமே கடவுளின் கோவில் என்னும் நிலையில் நம்மையே கடவுளிடம் நேர்ந்தளிப்போம்!
நிற்க.
‘மனித உடலுக்கு ஆன்மா உயிரோட்டமாக இருப்பது போல கிறிஸ்துவின் மறையுடலாகிய திருஅவைக்கு உயிரோட்டமாக இருக்கிறார் தூய ஆவியார் … தூய ஆவியாரே வாழும் கடவுளின் கோவிலாகத் திருஅவையை மாற்றுகிறார்’ என்று கற்பிக்கிறது ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி‘ (காண். எண் 797).
நாமே ஆலயம்! நமக்கோர் ஆலயம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

Leave a comment